ஹோல்டன் நியூயார்க்கில் மட்டுமல்ல…

ச.முத்துக்குமாரி

‘The Catcher in the Rye’ நாவல் வாசித்திருக்கிறீர்களா?

ஜெ.டி.சாலிஞ்சர் எழுதிய நாவல். 1951இல் வெளிவந்தது. புத்தகம் வெளியான நாள் முதல் இன்றுவரை அமெரிக்காவில் பல இடங்களில் அவ்வப்போது தடை செய்யப்படுவதையும் பின்னர் அத்தடை நீக்கப்படுவதையும் எதிர்கொள்கிறது.

பதின்பருவ மாணவர்கள் இப்புத்தகத்தை வாசித்துவிடக்கூடாது என்று பெரும்பாலான பாரம்பரிய மரபுவாதிகள் பதறுகின்றனர்.

அப்படி எதைப் பற்றி இப்புத்தகம் பேசுகிறது?

சாலிஞ்சர்,  பதின்பருவ மாணவனின் அக உலகை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார். ஹோல்டனின் அனுபவங்கள் மூலம் தனிமை, பள்ளி மற்றும் சமூகத்தின் போலித்தனம், அந்நியமாதல், ‘வளர்வது’ குறித்த அச்சம், சுயஅடையாளத் தேடல், அகச்சோர்வு, குழந்தையாக இருக்க விரும்புவது எனப் பதின்பருவ மனதின் அகப்போராட்டங்களை அசலாகச் சித்திரித்திருக்கிறார்.

ஆங்கிலம் தவிர்த்து எல்லாப் பாடங்களிலும் ஹோல்டன் தோல்வியடைகிறான். அதனால் பள்ளியை விட்டு நீக்கப்படுகிறான். இச்செய்தி தன் பெற்றோரைச் சென்று சேரும்வரை நியூயார்க் நகரில் தனியாகச் சுற்றுகிறான். சிகரெட் பிடிக்கிறான். கெட்ட வார்த்தைகள் சரளமாகப் பேசுகிறான். சிறுவயது தோழியைத் தன்னுடன் வந்துவிடுமாறு அழைக்கிறான்.

அதேசமயம், தான் இழந்த தன் சிறுவயது சந்தோசங்களையும் நினைத்துப் பார்க்கிறான். பெரியவர்கள் உலகின் போலிகளை அருவருப்பாக உணர்கிறான்.  தான் சிறுவனா அல்லது வளர்ந்தவனா என்ற மனப்போராட்டத்தில் இருக்கிறான். பள்ளி அவனைப் புரிந்துகொள்ளவில்லை. அவன் வெறும் மதிப்பெண்ணாக மட்டுமே பார்க்கப்படுகிறான். வீடும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. தனிமையில் உழல்கிறான்.

இந்த நாவலில் வரும் ஹோல்டன் ஏதோ அமெரிக்காவில் மட்டும் இல்லை. இங்கே நம்மிடையேயும் இருக்கிறான். பள்ளி நேரத்தில் ஆசிரியராக உள்ளே இருக்கும்போது ஹோல்டன் போன்ற மாணவர்களின் வெளியுலகம் எனக்குத் தெரியவில்லை. வாசிப்பு இயக்கத்திற்காகப் பள்ளிகளுக்குக் கதைகள் சேகரிக்கச் செல்கையில், பல ஊர்களில், சாலைகளில், பொது இடங்களில் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.

பள்ளிச் சீருடையில் மாணவர்கள் பள்ளி செல்லாமல் குழுவாக ஆங்காங்கே அமர்ந்திருக்கும் காட்சியை இன்றும் நீங்கள் பார்க்கலாம்.  பூங்கா, கடற்கரை, மைதானம் எனப் பொது இடங்களில் சுற்றுகிறார்கள். கையில் செல்போன். வாயில் சிகரெட் அல்லது மது அருந்திய வாடை.

‘நம் மாணவர்களை நாம் கைவிட்டுவிட்டோமா’ என்று மனம் பதைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி ஊரில் 16, 17 வயது மாணவர்கள் தங்களை விட வயதில் சிறிய மாணவர்களைப் போதையில்  தாக்கிய காணொளி வெளிவந்தது. ஏன் அடித்தார்கள்? தங்கள் போதைப் பழக்கத்தைப் பெற்றோரிடம் சொன்னார்களாம்.

திருநெல்வேலியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சர்வசாதாரணமாக வகுப்பிற்குள் மது குடிக்கிறார்கள்.

சென்னை-திருத்தணி இரயிலில், பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் வட மாநிலத் தொழிலாளர் ஒருவரை மதுபாட்டில் கொண்டு கொடூரமாகத் தாக்கி, அதைக் காணொளியாகப் பதிவிடுகிறார்கள்.

ஏன் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள்?

மது, கஞ்சா எளிதில் கிடைக்கிறது. அதுதான் முக்கியமான காரணம்.  தொலைதூரக் கிராமங்களுக்கு நேரத்திற்குப் பேருந்து இல்லை. ஆனால், கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது. காவல்துறையினர் பள்ளி மாணவர்களுக்குக் கஞ்சா விற்பவர்களைக் கைது செய்யும் செய்திகள் தினசரி செய்தித்தாள்களில் பார்க்கிறோம்.

எளிதில் கிடைப்பதால் பதின்பருவ வயதிற்குரிய ஆர்வத்தில் முயற்சித்துப் பார்க்கிறார்கள். பின் அதுவே அவர்களைப் புதைகுழிக்குள் தள்ளிவிடுகிறது.

சமீபத்தில் எட்டாம் வகுப்பு மாணவன், “சீக்கிரம் ஒரு பீர் அடித்துப் பார்க்க வேண்டும்” என்று சொல்லியதாக என்னிடம் புகார் வந்தது.

இன்றைய கஞ்சா வியாபாரிகளின் நுகர்வோர் பள்ளி மாணவர்களே. அரசு சாரா சமூகக் கல்வி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு, தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாணவரின் சராசரி வயது 12.5 என்கிறது.

இவர்கள் பெரும்பாலும் வியாபாரம் செய்யும் இடம் மாணவர்கள் எளிதாக அணுகும் பெட்டிக்கடைகள். சில சமயங்களில் நேரடியாக விற்பது. சில வருடங்களுக்கு முன்பு சென்னை தனியார் பள்ளியில் நான் பணிபுரிந்தபோது பணக்கார மாணவர்களால் மட்டுமே கஞ்சா போன்றவற்றை வாங்கிப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், இப்போது அரசுப் பள்ளிகள் இந்த வியாபாரிகளின் இலக்காக மாறிவருவது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில், சந்தோசமாக இருக்கும்போது குடிக்க வேண்டும் என்பது மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்தப்படுகிறது. உலக சினிமாக்களில் 18 வயதுக்குட்பட்டோர் சிகரெட், மதுவைக் கடையில் கேட்டால், வயதிற்குரிய அடையாள அட்டையைக் கேட்டு நெருக்கடி தருவது போன்ற காட்சி அமைக்கப்படுகிறது. அவர்களுக்கு இருக்கும் தார்மீகப் பொறுப்பு ஏன் நம் இயக்குநர்களுக்கு இல்லை? சமூக வலைதளங்களில் மது, போதைப் பொருள் தொடர்பான காணொளிகள் பதின்பருவ மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

குடும்ப அமைப்பும் வலுவாக இல்லை. அப்பாவிற்கு மது அருந்தும் பழக்கம் இருக்கும்போது இயல்பாகப் பிள்ளைகளும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவாக இருக்கிறார்கள். வகுப்பில் மாணவர்களிடம், “குடும்பமாக உட்கார்ந்து தினமும் யாரெல்லாம் பேசுகிறீர்கள்” என்ற கேள்விக்கு ஒரு மாணவி மட்டும் கை உயர்த்தினார். இன்று மாணவர்களைக் கண்காணிக்கும் சூழலில் பெற்றோர்கள் இருக்கிறார்களா? இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில் மாணவர்கள் தனிமையாக இருக்கும் நேரம் நிறைய கிடைக்கிறது. இந்தத் தனிமையைப் போக்கப் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள். மோசமான குடும்பச் சூழலில் சில மாணவர்கள் விட்டேத்தியாக இருக்கும் அவலத்தையும் பார்க்கிறோம்.

கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் குடும்பங்களைச் சிதைக்கின்றன. அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இல்லை. வறுமையும் புறக்கணிப்பும் மாணவர்களைப் பலவீனமாக்கி போதைப்பொருள் வழி தங்களின் அடையாளங்களைத் தேடிக்கொள்கிறார்கள்.

இன்றைய பாடத்திட்டங்கள் வகுப்பறையில் மாணவர்களை ஈர்க்கவில்லை. ஆசிரியர்களின் பழைய பாணியிலான பாடம் நடத்தும் முறையால் அவர்களை வகுப்பறைக்குள் தக்கவைக்க முடியவில்லை. வகுப்பில் அடித்தல், மனரீதியான துன்புறுத்தல் போன்றவை அவர்களைப் பள்ளியை விட்டே துரத்துகின்றன.

ஒருநாள் பூங்காவில் பள்ளிச் சீருடையுடன் இருந்த ஒரு மாணவனிடம் சும்மா பேச்சுக் கொடுத்தேன். சாதாரணமாகப் பேசினேன். கணக்கு வீட்டுப்பாடம் முடிக்காததால், பயந்துகொண்டு பள்ளிக்குப் போகவில்லை என்று சொன்னார். கணக்கு சுத்தமாகப் புரியவில்லை. கேட்டாலும் சொல்லித்தரவில்லை. தினமும் வகுப்பில் அடிவாங்குவதாகச் சொன்னார். அதனால் பள்ளிக்கு ‘கட்’ அடித்ததாகச் சொன்னார்.

அறிவுரை சொல்லவில்லை. கிளம்பிவிட்டேன். இப்படிச் சில மாணவர்களுக்குப் பள்ளி அந்நிய இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு மாணவர் பள்ளிக்குள் இல்லாவிட்டால், அடுத்து என்ன ஆகும் என்று சொல்ல வேண்டியதில்லை. மாணவர்களைப் பள்ளிக்குள் தக்க வைத்துக்கொள்வது ஆசிரியரின் பொறுப்பு. மேலும் மது, போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களின் நடத்தை மாற்றத்தை ஆசிரியராலேயே முதலில் உணர முடியும். அப்படி உணரும் ஆசிரியருக்குப் பெற்றோரின் ஆதரவு எந்த அளவு இருக்கும் என்று சொல்ல முடியாது.  இந்த இடத்தில்தான் அரசின் தலையீடு தேவைப்படுகிறது. மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்களை என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தர உடனடி வாய்ப்பு என்ன இருக்கிறது? அதற்கான முறைசார் கட்டமைப்பு உள்ளதா? இவை கேள்விகளாக மட்டுமே உள்ளன.

இப்போது நாம் மீண்டும் நாவலில் வரும் பதின்பருவ மாணவன் ஹோல்டன் கதாபாத்திரத்துடன் சமகால மாணவர்களை ஒப்பீடு செய்வோம்.

மாணவர்கள் தங்களை எதனுடன் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்?

அந்நியமாதலுடனும் தனிமையுடனும். ஹோல்டனைப் போலவே பல மாணவர்கள் தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதாகவோ அல்லது நண்பர்கள், குடும்பம், பள்ளி வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டதாகவோ உணர்கிறார்கள். பொருந்திப் போக வேண்டும் என்ற அழுத்தமும், சக மாணவர்களின் அங்கீகாரம் பெறவும், சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படவும் தங்களின் உண்மையான விருப்பங்களையும் தனித்துவத்தையும் மறைத்துக்கொண்டு நடக்க வேண்டிய சூழல் பல மாணவர்களுக்கு ஏற்படுகிறது.

அடையாளத்தைத் தேடுதல்

ஹோல்டன் தான் யார், தனக்குரிய இடம் எது என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான். இது பல இளம் பருவத்தினர் இன்றும் எதிர்கொள்ளும் அடையாளப் போராட்டங்களுடன் பொருந்துகிறது.

இத்தகைய அடையாளச் சிக்கல்களைத் தீர்க்கும் இடமாகப் பள்ளிக் கட்டமைப்பு இருக்கிறதா என்பதே கேள்வியாக இருக்கிறது.

ஹோல்டனைப் பற்றிப் பேசும்போது நாம் ஒரு நாவல் கதாபாத்திரத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஒவ்வொரு நாளும் வகுப்பறையின் கடைசி பெஞ்சில் அமைதியாக அமர்ந்திருக்கும் மாணவனைப் பற்றியும், பள்ளி நேரத்தில் பேருந்து நிலையத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் சிறுவனைப் பற்றியும், வீட்டில் யாரிடமும் பேச முடியாமல் செல்போன் திரைக்குள் தன்னை மறைத்துக்கொள்ளும் பதின்பருவ மனதைப் பற்றியும் பேசுகிறோம்.

போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை நாம் பார்க்கிறோம். பள்ளியைத் தவிர்க்கும் மாணவர்களையும் பார்க்கிறோம். ஆனால், அவர்கள் எப்போது தனிமையில் விழுந்தார்கள்? எப்போது பள்ளி அவர்களுக்கு அந்நியமான இடமாக மாறியது? எப்போது குடும்பம் உரையாடலை இழந்தது? என்ற கேள்விகளை அரிதாகவே கேட்கிறோம்.

ஹோல்டனைப் போலவே இன்றைய மாணவர்கள் பலரும் “என்னை யாராவது புரிந்துகொள்கிறார்களா?” என்ற கேள்வியுடன்தான் வாழ்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் பள்ளி, குடும்பம், சமூகம் இணைந்து பதில் சொல்லத் தவறும்போது, அந்த வெற்றிடத்தைப் போதைப்பொருளும், வன்முறையும், தவறான நட்புகளும் நிரப்பத் தொடங்குகின்றன.

உடனடியாகச் செய்ய வேண்டியது

சமீபத்தில் பொறுப்பேற்ற புதிய அரசு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றியிருப்பது முக்கியமான செயற்பாடு. கஞ்சா உள்ளிட்ட பிற போதைப்பொருட்களின் விற்பனைச் சங்கிலியையும் அரசு தீவிரமாகக் கண்காணித்து, அவை மாணவர்களின் கைகளுக்குச் சென்று சேராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். போதைக்கு எதிரான புகார்களை அளிக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பக்கம் அரசு உறுதியாக நிற்க வேண்டும்.

அதேநேரத்தில், போதைப்பழக்கத்திற்கு ஆளாகும் மாணவர்களை வெறும் குற்றவாளிகளாகப் பார்க்காமல், உதவி தேவைப்படும் குழந்தைகளாக அணுக வேண்டும். அத்தகைய மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நிரந்தர உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாணவர்களின் மனநலம், போதைப்பழக்கம், வன்முறைப் போக்குகள் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தலையிடும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குடும்பங்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஏனெனில், மாணவர்களைப் போதையிலிருந்து காப்பாற்றுவது பள்ளியின் அல்லது காவல்துறையின் பொறுப்பு மட்டுமல்ல; குடும்பம், பள்ளி, சமூகம், அரசு ஆகிய அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டிய சமூகப் பொறுப்பாகும்.

ஒரு சமூகத்தின் எதிர்காலம், அதன் மாணவர்கள் எத்தனை மதிப்பெண் பெறுகிறார்கள் என்பதில் மட்டும் இல்லை; அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாகவும், புரிந்துகொள்ளப்பட்டவர்களாகவும், நம்பிக்கையுடனும் வளர்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

எனவே இன்று நம் முன் இருக்கும் மிக முக்கியமான கேள்வி, “மாணவர்களை எப்படிக் கட்டுப்படுத்துவது?” என்பதல்ல. “ஒரு மாணவன் தனிமையில் விழுவதற்கு முன் அவனை யார் கைப்பிடித்து நிறுத்தப் போகிறார்கள்?” என்பதுதான்.

அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் வரை, ஹோல்டன் கால்ஃபீல்டு நியூயார்க் நகரின் தெருக்களில் மட்டுமல்ல; நம் பள்ளிகளின் வழித்தடங்களிலும், பேருந்து நிலையங்களிலும், பூங்காக்களிலும் தொடர்ந்து நடந்துகொண்டே இருப்பான்.

m muthukumari.15@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger