அவ்வப்போது யாமத்தில்
அப்பா குடித்துக் கிறங்கி வரும் நாட்களில்
அம்மையின் முலை மேட்டிலும் பொசத்திலும்
மூர்க்கமான மிருக ரேகை படர்ந்திருக்கும்
யாருமறியாதவாறு அதிகாலையிலே
ரேகைகளை அழிக்க முயலும் அம்மைக்கு
நானும் அக்காவும் வெஞ்சினத்தோடு
கோழி இறகால் மருந்திடுவோம்…
அப்போதெல்லாம்
அப்பனின் குணத்தைக் காட்டி
எங்கள் எல்லைக்கோடுகளை வரைந்திடுவாள் அம்மை..
இப்போது,
அக்காவின் எல்லை பீடித்தட்டு வரையிலும்,
எனது எல்லைக்கோடு வயக்காடு வரையிலும் நீண்டிருந்தது…
எங்கம்மையை ஏமாத்தி
எல்லை மீறும் நாட்களில்
சொப்பனத்தில் வரும் அப்பா
உச்சி முடியை கொத்தாய்ப் பிடித்து
ஒரு உலுக்கு உலுக்குவார்
பயந்து நடுங்கி சொப்பனக் கதையை அம்மையிடம் சொல்ல
ஓர்மையில்லாமல் வேசடையில் சிரிக்கிறாள்…
m indhu2283@gmail.com




