மரணத்திற்கும் மறுக்கப்படும் கண்ணியம்

தலையங்கம்

2026 ஜூன் 5. விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 76 வயதான பூமிலிங்கம் மரணமடைந்தார். பூமிலிங்கத்தின் உடலை அவரது குடும்பத்தினர் வழக்கம்போல் தங்களுக்குச் சட்டப்படி ஒதுக்கப்பட்ட இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது, அப்பகுதியை ஆக்கிரமித்திருந்த மீனவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கற்களாலும் கட்டைகளாலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இறுதியில், பூமிலிங்கத்தின் உடலைச் சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 900 காவல்துறையினர் பாதுகாப்போடு இரவு நேரத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டு வரலாற்றில் இவை போன்ற ஏராளாமான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவை எல்லாவற்றிற்கும் ஒரே காரணம், நூற்றாண்டுகள் கடந்து மனித ஒற்றுமையைச் சிதைக்கும் சாதி அமைப்பு என தமிழ்நாட்டு முற்போக்குத் தளத்தில் எளிமையாக விளக்கிவிட முடியும். சாதி அமைப்புதான் இந்த மனநிலையை ஊக்குவிக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது. ஆனால், இத்தகைய சம்பவங்களுக்குப் பின்னே பல ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசு நிர்வாக அலட்சியத்தின் விளைவும் இருக்கிறது.

பெரியகோட்டக்குப்பம் பகுதியில் பட்டியல் சமூக மக்களுக்கென ஆதிதிராவிடர் நலத்துறையால் ஒதுக்கப்பட்ட இடுகாடு உள்ளது. ஆனால், அந்த நிலம் பல ஆண்டுகளாக மீன்பிடிப் படகுகள் நிறுத்தப்படும் இடமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அமைதிக் குழுக் கூட்டங்களும் நடைபெற்றன. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இறுதியில் 2025ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகியபோது நீதிமன்றம் மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. நிர்வாகத்தின் செயலற்ற தன்மையே பூமிலிங்கத்தின் இறுதி ஊர்வலத்தை மோதலாக மாற்றியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கென ஒதுக்கப்பட்ட மயானத்தை அவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்போது, அது சொத்துரிமைப் பிரச்சினை மட்டுமல்ல; அது அரசமைப்புச் சட்டம் தடை செய்துள்ள தீண்டாமையின் ஒரு வடிவமுமாகும்.

அப்பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தின் முன்னோர்கள், கூட்டாக இணைந்து மயானத் தேவைக்காக அந்த நிலத்தை விலைகொடுத்து வாங்கியிருந்தனர். பின்னர், அந்த இடத்திற்குச் சட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அதனை ஆதிதிராவிடர் நலத்துறைக்கு எழுதிக் கொடுத்தனர். இன்று மீனவச் சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அந்த மயான நிலம்தான். படகுகளை நிறுத்துவதற்குப் போதுமான இடம் இல்லாததால் தங்களுக்கு வேறு வழியில்லை என்பதே மீனவச் சமூகத்தினரின் வாதமாக உள்ளது. இவ்விரு சமூகங்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவை. மீனவர்களும் இதைத் தங்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையாகவே முன்வைக்கின்றனர்.

ஆனால், இதில் ஒரு முக்கியமான முரண் உள்ளது. அதே பகுதியில், அந்த நிலத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் சிறிய ரிசார்ட் ஒன்றும் ஆக்கிரமிப்புப் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. அதை  அகற்றினாலே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். வெளியூரைச் சேர்ந்த சாதி இந்து முதலாளிக்குச் சொந்தமான அந்த ரிசார்ட் அகற்றப்படுவது குறித்து எந்தக் கவலையும் வெளிப்படுத்தாத மீனவச் சமூகத்தினர், பட்டியல் சமூகத்திற்குச் சொந்தமான மயான நிலத்தையே தொடர்ந்து கோருகின்றனர். இதுவே இப்பிரச்சினையின் மைய முரணாகும். இது வெறும் நிலம் தொடர்பான முரண் அல்ல; சாதியின் பொருட்டுக் கூர்தீட்டப்படும் முரணாகும். தமிழ்நாட்டில் பட்டியல் சமூகத்திற்கு எதிராக நிகழ்ந்த பல்வேறு வன்முறைகளும், சக உழைக்கும் வர்க்கத்தினராலேயே நிகழ்த்தப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ளும்போது, இந்த நிகழ்வில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

2025ஆம் ஆண்டு, கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே, பட்டியல் சமூகத்திற்குச் சொந்தமான மயான நிலத்தை அவர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை அரசும் அதிகாரிகளும் நிறைவேற்றாமல் காலம் கடத்தினர். அதன் பின்னர் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்துவிட்டது. இதே விழுப்புரம் மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேல்பாதி கோயிலில் பட்டியல் சமூகத்தினருக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டபோது, அந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பைப் பெற்ற பின்னரும், மக்களின் வழிபாட்டு உரிமையைக் கடந்த திமுக அரசால் உறுதி செய்ய முடியவில்லை. அன்றைய இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேகர் பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜ், அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டாக்டர் மதிவேந்தன் ஆகியோரில் யாரும் அப்பகுதியை நேரில் பார்வையிடவில்லை. இந்நிலையில், தற்போது சமூகநீதித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னியரசு, கோட்டக்குப்பம் பகுதி மக்களை நேரில் சந்தித்ததைத் தொடர்ந்து, சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். ஆயினும், இப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணும் நோக்கில், அதன்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட சமரசப் பேச்சுவார்த்தையிலும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுத்துள்ள வரம்புகளுக்குள் நியாயம் பட்டியல் சமூக மக்களின் பக்கமே இருந்தாலும், தங்களது அன்றாட அடிப்படை உரிமைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராட வேண்டிய நிலை தமிழ்நாட்டில் நீடித்துக்கொண்டே இருக்கிறது. உண்மையில், பட்டியல் சமூக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகச் சட்டம் ஏற்கெனவே வரையறுத்து வழங்கியுள்ள விதிமுறைகளையும் பாதுகாப்புகளையும் முறையாக நடைமுறைப்படுத்தினாலே, இத்தகைய பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆனால், பட்டியல் சமூக மக்களின் நியாயத்திற்கு ஆதரவாக நிற்பது என்பது பொதுச் சமூகத்திற்கு எதிராக நிற்பதாகக் கருதப்படும் என்ற சிந்தனை திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டதன் வழியாகவே, இங்கு சாதி மேலும் கூர்தீட்டப்பட்டிருக்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு “தீண்டாமையை ஒழிக்கிறது” என்று மட்டும் கூறவில்லை. தீண்டாமையின் காரணமாக உருவாகும் எந்தவொரு “தகுதியின்மையும்” சட்டவிரோதம் என்றும் அறிவிக்கிறது. மயானத்தைப் பயன்படுத்த முடியாத நிலை, பொதுப்பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை, இறந்த உடலைக் கூட கண்ணியமாக அடக்கம் செய்ய முடியாத நிலை என இவை அனைத்தும் அதன் வெளிப்பாடுகளே. இந்த அடிப்படையான அரசமைப்புச் சட்டக் கேள்வியை நீதிமன்றங்கள் நேரடியாக முன்வைத்து ஆராய வேண்டும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசினுடையது.

ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் கண்ணியத்தைச் சேர்த்தது, அந்தக் கண்ணியத்தை மறுக்கும் சமூகச் செயல்பாட்டை வெறும் “ஆக்கிரமிப்பு” என்ற சட்ட மொழிக்குள் அடக்கிவிடுவது போதுமான அணுகுமுறை அல்ல. இது இந்திய அரசமைப்பின் மனித கண்ணியக் கோட்பாட்டிற்கே எதிரானது. தற்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, இதை ஒரு பகுதியில் நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்சினையாகப் பார்க்காமல் ‘பொது’, ‘அடிப்படை உரிமை’ ஆகியவை தலித்துகளுக்கு மறுக்கப்பட்டிருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இன்றும் திகழ்ந்துவருகிறது என்பதை உணர்ந்து, இதை மாநிலத்தின் அடிப்படைப் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்.

அதனடிப்படையில் பட்டியல் சமூகங்களுக்காக அரசால் ஒதுக்கப்பட்ட மயான நிலங்கள் அனைத்தையும் மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகள் இருந்தால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மயானம், பொதுப்பாதை, குடிநீர், கோயில், பொதுச் சொத்து தொடர்பான தீண்டாமை புகார்களை விசாரிக்க மாவட்ட அளவில் தனிப்பட்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மயான உரிமை மறுப்பு, உடல் அடக்கம் தடை, பொதுப்பாதை மறுப்பு போன்ற வழக்குகள் அனைத்தையும் தானாகவே SC/ST (Prevention of Atrocities) Act -இன் கீழ் பதிவு செய்யும் நடைமுறை கட்டாயமாக்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டக் கூறுகள்  17, 21 ஆகியவற்றின் அடிப்படையில், தீண்டாமை தொடர்பான வழக்குகளை நீதித்துறை தனித்த அரசமைப்புச் சட்டக் கோணத்தில் அணுகுவதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். தீண்டாமை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் மாநில அளவிலான சுயாதீன அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகும் அவனது கண்ணியத்தை இந்தச் சமூகமும் அரசும் பாதுகாக்க முடியாவிட்டால், அரசமைப்புச் சட்டம் வாக்குறுதி அளித்த சமத்துவம் நடைமுறையில் எங்கே இருக்கிறது?

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger