“பசங்களா, இன்னும் ரெண்டு வாரத்துல நம்ம ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்கப் போகுது. யார் யார் என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லுங்க” நர்மதா டீச்சர் புன்னகையோடு கூற, ஆறாம் வகுப்பு ‘அ’ பிரிவு முழுவதும் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தது.
மாணவர்கள் ஆர்வமாக நடனத்திற்கும் பாட்டுக்கும் முண்டியடித்துப் பெயர் கொடுத்தார்கள். பேச்சு, நாடகம் போன்றவற்றிற்கும் வரிசையில் நின்றார்கள். ஆனால், பரணி, சாரதி, ராம், சிவா ஆகிய நான்கு பேர் மட்டும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
நர்மதா டீச்சர் அவர்களைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தி, “ஏன் நீங்க மட்டும் எதுக்கும் பேர் கொடுக்கல?” என்றார். அவர்கள் நால்வருமே எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.
“என் கிளாஸ்ல எல்லாரும் கலந்துகிட்டே ஆகணும். உங்க நாலு பேர் பேரையும் நான் மாறுவேஷப் போட்டிக்கு எழுதிக்குறேன்” என்று சொல்லிவிட்டுப் பெயரை எழுதியபடியே, “டேய்… மக்கள் தலைவருங்க மாதிரிதான் மாறுவேஷம் போடணும். நீங்க பாட்டுக்கு விஜய், அஜித்னு வந்து நின்றாதீங்க” என்றார்.
பரணியின் அம்மா ஊரின் துணைத்தலைவர். வழக்கம்போல பரணியின் அப்பா கந்தன்தான் அப்பொறுப்பில் இருந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.
பரணி வீட்டிற்குள் நுழையும்போதே, “நம்ம கோயிலுக்குள்ள அவனுங்க எப்படி வரலாம்? அவனுங்களுக்கு அவ்வளவு திமிராகிடுச்சா?” என்று கந்தன் அருகில் இருந்தவர்களிடம் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார்.
பரணி நேராக அடுப்பில் சுடுதண்ணீர் வைத்துக்கொண்டிருந்த அம்மாவை நோக்கிச் சென்றான். வழியில் தன் பையைத் தூக்கிப் போட்டுவிட்டு, டிவிக்கு அருகில் இருந்த சோளத்தை எடுத்துக் கொரித்தபடி, “அம்மா, ஸ்கூல்ல டீச்சர் என்னைய ஆண்டு விழாவுக்கு மாறுவேஷம் போடச் சொல்றாங்க” என்றான்.
“அப்படியா… நீ என்ன வேஷம் போடப் போற?” அம்மா அடுப்பில் விறகைத் தள்ளினாள்.
“தெரியலம்மா… தலைவர்களோட வேஷம்தான் போடணுமாம்” என்று அவன் சோளத்தைக் கொரிப்பதில் மூழ்கினான்.
“அதையும் உன் டீச்சர்கிட்டயே கேட்க வேண்டியதுதானே” அம்மா சொல்லவும்,
“சரி, நான் நாளைக்குக் கேட்டுட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு சைக்கிள் டயரை எடுத்துக்கொண்டு விளையாடச் சென்றான்.
பிரேயர் நடக்க ஆரம்பித்தது. மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடத் தொடங்கினார்கள். அப்போது பரணிக்குப் பின்னால் இருந்த சாரதி மென்மையாக, “பரணி… டேய் பரணி” என்று அழைத்தான்.
பரணி திரும்பாமலேயே, “என்ன?” என்றான்.
“என்ன வேஷம் போட்றதுன்னு முடிவு பண்ணிட்டியா?” சாரதி கேட்டான்.
உடனே, நர்மதா டீச்சர் அவனின் மண்டையில் கொட்டினார். சாரதி வலி தாங்காமல் அமைதியானான். பரணியும் உஷாரானான்.
பிரேயர் முடிந்ததும் மாணவர்கள் அவரவர் வகுப்புக்குச் சென்றார்கள். நர்மதா டீச்சர் கொட்டிய இடத்தைத் தேய்த்துக்கொண்டே, “டேய் பரணி, நீயும்தானே பேசுன… என்ன மட்டும் ஏன் டீச்சர் கொட்னாங்க?” என்று கேட்டான்.
பரணி சிரித்தபடி, “நான் பேசுனது அவங்களுக்குத் தெரியாது. அதான்” என்றான்.
சாரதி, “என்ன வேஷம் போட்றதுன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று கேட்டான்.
“இல்லடா… அம்மா, டீச்சர்கிட்ட கேட்டுட்டு வரச் சொன்னாங்க” என்று பரணி சொல்லவும், நர்மதா டீச்சர் வகுப்பறைக்குள் வந்தார். மாணவர்கள் “குட் மார்னிங் டீச்சர்” என்று கோரஸ் பாடினார்கள்.
“குட் மார்னிங்… எல்லாரும் உட்காருங்க” என்றபடி நர்மதா டீச்சர் போர்டில் சமூக அறிவியல் என்று எழுதி, மாணவர்களை நோக்கித் திரும்பினார். “சாரதி, பரணி ரெண்டு பேரும் எழுந்து நில்லுங்க” கோபமாகச் சொன்னார்.
சாரதியும் பரணியும் மெதுவாக எழுந்தனர்.
“பிரேயர் அப்போ யாரும் பேசக்கூடாதுன்னு பலமுறை சொல்லிருக்கேன்ல… அப்படி இருந்தும் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பேச்சு?” நர்மதா டீச்சர் திட்ட ஆரம்பித்தார்.
இருவரும் அமைதியாகத் தலைகுனிந்து நின்றார்கள்.
“அப்படி என்னதான்டா பேசிட்டிருந்தீங்க?” நர்மதா டீச்சர் மீண்டும் கோபமாகக் கேட்டார்.
“பரணி என்ன வேஷம் போடப் போறான்னு கேட்டேன் டீச்சர்” சாரதி பயந்தபடி பதில் சொன்னான்.
“அதுக்கு பரணி சார் என்ன சொன்னாரு?”
“என்னன்னு மட்டும்தான் டீச்சர் கேட்டான். அதுக்குள்ள நீங்க வந்து என் மண்டையில நங்குன்னு கொட்டுனதால அமைதியாகிட்டான்” என்று சாரதி சொன்னான்.
நர்மதா டீச்சர் அமைதியாக இருவரையும் பார்த்தார். வேஷம் போடுவதற்காகத் தயாராக இருந்த மற்றவர்களையும் எழுப்பினார்.
“நீங்க எல்லாரும் என்னென்ன வேஷம் போட்றதுன்னு முடிவு பண்ணிட்டீங்களாடா?” என்று நர்மதா டீச்சர் கேட்க நான்கு பேரும் முழித்தார்கள். அவர்களின் முழியே அவர்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதைச் சொன்னது.
“சரி… அப்புறமா நானே என்னன்னு சொல்றேன்” என்று கூறிவிட்டு நர்மதா டீச்சர் பாடம் நடத்துவதில் மூழ்கினார். ஆண்டு விழா என்பதால் காலை நேரத்தில் பாடமும், மதியத்திற்கு மேல் பயிற்சிகளும் இருந்தன.
நர்மதா டீச்சர் தங்களுக்கு என்ன வேடம் கொடுக்கப் போகிறார் என்று பரணியும் சாரதியும் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நர்மதா டீச்சர் நான்கு புகைப்படங்களுடன் வந்தார். படம் தெரியாதது போல டேபிளில் திருப்பி வைத்தார்.
“பரணி, சாரதி, ராம், சிவன்… நாலு பேரும் இங்க வாங்க”
அவர்கள் வந்தார்கள்.
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேப்பரை எடுங்க. இந்தப் பேப்பருக்குப் பின்னாடி தலைவர்களோட போட்டோ இருக்கு. உங்களுக்கு யாரோட போட்டோ வருதோ, அவங்களோட வேஷத்தைத்தான் நீங்க போடணும். மாட்டேன்னு சொன்னீங்கன்னா அவ்வளவுதான்” நர்மதா டீச்சர் மிரட்டினார்.
அவர்களும் தங்களுக்குரிய பேப்பரை எடுத்தார்கள். சாரதிக்கு காந்தியும், பரணிக்கு அம்பேத்கரும், சிவனுக்கு நேருவும், ராமுக்கு பாரதியும் வந்தார்கள்.
“நீங்க நாலு பேரும் இவுங்கள மாதிரிதான் வேஷம் போடணும். அதனால, டிரஸ்லாம் அவங்கள மாதிரியே வாங்கிக்கோங்க. உங்க வீட்லயும் சொல்லிடுங்க” என்று நர்மதா டீச்சர் சொல்ல, அவர்கள் நால்வரும் அந்தப் பேப்பரை எடுத்துக்கொண்டு மைதானத்தில் அமர்ந்தார்கள்.
“அம்மா… அம்மா… எங்க இருக்க?” என்று கத்தியபடியே வீட்டிற்குள் நுழைய,
“இங்க கெணத்துப் பக்கம் நிக்குறேன்டா” என்று கொல்லையில் இருந்து பதில் வந்தது.
“அம்மா… டீச்சர் எனக்கு என்ன வேஷம் போடணும்னு சொல்லிட்டாங்க” குதூகலத்துடன் சொன்னான்.
“என் துரைக்கு என்ன வேஷம் கொடுத்திருக்காங்க?” அம்மாவும் ஆர்வத்துடன் கேட்டாள்.
“அம்பேத்கர் வேஷம்” என்று உற்சாகத்தோடு சொன்னான் பரணி.
பரணி அம்மாவின் முகம் மாறியது. ஒருநொடி கூட வீணடிக்காமல், “சாமி, நம்ம வேற வேஷம் போட்டுக்கலாம்” என்று கூற, பரணியின் முகம் வாடியது.
“அம்மா… அதெல்லாம் முடியாது. நான் இவர்துதான் போடுவேன்” பரணி அடம்பிடிக்க ஆரம்பித்தான்.
“நான் சொல்றத கேளுடா… நாம வேற யாருடையதும் போட்டுக்கலாம்” பரணியின் அம்மா மீண்டும் வலியுறுத்தினாள்.
“டீச்சர் திட்டுவாங்கம்மா”
“நான் டீச்சர்கிட்ட பேசிக்கிறேன்”
“அம்மா… ப்ளீஸ் மா. நான் இவர்தே போட்டுக்குறேன். இவர்தான் கோட் சூட்லாம் போட்டுருக்காரு. மாஸா வேற இருக்கு” பரணி கெஞ்சினான்.
“எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லடா. ஆனா, உங்க அப்பா இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு. அதான்… நானே சொல்றேன்.” அவனுக்கு எடுத்துரைக்க முயன்றாள். ஆனால், அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை.
அவன் அடம்பிடிக்க ஆரம்பித்தான். பரணியின் அம்மா பொறுமையை இழந்தாள்.
“நானும் சொல்லிட்டே இருக்கேன். நீ சும்மா அடம்பிடிச்சிட்டே இருக்க” முறைத்தாள். பரணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவன் பட்டினி என்ற ஆயுதத்தை எடுத்தான். திண்ணையில் அமர்ந்தான்.
“உன் பவுசுலாம் இந்த விஷயத்துல வேலைக்கு ஆகாதுடி தம்பி” என்று சொல்லிவிட்டு பரணியின் அம்மா தன் வேலையைப் பார்க்கச் சென்றாள். பரணியின் அப்பா வந்தார். அவன் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதையும், அழுது முடித்திருப்பதையும் பார்த்த மாத்திரத்திலேயே அவர் அறிந்துகொண்டார்.
“என்னடா உம்முன்னு உட்கார்ந்துட்டு இருக்க?”
“அம்மா ஆண்டு விழால வேஷம் போட வேணாம்னு சொல்லிடுச்சு”
“ஏன்?”
பரணி எந்தப் பதிலும் சொல்லவில்லை. அவன் வீம்பு செய்தான்.
“நீ இருடா… உங்க அம்மாட்டையே கேட்டுக்குறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார். பரணியின் அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரின் முகம் மாறியது. “தப்பாச்சே” என்றபடி பரணி அருகில் வந்து அமர்ந்தார்.
“உன் அம்மா எல்லாத்தையும் சொன்னாடா… அவளுக்கு எதை எப்படிச் சொல்லணும்னு தெரியல” என்று இழுத்தார்.
“நீ சொல்லுப்பா… எனக்கு அம்பேத்கர் கோட் சூட் வாங்கித் தரீயா?” பரணி அப்பாவியாய் கேட்டான்.
“பரணி, நிறைய தலைவர்கள் இருக்கிறப்போ… ஏன்டா உனக்கு அந்தாளோட வேஷம் போடணும்னு தோணுச்சு?”
“அவர்தான்பா கோட் சூட், கண்ணுல கண்ணாடி, கையில புக்குன்னு சும்மா கெத்தா இருக்காரு” என்று பரணி சொன்னதும், அவன் அப்பாவின் முகம் சற்றே மாறியது. ஆனாலும், மீண்டும் சட்டெனத் தன் முகத்தை இயல்புக்குக் கொண்டுவந்தார்.
“பரணி… பார்க்க கெத்தா இருக்குறவங்க எல்லாம் கெத்து இல்லடா. நீ அந்தாளு வேஷம் போட்றதை விட, காந்தியோட வேஷம் போடு. கிளாப்ஸ் சும்மா அள்ளும்… நிறைய பேர் விசில் அடிப்பாங்க…” பரணியின் மண்டையைக் கழுவ முயன்றார். ஆனாலும் பரணிக்கு அதில் விருப்பம் இல்லை.
“எனக்கு அம்பேத்கர் வேஷம்தான்பா போடணும்” பரணி சொல்லவும், அவன் அப்பா பொறுமை இழந்தார். அப்போது அங்கு பரணியின் மாமா வந்தான்.
“என்ன மாமா… பரணி முருங்கமரம் ஏறியிருக்கான் போலேயே!” என்று கலாய்க்க,
“அட நீ வேறடா. அவன் ஸ்கூல்ல ஆண்டு விழா நடக்குதாம். அம்பேத்கர் வேஷம்தான் போடுவேன்னு ஒத்தக் கால்ல நிக்குறான். அதைப் போட விட்டா அப்புறம் நம்ம மரியாதை என்ன ஆவுறது?” என்று பரணியின் அப்பா புலம்பினார்.
“இவ்வளவுதானா விஷயம்… என்கிட்ட விடுங்க நான் பார்த்துக்குறேன்” என்றவன், பரணியைப் பார்த்தான்.
“மாமா, நான் அம்பேத்கர் வேஷம் போட்றதுக்கும் மரியாதைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?” பரணி கேள்வி எழுப்பினான்.
“அதெல்லாம் இருக்குடா… அதுக்கு முன்னாடி நாம ஒண்ணு பண்ணுவோம்” என்று பரணியின் மாமா சொன்னான். பரணிக்கும், அவன் அப்பாவுக்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. பரணியின் மாமா ஒரு விசில் அடிக்க, அருகில் அரச மரத்தின் அடியில் கூடியிருந்தவர்கள் வந்தார்கள்.
“டேய், பசங்கள ஏன்டா கூப்பிடுற?” என்று பரணியின் அப்பா கேட்க,
“பொறுங்க மாமா” என்றான். அடுத்த சில நிமிடங்களில் பன்னிரெண்டு பேர் வந்து நின்றார்கள்.
“டேய் இங்க பாருங்கடா… ஸ்கூல் ஆண்டு விழால பரணி அம்பேத்கர் வேஷம் போடப் போறானாம். ஆனா, மாமா அவன காந்தி வேஷம் போடச் சொல்றாரு. ஆயிரம்தான் இருந்தாலும் மாமா பழைய கை. நீங்க சொல்லுங்கடா… யார் வேஷம் போட்டுட்டு வந்தா சும்மா கெத்தா, ஹீரோ மாதிரி இருக்கும்?” என்று கேட்டான்.
“இது என்னடா கேள்வி… காந்தி வேஷம்தான்”
“மாப்ள… இதெல்லாம் பரணிக்கே தெரியும்டா. அவன் சும்மா நம்மகிட்ட விளையாடுறான்”
“ஆமாண்டா… காந்தி வேஷம் போட்டா எப்படியும் பரணி நம்ம ஊர் மத்தியில ஃபேமஸ் ஆகிடுவான்”
வந்தவர்கள் அனைவரும் காந்தியை உயர்த்திப் பிடித்தார்கள். அது பரணிக்கும் ஆசையைத் தூண்டியது. இருந்தாலும், ஒரு ஓரத்தில் அவனுக்கு அம்பேத்கரின் உடையை உடுத்த வேண்டும் என்று தோன்றியது.
“ஆனாலும், அம்பேத்கர்தானே கோட் சூட் போட்டிருக்காரு” பரணி சொன்னான். இப்போது என்ன பதில் சொல்வது என்று யாருக்கும் தெரியவில்லை. பரணியின் மாமா சட்டெனக் குறுக்கிட்டான்.
“பரணி, இங்க அப்பா என்ன டிரஸ் போட்டுருக்காரு?”
“வேஷ்டி சட்டை”
“நான் என்ன போட்டுருக்கேன்?”
“ஜீன்ஸ், டீ ஷர்ட்”
“ஆனாலும், அப்பாதானே பெரிய ஆளு?”
பரணி ‘ஆம்’ என்று தலையாட்டினான். “அது போலதான் காந்தியும்.”
அப்போது பரணியின் அம்மா அங்கு வந்தாள். “பரணி, மாமா சொல்றான்ல… போ காந்தி வேஷம் போடு. மாமா அதுக்கானதையெல்லாம் நாளைக்கு வாங்கிட்டு வந்துடுவான்” என்று கூறினாள்.
பரணியின் பார்வையில் அவர்கள் சொன்னதெல்லாம் சரியாகவே இருந்தது. ஆனாலும், “டீச்சர்கிட்ட என்ன சொல்றது?” என்று கேட்க,
“அப்பா சொன்னார்னு சொல்லு” என்று பரணியின் அப்பா சொன்னார். பரணியின் அம்மா பரணியை உள்ளே சாப்பிட போகச் சொல்ல, அவனும் சென்றான்.
“ஏன்டா… ஒரு அடி போட்டு இதுதான் செய்யணும்னா அவன் செஞ்சிட்டுப் போறான். அதை விட்டுட்டு இப்படி எல்லாரும் ஏன் என்னென்னமோ பேசிட்டுருக்கீங்க?” பரணியின் அம்மா கேட்டாள்.
“நாம அடிச்சு அவன போட வச்சிடலாம். அப்படிப் போட்டா, அவனுக்குள்ள கேள்வி வரும். அது தேவையில்லாத பிரச்சனைய உண்டு பண்ணும். ஆனா, இப்போ அவனுக்கு எந்தக் கேள்வியும் வராது” என்று பரணியின் மாமா சொன்னான்.
பரணியின் அப்பாவும் புன்னகைத்தார். பரணியும் டீச்சரிடம் சொன்னான். “அப்போ, இன்னும் யாரும் திருந்தல… ஏதோ பண்ணுங்க” என்று டீச்சர் சலித்துக்கொண்டார். பரணியின் கைக்கு காந்தியின் வேஷம் வந்தது. ஆண்டுவிழாவும் வந்தது. பரணி காந்தியின் வேஷத்தைப் போட்டு நடக்க, அவனுக்குக் கரகோஷங்கள் அதிர்ந்தன. ஆனால், அவனது பார்வை அம்பேத்கர் வேஷத்தைப் போட்டிருந்த சாரதி மீதுதான் இருந்தது. பரணி சாரதிக்கு அருகில் சென்றான்.
“சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தாத்தா என்ன சொல்றாரு?” என்று அம்பேத்கர் வேடம் போட்டிருந்த சாரதி கேட்க, “அம்பேத்கர் டிரஸ்ஸைக் கூட போட முடியாத அளவுக்குத்தான் இந்த சுதந்திரம் இருக்குனு ஃபீல் பண்றாரு” என்று சொல்லிவிட்டு பரணி அமைதியானான்.
l surenspersonal@gmail.com






