அழுகிப் போகட்டும்

சாலமன்

“இன்னும் தூங்காம என்னடா பண்ணிக்கிட்டிருக்க?” உழைத்துக் களைத்த பார்வதியின் குரல் வீட்டிற்குள்ளிருந்து வெளிவந்தது.

“ரெண்டு மூணு கம்பெனிங்களுக்கு ரெஸ்யூம் அனுப்பிக்கிட்டு இருக்கேம்மா.”

அந்தச் சிறிய திரையில் அன்பு செதுக்கி வைத்திருந்த அவனது கல்வித் தகுதிகள், உண்மையில் அக்குடும்பத்தின் விடுதலைக்கான கடவுச்சொற்களாக இருந்தன.

சிறிய அறைக்குள், இருளின் இடுக்கில் படுத்திருந்த சாமுவுக்கு அது வெறும் பதிலல்ல. உழைத்து உழைத்து வறண்டு கிடக்கும் அவனது மனப்பரப்புக்குள் விழுந்த முதல் மழைத்துளி. அதன் மீதுள்ள  ஒவ்வொரு தழும்பும் பக்கத்து டவுனின் லாரிகளில் இருந்து அவர் இறக்கிய மூட்டைகள் உருவாக்கிய காய்ப்பேறிய முடிச்சுகள். காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை, சிமெண்ட் மூட்டைகளும் காய்கறி மூட்டைகளும் மளிகைப் பொருட்களின் மூட்டைகளும் அவரது முதுகெலும்பை வில்லாக வளைத்திருந்தன. தன் மகன் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு சொல்லும், தன் முதுகில் இருக்கும் மூட்டைகளின் சுமைகளைக்  இறக்கும் என்ற தீராத நம்பிக்கையாகவும் இருந்தது. அந்தத் திண்ணை வெளிச்சத்தை, உள்ளே படுத்துக்கொண்டு தன் வீட்டின் சிறிய ஜன்னல் வழியே பார்த்தார், அது நாளைய விடியலின் தொடக்கமாக அவருக்குத் தெரிந்தது. மறுநாள் காலை ஆறு மணிக்கு வேலைக்குச் செல்ல சாமு தயாராகிக்கொண்டிருந்தார். தன் மகன் இரவு நெடு நேரம் கண்விழித்து  இன்னும் களைப்போடு உறங்குவதைப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும்போது,

“ஏங்க, இவன் வயசு புள்ளைங்கெல்லாம் பக்கத்து பஜாருக்கு பைக்குல போறானுங்க. நான் பஜாருக்குப் போகச் சொன்னா, அவன் அவனோட ப்ரண்டுங்ககிட்டதான் பைக்க கடன் கேக்குறான். அவனுக்கு ஒரு பைக்க எடுத்துக் கொடுத்துட்டா, அவனும் மத்த புள்ளைங்க மாதிரி பைக்குல போவான் வருவான்ல” என பார்வதி கேட்க,

“நான் லோடு எறக்குற அண்ணாச்சி கிட்ட 50 ஆயிரம் அட்வான்ஸ் கேட்டிருக்கேன். இன்னைக்குத் தரதா சொன்னாரு. கொடுத்தார்னா இன்னைக்கே ஒரு நல்ல பைக்கா எடுத்துடலாம். எதுக்கும் என்னோட ஆதார் கார்டையும் பேங்க் பாஸ் புக்கையும் கொண்டு வா. காசு கிடைச்சா பைக்குக்கும் காசு கட்டிட்டு வந்துடுறேன்”

பார்வதி கொண்டு வந்து கொடுத்ததும் அவற்றைத் தன் சட்டைப் பையில் திணித்துக்கொண்டு சைக்கிளில் வேலைக்குப் புறப்பட்டார் சாமு.

மாலை ஐந்து மணிக்கு அன்புவின் செல்ஃபோன் ஒலித்தது.

“சொல்லுப்பா”

“அன்பு, டவுன்ல சேட்டு வச்சிருக்கிற அந்த பைக் ஷோரூமுக்கு வரியா?” சாமுவின் குரலில் இரகசியப் பெருமிதம் ஒளிந்திருந்தது.

“என்னப்பா… நிஜமாவே பைக் எடுக்கப் போறியா?” அன்புவின் குரலில் ஆச்சரியமும், சொல்ல முடியாத நெகிழ்ச்சியும் கலந்திருந்தது. அவனுக்கும் பல்சர் பைக் வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசைதான். குடும்பத்தின் வறுமையை நினைத்து, தன் விருப்பத்தை அவன் வெளிக்காட்டியதில்லை. ஆனால், அப்பா தன் உணர்வைப் புரிந்துகொண்டதில் அவனுக்குக் கூடுதல் மகிழ்ச்சி. தன் நண்பன் சோமுவுக்கு போன் செய்து அழைத்ததும் அவனும் பைக் எடுத்துக்கொண்டு வர, இருவரும் ஷோ ரூம் போய் சேர்ந்தனர்.

அந்த பைக் ஷோரூம்,டவுனின் புழுதி நிறைந்த சாலைகளுக்கு நடுவே வேற்றுக் கிரகத்தைப் போல மின்னிக்கொண்டிருந்தது. அதன் குளிர்ந்த காற்று, வாசலிலேயே சாமுவின் வியர்வை வாசனையைத் தடுத்து நிறுத்தப் பார்த்தது. ஆனால், அவர் அதைச் சட்டை செய்யவில்லை. அழுக்குப் படிந்த சட்டைப் பைக்குள் இருந்த ஐம்பதாயிரம் ரூபாயை வெளியே எடுத்தார். அந்த நோட்டுகளின் ஒவ்வொரு இழையிலும், அவர் தூக்கிய சிமெண்ட் மூட்டைகளின் தூசிகளும், லாரியிலும் பஜார் வீதிகளிலும் அவர் சிந்திய வியர்வைகளும் உறைந்திருந்தன.

ஷோரூமின் பளபளக்கும் தரையில், தைத்துத் தைத்து நைந்துபோன சாமுவின் தோல் செருப்புகள் மெல்லிய சத்தத்தை எழுப்பின. அன்புவும் சோமுவும் அங்கே நின்றிருந்த கறுப்பு நிற ‘பல்சர்’ பைக்கையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அது வெறும் வாகனம் அல்ல, ஒரு பொறியியல் பட்டதாரியின் தகுதியை ஊருக்குப் பறைசாற்றப்போகும் கௌரவச் சின்னம்.

“காசை எண்ணிடுங்க” என்று சாமு அந்த நோட்டுகளை மேஜையில் வைத்தார். விற்பனையாளர் அவற்றை இயந்திரத்தில் கொடுத்து எண்ணும்போது, சாமுவின் கண்கள் தன் மகனையே பார்த்துக்கொண்டிருந்தன. அந்தப் பணத்தை அவர் திருப்பி அடைக்க சில மாதங்கள் ஆகலாம். ஆனால், அது அந்த இயந்திரத்திற்குள் செல்ல சில நொடிகள் மட்டுமே ஆனது. அண்ணாச்சியிடம் வாங்கிய அட்வான்சும் பைக்குக்கு இனி கட்டப் போகும் தவணையும் சாமுவின் தோளில் ஏறிய கூடுதல் சுமைகளாக இருந்தாலும், மகனின் மகிழ்ச்சி அந்தச் சுமைகளை இலகுவாக்கின.

அன்புவின் கைகளில் புதிய சாவியை ஒப்படைத்தபோது, அவனது விரல்கள் நடுங்கின. “அப்பா, நீங்க பின்னாடி உட்காருங்கப்பா,” என்றான் நெகிழ்ச்சியுடன்.

“இல்லடா… இன்னும் கொஞ்சம் நேரத்துல லாரி வந்துடும். லோடு எறக்கப் போகணும். நீ போ… நீ ஓட்டுறத பாக்கணும்,” என்றார் சாமு. ஒரு தந்தை தன் மகனின் சிறகுகளைத் தொட்டுப் பார்ப்பதில் இருக்கும் பேரானந்தம் அவர் முகத்தில் மெல்லிய புன்னகையாய் மலர்ந்தது.

அன்பு பைக்கை ஸ்டார்ட் செய்தபோது, அதன் எஞ்சின் சத்தம் தினையூர் வரை கேட்கும் வெற்றிக் குரலாக அவனுக்குத் தெரிந்தது. அவன் அந்தப் பளபளக்கும் வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்ல, தன் பழைய சைக்கிளில் மெதுவாகப் பின்னால் வந்துகொண்டிருந்தார் சாமு. சாலையில் செல்லும் மக்கள் அந்தப் புதிய பைக்கை ரசிப்பதைக் கண்டு, தன் முதுகின் வலியை மறந்து சிரித்துக்கொண்டார். அந்தச் சிரிப்பு, ஒரு எளிய மனிதன் அதிகாரத்தையும் வறுமையையும் ஒரு கணம் வென்றுவிட்டதற்கான சாட்சியாக இருந்தது.

அன்புவுக்கு சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தது. அடுத்த வாரம் அவன் புறப்பட வேண்டும். அதற்கான பொருட்களை வாங்குவதற்காக அன்பு சோமுவைத் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு டவுனுக்குச் செல்லும் கிராமத்துச் சாலையின் வழியே சென்றான். பின்னால் அமர்ந்திருந்த சோமுவிடம் தான் நகரத்தில் தங்கப் போகும் அறையைப் பற்றிப் பேசிக்கொண்டு வந்தபோது, அந்த வளைவில் நிழலென இன்னொரு பைக் சீறி வந்தது. ஒரு கணம்… வாகனங்கள் மோதும் சத்தம், சைலன்சர்களின் அலறல், அதன் பிறகு கனமான மௌனம்.

புழுதிச் சாலை எழுப்பிய தூசி அடங்கியபோது, நான்கு உடல்கள் தரையில் கிடந்தன. அன்புவின் கனவுச் சின்னமான அந்த பைக்கின் பளபளக்கும் ‘டூம்’ உடைந்திருந்தது. தன் தந்தை சுமந்த ஒவ்வொரு  மூட்டையும் சிதறிக்கிடப்பதாகவே அன்புவுக்குத் தோன்றியது.

எதிரே விழுந்து கிடந்த நடுத்தர வயது மனிதர்களின் கண்களில் வலியைக் காட்டிலும் ஆத்திரமே மேலோங்கியிருந்தது.

“உங்க கண்ண எங்க வச்சிக்குணுண்ணா பைக் ஓட்றீங்க? ஒழுங்கா பாத்து வரமாட்டீங்களா?” உள்ளார்ந்த கோபத்துடன் வெளிப்பட்டது அன்புவின் குரல்.

“நாங்களே அடிப்பட்டுக் கெடக்கிறோம்… எங்களையே கேள்வி கேக்கறீங்களா? உங்கோத்தா. தேவிடியாப் பசங்களா” அதிகாரத்தின் திமிரான சொற்கள் அன்புவின் பொறுமையை உடைத்தன.

நான்கு உடல்களும் அங்கே ஒரு குட்டிப் போர் புரிந்தன. பாதையின் இரு புறத்திலும் இருந்த நிலங்கள் அதைப் பரபரப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தன. அன்புவும் சோமுவும் சிதைந்த பைக்கை உருட்டிக்கொண்டு போய் டவுனில் உள்ள மெக்கானிக் செட்டில் விட்டுவிட்டு அமர்ந்துகொண்டிருக்கும்போதே தினையூரின் கழனி மோட்டிலிருந்து ஊர்த் தெருக்களிலும் சேரித் தெருக்களிலும் செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது,

“ஏண்டி பார்வதி… ஊ பையன் ஊர்த் தெருக்காரனுங்கள அடிச்சிட்டானாம். அவனுங்க கேஸ் தர கண்டிகை போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிட்ருக்கானுங்களாம். இப்போதைக்கு ஊ பையன எங்கையாவது அனுப்பி வச்சிரு. மத்தத அப்புறம் பாத்துக்கலாம்” என சேரித் தெரு குமாரி கூற வேறொருவரின் செல்போன் மூலமாகத் தன் கணவன் சாமுவுக்கு அவள் தகவல் தெரிவிக்க, சாமுவும் தன் மகன் இருக்கும் இடத்தை விசாரித்து மெக்கானிக் ஷெட்டுக்கு வந்து சேர்ந்தார்.

“டேய், என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?” என சாமு பயமும் ஆதங்கமும் கலந்த குரலில் கேட்க,

“யப்பா, அவனுங்க மேலதான் தப்பு. அவனுங்கதான் நம்ம மேல வண்டிய மோதிட்டு அசிங்கமாப் பேசுனாங்க. அதனாலதான் அடிச்சோம்” என அன்பு நடந்ததை விளக்கினான்.

“அதுக்காக உங்கள யாருடா கைய வைக்கச் சொன்னது. இப்ப அவனுங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயிருக்கானுங்களாம்” என சாமு பதற்றத்தோடு கூற,

“அவனுங்களும்தான் எங்கள அடிச்சானுங்க. இங்க பாரு, இவனோட உதடும் வீங்கிப் போயிருக்கு. வா, நாமளும் போயி கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்” என சோமுவின் உதட்டைக் காட்டி அன்பு கூறினான்.

“இந்த போலிஸ்காரனுங்க, பத்து ஏக்கரு நெலம் வச்சிருக்குற அவனுங்க கம்ளைண்ட எடுப்பானுங்களா, இல்லன்னா அவன் கழனியில வேல செய்யுற நம்ம கம்ளைண்ட எடுப்பானுங்களா?” என சாமு எதார்த்தத்தைக் கூற,

“ஏ! சட்டம் எல்லாத்துக்கும் பொதுதானே?” என சோமு அப்பாவியாய் கேட்க,

“டேய், இந்த நொற நாட்டியமெல்லாம் பேசறதுக்கு இப்ப நேரம் இல்ல. இந்தா, காசப் புடிங்க. இப்பவே பஸ்ஸ புடிச்சி எங்க பெரியப்பா பொண்ணு வாழுற வயலூருக்குப் போயிடு. டே சோமு, நீ உங்க சித்தப்பா வூட்டுக்குப் போயிடு. நான் போன் பண்ணா மட்டும் வாங்க. போன எல்லாம் ஸ்விட்ச் ஆப் பன்ணுங்க. உங்க அத்தைக்கும் உங்க மாமாவுக்கும் போன் பன்ணி நான் பேசிக்கிறேன்” எனக் கூறி அன்புவின் சட்டைப் பையில் காசைத் திணித்தார் சாமு.

மேற்குத் திசை வெய்யிலின் பகல் பொழுது வெப்பத்தை விழுங்கிக்கொண்டு இரவை லேசாகத் தூரிக்கொண்டிருந்தது. சாமு சீக்கிரமே வீடு வந்து பார்வதியிடம் நடந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே இரவு முழுதாய் அந்தக் கிராமத்தின் மீது படர்ந்திருந்தது.

இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்த டாடா சுமோவில் இருந்து  காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், இன்னும் மூன்று காவலர்கள் இறங்கினர்.

வாசலில் அமர்ந்திருந்த சாமுவிடம்,

“டேய் உன் புள்ள எங்கடா?” அந்த ஆய்வாளர் ஊர்த் தெருக்காரர்களின் சாதிக்காரர் என்பதை பஜார் வீதியில் சக தொழிலாளி ஒருவர் ஏற்கெனவே சாமுவிடம் கூறியிருந்ததால், அவரது கோபத்தை சாமுவால் உணர முடிந்தது.

“சார், அவன் காலையிலிருந்தே வீட்டுக்கு வரல” எனக் கூற,

“நீ அவனுங்கள மெக்கானிக் செட்ல பாத்துப் பேசுனதெல்லாம் எங்களுக்குத் தெரியும். எங்க ஒளிச்சி வச்சிருக்குற ஊ புள்ளைய?” சமூக அதிகாரமும் அரச அதிகாரமும் சேர்ந்ததன் முழு உருவமாக அந்தக் காவல் ஆய்வாளர் சாமுவுக்குத் தெரிந்தார்.

“சார், தெரிஞ்சா சொல்ல மாட்டமா… அவனுக்கு ஐ.டி கம்பெனியில வேல கெடச்சிருக்கு. நானே நாளைக்கு அவன வக்கீல்கூட போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு வரேன் சார்.”

“ரெளடித்தனம் பண்ணிட்டுச் சுத்தறவனுக்கு ஐ.டி கம்பெனியில வேலையா? நீ இப்படியெல்லாம் கேட்டா சொல்ல மாட்ட, யோவ் இந்தாள வண்டியில ஏத்து” எனக் காவலர்களுக்கு உத்தரவிட, சாமுவை நெருங்கிய காவலர்களை வழி மறித்து,

“ஏ வூட்டுக்காரரு என்ன தப்பு செஞ்சாரு? எதுக்கு அவர வண்டியில ஏறச் சொல்றீங்க?” என பார்வதி கேட்க,

“யோவ், இவளையும் வண்டியில ஏத்து” எனத் துணை ஆய்வாளரிடம் கூற, அவர் சற்றே தயங்கினார்.

“யோவ், சொல்றேன்ல… காது கேக்குதா இல்லையா? அவளையும் சேர்த்து வண்டியில ஏத்து”

வலுக்கட்டாயமாக பார்வதியையும் சாமுவையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் இரவு முழுவதும் கண்டிகை காவல் நிலையத்தில் தரையில் அமர வைத்தனர். உழைப்பும் கண்ணியமான வாழ்க்கையும் மட்டுமே பார்த்துப் பழகிப் போயிருந்த அன்புவின் பெற்றோருக்கு அரச அதிகாரத்தைச் சுமந்திருந்த காவல் நிலையமும் அந்த இரவும் பேரச்சத்தைக் கொடுத்தன. அவர்கள் நடுக்கத்தோடே அமர்ந்திருந்தார்கள். செய்தியறிந்து அன்பு மட்டும் தன் பெற்றோருக்காக மறுநாள் காலை காவல் நிலையத்தில் ஆஜரானான்.

கண்டிகை காவல் நிலையத்தின் அந்தச் சிறிய அறைக்குள், காலைச் சூரியன் பல்வேறு ரகசியங்களைச் சுமந்துகொண்டு நுழைந்தது. அன்பு ஆஜரானபோது, அவன் பெற்றோரின் கண்களில் குஞ்சுகளோடு வேடனிடம் சிக்கிக்கொண்ட பறவையின் தவிப்பும் துயரமும் தெரிந்தன. ஆனால், அங்கிருந்த காவலர்களின் முகங்களில் விசித்திரமான மௌனம் நிலவியது. அது விசாரிக்கத் துடிக்கும் மௌனமல்ல, ஏற்கெனவே தீர்ப்பு எழுதி முடிக்கப்பட்ட ஒரு கோப்பின் இறுதிப் பக்கம் போன்ற மௌனம். பெற்றோர் உறவினரின் முன்னிலையிலேயே அன்புவை டாடா சுமோவில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள். கொஞ்ச தூரம் சென்றவுடன் அன்புவின் கண்களும் கைகளும் கட்டப்பட்டன. அவன் வாயினுள் துணி அடைக்கப்பட்டது. இப்போது அவன் இருண்ட உலகிற்குள் தள்ளப்பட்டான். அவர்கள் வந்து சேர்ந்தது ஒரு காட்டுப்பகுதி என்பதைப் பறவைகளின் கீச்சொலிகளையும் காலுக்கடியில் நசுங்கும் சருகுகளின் குவியல்களையும் வைத்து அன்பு புரிந்துகொண்டான். அங்கே வீசிய காற்று காய்ந்த சருகுகளின் மரண ஓலத்தைச் சுமந்து திரிந்தது. காடு எப்போதும் இரகசியங்களை வைத்திருக்கும் குறிப்பாக அரசதிகாரத்தின் இரகசியங்களை.

அன்புவைச் சுற்றியிருந்த மிருகங்கள் அவனைத் தாக்கத் தொடங்கின. உதைகளும் குத்துகளும் அவன் உடல் முழுவதும் விழுந்தன. துணி அடைக்கப்பட்ட வாயினுள் இருந்து வரும் கதறல்களைக் கேட்டு மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகளும் அவன் மீது விழும் அடி உதையின் அதிர்வுகளை உணர்ந்து புதரில் ஒளிந்திருக்கும் பாம்புகளும் பரிதாபப்பட்டன. காவல் மிருகங்களின் கைகளும் கால்களும் ஓய்வெடுப்பதற்காகச் சற்று இடைவெளி விடப்பட்டது. அன்புவின் கதறல்கள் இப்போது  விசும்பல்களாக மாறியிருந்தன.

கொஞ்சம் நேரம் கழித்து சத்தமில்லாமல் இரண்டு கற்கள் அவன் வலது காலுக்கடியில் வைக்கப்பட்டன. ஈரக்கோணி ஒன்றை அவனது கால்களில் சுற்றினார்கள். என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் அன்புவின் ஒவ்வொரு நரம்பும் அச்சத்தில் அதிர்ந்தன.  அடுத்த நொடி… ஒரு கனமான இரும்புத் தடியின் வீச்சு, எலும்புகள் உடையும் சத்தம், அந்தக் காட்டின் மௌனத்தைக் கிழித்தது. அவனது வலது முழங்கால் நுனி தொங்கியது. ரத்தம் ஈரக்கோணியை நனைத்து மண்ணில் பாய்ந்தது.

கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அவன் மீண்டும் டாடா சுமோவில் தூக்கி எறியப்பட்டான். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் நிற்பதற்கு மேம்போக்காக ஒரு கட்டுப் போடப்பட்டது. அந்தக் காயத்தோடே அவன் மாவட்ட நடுவர் முன்னிலையில் நிறுத்தப்பட்டான். போலீஸாரிடமிருந்து தப்பிக்கும் வழியில் தடுக்கி விழுந்து கால் முறிந்ததாகக் காரணம் சொல்லப்பட்டது. எவ்விதக் கேள்விகளுமின்றி இவற்றை ஏற்றுக்கொள்வது மருத்துவர்களுக்கும் நடுவர்களுக்கும் வழக்கமாகிப் போனது. அன்புவைப் பதினைந்து நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார் நடுவர். இவ்வளவு காயங்களுடன் அன்புவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது புழல் சிறை நிர்வாகம். அதனால் சட்டப்படி சென்னை ஸ்டேன்லி மருத்துவமனையில் அன்பு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டான்.

மருத்துவமனையின் அந்தப் பழைய வார்டில், இரும்புப் படுக்கையின் ஓரத்தில் அவனது உடைந்த வலது கால் கட்டோடு கனத்துக் கிடந்தது. ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த பிரமாண்டமான வேப்பமரம், வெயிலைத் தடுத்து அவனுக்கு நிழல் கொடுத்தாலும், வார்டுக்குள் வீசிய காற்றில் பினாயில் நெடியும், மனித உடல்களின் வேர்வை வாசமுமே கலந்திருந்தன. காலிலும் உடல் முழுவதும் வலி இருந்தாலும் போலீஸ் மிருகங்கள் ஏற்படுத்திய அச்சமே அனைத்தையும் விட அன்புவுக்கு அதிக வலியாக இருந்தது.

மறுநாள் காலை தினையூர் சேரி இளைஞர்கள் ஆவேசத்தோடு ஸ்டான்லி மருத்துவமனையில் கூடினார்கள். இந்தத் தகவல் அறிந்து பத்துக்கும் மேற்பட்ட காவலர்களும் அங்கே குவிக்கப்பட்டார்கள். நீண்ட சட்ட விவாதத்திற்குப் பிறகு சாமு மட்டும் தன் மகனைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்.

அவர் பார்த்தது தன் மகனை அல்ல, சிதைக்கப்பட்ட அவரின் எதிகாலத்தை, அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையை. சாமுவின் கண்களில் இப்போது கண்ணீர் வரவில்லை. அவை அதீத கோபம், அதீத துக்கம் கலந்த உணர்வில் வறண்டு கிடந்தன. அருகில் சென்ற தந்தையிடம்  அன்பு மெல்லிய குரலில், காட்டில் நடந்த அந்த நரகத்தை, ஈரக்கோணியின் கொடூரத்தை விவரித்தான். இதைக் கண்டு அதிர்ந்த காவலர்கள், பார்த்தது போதும் என சாமுவை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பினர். இரவு முழுவதும் மருத்துவமனை வளாகத்திலேயே சேரியர் உறங்காமல் குழுமிக் கிடந்தனர். அன்புவின் தாய் இரவு முழுவதும் தேம்பிக்கொண்டிருந்தாள்.

மறுநாள் காலை, சூரியன் உதிப்பதற்கு முன்பே ஒரு செய்தி வந்தது. “அன்பு இறந்துவிட்டான்.” சேரியரின் ஒப்பாரிகள் மருத்துவமனையின் சுவர்களெங்கும் பட்டு எதிரொளித்தன. பார்வதியின் அழுகுரலே அதில் அதிகம் ஒலித்தது.

முன்னிலும் அதிகமாக இப்போது காவலர்கள் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர்.

“ப்ரசீஜர் எல்லாம் முடிஞ்சிடுச்சி. பாடிய வாங்கிக்கோங்க” எனக் காவல் அதிகாரி ஒருவர் சாமுவிடம் வந்து கூற, அவரைச் சுற்றிக் குழுமியிருந்த சேரியரில் ஒருவர் ஆவேசமாக,

“அப்பாவி பையன அடிச்சிக் கொன்னுட்டு பாடிய வாங்கிக்கோன்னா எப்படி முடியும்? எங்க புள்ளைய அடிச்சிக் கொன்ன அந்த போலீஸ்காரனுங்கள கைது பண்ணாம எங்க புள்ளைய நாங்க வாங்கமாட்டோம்!” எனக் கூற,

“இங்கப் பாருங்க, உங்க பையன யாரும் கொல்லல. அவரு ஒடம்பு முடியாமதான் இறந்துட்டாரு” என வஞ்சகத்தை அமைதியாகக் கூறியதும் மீண்டும் ஆவேசமானது சேரியரின் கூட்டம்.

“கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவையா? நல்லா இருந்த எங்க புள்ளைய எங்க கண்ணெதெர்க்க வண்டியில கூட்டிட்டுப் போயி அடிச்சிச் சித்திரவத பண்ணி, காலை ஒடிச்சிக் கொன்னதில்லாம, எங்க புள்ளைக்கு ஒடம்பு முடியிலங்கிறீங்களா?”

கூட்டத்திலிருந்து முந்திக்கொண்டு இன்னொரு இளைஞர் ஆவேசமாக வந்து,

“இங்க பாருங்க, அன்புவ அடிச்சிக் கொன்ன போலீஸ்காரங்களக் கைது பண்ணாம நாங்க பாடிய வாங்க மாட்டோம்”

“பாடிய நீங்க வாங்கலன்னா அது ஆஸ்பத்திரியில அழுகித்தாங்க போகும்” என மீண்டும் அந்த அதிகாரி கூற,

கூட்டத்தின் சலசலப்பை மீறி கோபத்தோடு எழுந்தது சாமுவின் குரல்

“அழுகட்டும்… ஏம்புள்ளயோட உயிரே போனதுக்கப்புறம் ஒடம்பு இருந்தா என்னா, அழுகுனா என்னா? அந்தக் கொலகார போலீஸ்காரனுங்களக் கைது பண்ணாம ஏ புள்ளையோட ஒடம்பு அழுகுதுன்னா, அழுகுறது ஏ புள்ளையோட ஒடம்பு இல்ல, உங்க சட்டமும் சர்க்காரும்தான்!”

 

படையல்

சிவகங்கை மாவட்டம் மடப்பூரைச் சேர்ந்த ஆகாஷ் எனும் பட்டியல் சமூகத்துப் பொறியியல் பட்டதாரி இளைஞன் சாலையில் நடந்து சென்றவர்களை ஆயுதங்களால் தாக்கியதாகக் கூறி மானாமதுரை காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்ததில் அவர் 2026 மார்ச் 8 அன்று படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய காவலர்களைக் கைது செய்யக் கோரி, நூறு நாட்களுக்கும் மேலாக அவரின் உடலை வாங்காமல் போராடிவரும் மக்களுக்கு…

 

l solomonmpipf@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger