எழுத்தே எதிர்ப்பு

சா.தேவதாஸ்

அஞ்சலி: பூமணி (1947 – 2026)

 

“வாழ்க்கை ஒரு தூய பிழம்பு. நமக்குள்ளே இருக்கும் புலப்படாத சூரியனால் வாழ்கிறோம். நாம் வெளியே தேடும் அதிசயங்களை நமக்குள்ளே கொண்டிருக்கிறோம்.”

– தாமஸ் பிரவுண்

பூ.மாணிக்கவாசகம் என்னும் பூமணி 2014இல் நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். அதே ஆண்டில் மொழிபெயர்ப்புக்காக எனக்கும் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இருவரும் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். அத்துடன் எனக்கு அடுத்த மாவட்டத்துக்காரர். அரசுப் பணியில் இருக்கும் காலகட்டத்திலிருந்தே எழுத்தில் ஈடுபாடு காட்டியவர்கள் நாங்கள். அவருக்கு எழுத்தின் வாயிலாக ஓர் அஞ்சலி செலுத்துகிறேன்.

கி.ராஜநாராயணன் கரிசல் எழுத்தை முன்னின்று நடத்தியபோது அவரை முன்னத்தி ஏராக மதித்து இயங்கியவர் பூமணி. ‘ரீதி’ என்னும் தொகுப்பு சிறுகதை வடிவத்தை நோக்கியதாக, நடைச்சித்திரங்களாக விளங்கும். ‘வெக்கை’யில் நிலக்கிழாரைக் கொலை செய்துவிட்டு மறைந்து திரியும் இருவர் வாழ்க்கை விவரிக்கப்படும். ‘பிறகு’ நாவல் அழகிரிப் பகடை என்னும் தலைமைப் பாத்திரத்தை முன்வைத்து தலைசிறந்த ஒரு படைப்பாக வளர்ந்து செல்லும். சுதந்திரம் கிடைத்து 25 ஆண்டுகள் ஆகியும் அடித்தள மக்கள் வாழ்வில் எவ்வித மாற்றமும் வரவில்லை என்று கூறும்.

1050 பக்கங்களில் வெளியான ‘அஞ்ஞாடி’ இதிகாச பரிமாணமமுடைய நாவல். பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண்டி, வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த மாரி ஆகிய இருவருக்கிடையிலான நட்பு-நெருக்கத்தைச் சொல்லி, மறவர்களின் திருட்டு-கொள்ளையை எதிர்ப்பதுடன், அவர்களுக்குச் சவாலாய் விளங்கும் கருத்தையன் நொண்டியின் தீரத்தைத் தொட்டு, சமூக நீதி தேடிய நாடார்களின் எழுச்சியைக் கலவரத்தால் ஒடுக்க முயன்ற நிகழ்வுகளை சிவகாசியிலும் கழுகுமலை கமுதியிலும் விவரிக்கும். ஒருவகையில் இது புதினம், இன்னொருவகையில் ஆவணம்.

அஞ்ஞாடி என்பது அம்மாவைக் குறிக்கும். அஞ்ஞாப் பள்ளர், ஆத்தா பள்ளர், அம்மா பள்ளர் எனத் தாயை விளிக்கும் பெயர்களாலேயே பள்ளர் சமூகத்தினர் அடையாளப்படுத்துகின்றனர். இச்சொற்களின் மூலச்சொல் அஞ்ஞை. சிலம்பில் இடம்பெறுகிறது. தசக் கூலி, ஒவணியம், அறுமுறுக்கு என அதிகம் புழக்கத்தில் இல்லாத சொற்கள் இந்நாவலில் புழங்கும். “ஒடையவன் இல்லாத சீல முழம் கட்டதான்”, “பங்குனின்னு பாக்கிறதுமில்லை. சித்திரன்னு சிறுக்கிறதுமில்லை”, “அணிலு கொப்புலதான் ஆம கிணத்திலதான்” என வகைவகையான பழமொழிகள் பேசப்படுகின்றன.

யதார்த்த தளத்திலே பதிவாகும் இந்நாவலின் சலிப்பைப் போக்க, ஆண்டியிடம் மாரி போடும் கதைகள் மாயக்கற்பனைகளைக் கொண்டிருக்கும். கழுகுமலைக் கோயில் ஒரு கலவரத்தில் எரியும். தகிக்கும் கனலில் உள்ளே இருக்க முடியாத மாதா புகலிடம் கேட்டு வருகிறாள். முருகனும் வள்ளியும் ஆதரவாய்ப் பேசி, மயில் வாகனத்தில் மாதாவைப் பத்திரமாய் அனுப்பி வைக்கின்றனர். கோயிலுக்குள் சென்று வழிபட அனுமதியில்லாத பள்ளக்குடி பெண்கள் மாதாவையும் முருகனையும் பார்த்துச் சந்தோசப்பட்டாலும் பயப்படவும் செய்கின்றனர். பேய்-பிசாசுகள் இடம்பெறுகின்றன.

பள்ளர் சமூகத்தின் வாழ்க்கையே பிரதானம் எனினும், அவர்களை அடக்கிவைக்கும் எண்ணத்தில் மறவர் செய்யும் திருட்டுகளும் கொள்ளைகளும் சொல்லப்படுவதும், கழுகுமலையில் சமணர்கள் தங்கி துறவு வாழ்க்கை மேற்கொள்வதும், சில மதத்தவரின் வழிபாட்டு முறைகள் எடுத்துரைக்கப்படுவதும், கலவரங்களை முன்வைப்பதும், அவற்றை அடக்கி இயல்புநிலைக்குக் கொண்டு வர முற்படும் அரசாங்க நடவடிக்கைகளை விளக்குவதும் என்றவாறு ஒவ்வொரு தரப்பினரின் குரல்களிலும் எடுத்துரைப்பு வளர்த்துச் சொல்கிறது. சுந்தர நாயக்கரின் அகவேதனை மட்டுமின்றி, எதிர்நிலையில் மங்கத்தாயின் நியாயமும் பதிவாகிறது. கூடவே நாயக்கரின் துறவு போலியானது என்று பத்ருஹரி போலப் பரிகசிக்கும் நாயின் குரலும்.

“முன்னால் விதை வீசி நடக்கும் கை கூப்பிடக் கூடப் பின்னால் மாடுகள் கழுத்துப் பாரம் தோணாமல் அசைந்து நடக்கும். கலப்பைச் சீண்டலுக்குப் பூரித்து விரியும் மண் மீது பூமிதியில் நடக்கும் பெண்கள் பயறுகளால் கோலம் போடுவார்கள். வேலைய வெருசனா முடிச்சுக்கங்க. மழையைக் கூப்புடப்போறேன் என்று கள்ள வெயில் அடிக்கடி கண்சிமிட்டும்.”

‘பிறகு’ நாவலில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்களும் ‘வெக்கை’யில் கலகக்குரலும் ‘அஞ்ஞாடி’யில் வரலாற்றின் குரலும் ஒலிக்கும் என்பார் உதயசங்கர்.

பட்டியலினத்தவர்களின் வாழ்க்கையைப் பேசினாலும் அதில் தலித் அரசியல் இருக்க வேண்டாம் என்ற நிலைப்பாடு பூமணியினுடையது. தலித் அரசியலிலும் அவருக்கு உடன்பாடு இல்லை.

இது Politically not correct என்று சொல்லிவிடலாம். ஆனால், அவர் ஏன் தன் நிலைப்பாட்டில் உறுதிபட இருக்கிறார்? எழுத்து துல்லியமாகப் பதியப்பட்டுவிட்டால் போதும். அதுவே விழிப்புணர்வைத் தூண்டிப் பேச வேண்டிய அரசியலைப் பேசிவிடும் என்று அவர் எண்ணியிருக்கலாம்.

போலந்து எழுத்தாளர் ஸ்லவோமிர் ம்ரோஸெக் என்பவரின் அங்கதக் கதைகளை அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இக்கதைகள் பற்றி அவர் கூறுவது: “இவரது கதைகளைப் படித்து முடித்த பின் ஒரு சோகம் கலந்த சிரிப்பும் கோபமும் மனதில் அலையடிக்கிறது. இவர் தூக்கிப் பிடிக்கும் மனச் சுதந்திரப் பதாகையை நோக்கி கைகள் உயருகின்றன. இந்த உணர்வை ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் கிளரச் செய்வதும் இந்த முயற்சியின் வெற்றியாக இருக்க முடியும்.

ஒரு மிருகக்காட்சி சாலைக்கு யானை ஒதுக்கீடு செய்யப்பட்டும். ரப்பரில் காற்றடித்துப் பொம்மை யானையை நிறுத்திவிடுகின்றனர். திடீரென்று காற்றடிக்க, யானை மேலே எழுந்து அடுத்துள்ள தாவரவியல் பூங்காவில் விழுகிறது.ரப்பர் தோலில் முள் குத்தவே சுருங்கியும் போகிறது. இதைப் பார்த்து வெறுத்துப் போன பிள்ளைகள் படிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு ரவுடிகளாக மாறிவிட்டார்கள். அவர்கள் சாராயம் குடித்து, சன்னல்களை உடைத்துக்கொண்டு திரிவதாகத் தகவல். இப்பொழுதெல்லாம் அவர்களுக்கு யானைகளைப் பற்றிய நம்பிக்கையே போய்விட்டது…”

இத்தகைய கதைகளை வாசிக்கையில் தனக்கு ஏற்படும் அனுபவத்தைப் பூமணி இப்படிப் பதிவு செய்கிறார். “இவருடைய கற்பனைகளைப் படித்தால் தலை கிறுகிறுக்கிறது. அபத்தமாகவும் தெரிகிறது. வறுபடும் சோளப்பொரியாக எல்லாவற்றிலும் கிண்டல் துள்ளி விளையாடுகிறது. இவருக்கும் இளம் தலைமுறையைப் பற்றி, அதிலும் குழந்தைகளைப் பற்றி அளவற்ற அக்கறை. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கறை அவர்கள் மேல் படிந்துவிடக்கூடாதே என்ற பயமும் கவலையும் மேலோங்கியிருக்கிறது. அவர்களின் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கிறார். அதனால்தான் அவர்களைக் கொண்டே பெரியவர்களைக் கேலிக்குள்ளாக்குகிறார்…”

தீப்பெட்டித் தொழிற்சாலையில் பெண்களும் குழந்தைகளும் தம் கனவுகள் கலைந்து போக, வாழ்க்கைச் சித்திரம் மங்கிவருவதைக் கண்டு நிராசை கொள்வதை ‘கருவேலம் பூக்க’ளாகத் திரைப்படமாக்கினார். அவரது ‘வெக்கை’ நாவல் ‘அசுர’னாக வெற்றி மாறனால் திரைப்படமாக்கப்பட்டபோது ஒரு பிரதியை அப்படியே படமாக்க இயலாது என்பதை பூமணி ஏற்றுக்கொண்டாலும், சில அம்சங்கள் மாற்றப்பட்டதில் தனக்கு உடன்பாடில்லை என்றார்.

அடித்தள மக்களை மட்டுமல்ல, பிராமணர் வாழ்வும் தன்னால் சித்திரிக்கப்படக் கூடியதே என்று வறுமையில் வாடும் ஒரு புரோகிதர் வாழ்வை ‘நைவேத்ய’மாகத் தந்தார். “என்ன பண்றது, வயிறு காயறச்சே பிராமணக்குடியாவது சக்கிலியக் குடியாவது” என்றெழுதுவார்.

ஆதாரங்கள்

  • அஞ்ஞாடி, பூமணி, க்ரியா, 2012
  • யானை, ஸ்லவோமிர் ம்ரோஸெக், தமிழில்: பூமணி, புதுமைப்பித்தன் பதிப்பகம், 2001.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger