நள்ளிரவு 2 மணி இருக்கும். நல்ல நிலா வெளிச்சம், அதற்கேற்றாற்போல் பனி பொழிந்துகொண்டிருந்தது. சேர்ந்தனூர் சேரியையும் ஊரையும் இணைக்கும் ஒரு தார் ரோடு கரும்புக் கொல்லிக்கு நடுவில் அமைந்திருந்தது. ரோட்டில் எங்கு பார்த்தாலும் செங்கற்கள் சிதறிக் கிடந்தன. ரோட்டின் வலதுபுறமும் இடதுபுறமும் நன்கு வளர்ந்த கரும்புகள், அடர்த்தியான சோலைகள். அதனுள் முகத்தில் வீக்கங்களுடனும் காயங்களுடனும் அதீத பயத்தில் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் 11 மாணவர்கள் ஒரே மாதிரி நீல நிறக் குழுச் சட்டை அணிந்திருந்தார்கள். அறிவு, சுதாகர் இருவரின் முகம் முழுதும் மிளகாய்த் தூள் அப்பியிருந்தது. கண்களிலும் மூக்கிலும் நீர் வழிய வழிய இருவரும் அழுதுகொண்டே நுமிட்டிக்கொண்டிருந்தார்கள்.
அறிவு தேம்பிக்கொண்டே மெதுவாக “டேய் சந்துரு… உன்னோட சட்டையால என் கண்ண தொடச்சி வுடுடா” என்று சொல்ல, சுதாகரும் அதேபோல் கமலேஷிடம் கேட்கிறான். முகச் சுருக்கங்களிலும் இடுக்குகளிலும் இறுகப் படிந்திருந்தவற்றை அகற்ற சற்று அழுத்தித் தேய்க்க வேண்டியிருந்தது. நன்கு சுண்டிய குழம்பின் எச்சங்கள் வானலியில் படிந்திருப்பதை அகற்ற எவ்வளவு பலம் தேவையோ அவ்வளவு பலத்தோடு தேய்க்க வேண்டியிருந்தது. இருவரும் கண் எரிச்சல் தாங்காமல் வாயில் கை வைத்துச் சத்தம் கேட்காத அளவிற்குக் கதறுகிறார்கள். இருவருக்கும் மூக்கெல்லாம் சளி, கையெல்லாம் எச்சில். சளியை உறிந்துவிட்டு முணுமுணுத்தான் அறிவு, “கரெக்டா… அவங்க வீட்டுக் கதவு கிட்ட போட்டு செம அடி அடிக்குறோம் நானும் சுதாகரும். திடீருன்னு கதவு பின்னாலருந்து அவங்க அம்மா பச்ச கலர் பக்கெட்டுல கையவுட்டு கொத்தா மொளகா தூள வாரி விசுருனாங்க பாரு… அய்யோ மூக்குள்ளலா எரியுதுடா…” சுதாகரும் அவனுடன் சேர்ந்துகொண்டான். “எனக்கு மூஞ்செல்லாம் மொளகா தூளு… கண்ணுமுன்னு தெரியாம நா வேகமா வெளில ஓடியாந்தம்பாரு…” இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது சுதாகரின் கண்ணைத் துடைத்துக்கொண்டிருந்த கமலேஷ், தெரியாமல் அவன் முட்டியில் கை வைத்துவிடுகிறான். சுதாகர் வலியில் அடித்தொண்டையிலிருந்து கத்துகிறான். ஒருசிலர் அவன் வாயைப் பொத்துகிறார்கள். அவன் கண்ணைப் பிதுக்கி அவர்களைப் பார்க்கிறான். கிரீச்… கிரீச்… சத்தத்துடன் அமைதியாகிறது அந்த நிலம்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





