கொல்லா நிலம் நோக்கிச் சென்றேன் நான்

தாயர் அயூப் | மூலமொழி: ஜெர்மன் | தமிழாக்கம்: பிரசாந்தி சேகரம்

தாயர் அயூப் – ஏப்ரல் 1989 ஆண்டு சிரியா அலெப்போ (Aleppo) நகரத்தின் சந்து ஒன்றில் பிறந்தவர். இந்தப் பிரபஞ்சத்தை விடப் பெரிய சந்து அது. ஜூலை 2015இல் ஜெர்மனி கெம்நிட்ஸ் (Chemnitz) எனும் நகரை வந்தடைந்து, தற்போது பெர்லினில் வாழ்ந்துவருபவர். இப்போது, இந்த முழுப் பிரபஞ்சமும் ஒரு சந்தைவிடக் குறுகிவிட்டது.

இவ்வாறுதான் தொடங்குகிறது சிரியன் கவிஞரான தாயர் அயூப் கவிதைத் தொகுப்பின் முதல் பக்கம். தாயர் அயூப் ஜெர்மன் மற்றும் அரேபிய மொழிகளில் எழுதுபவர். அவரது கவிதைகள் போர், அடக்குமுறை, தாயகம், இழப்பு, புலம்பெயர்வு, விமான நிலையங்கள், படகுப் பயணங்கள், அகதி வாழ்வு என்பன பற்றிப் பேசுபவை. இதே பேசுபொருள்தான் எனது வாழ்வும். நாங்கள் இருவரும் நிலமற்றவர்கள். நினைக்காத ஒரு பொழுதில்தான் நானும் எனது நிலத்தைப் பிரிந்தேன். எல்லைகள் பல கடந்தேன். எனது நிலம் என்னைத் துரத்தியது. இன்னொரு நிலம் என்னை வா என்று அழைக்கவில்லை. போ என்றும் விரட்டவில்லை. மரம் எங்கிருந்தாலும், பறவைக்கு அது வீடல்லவா?

தாயர் அயூப் எழுதும் அலெப்போ என்னுடைய யாழ்ப்பாணமல்ல. ஆனாலும், அவருடைய வார்த்தைகளில் என் தாய்மொழியின் ஆழத்தில் புதைந்திருக்கும் மறக்கமுடியாத வலி எழுந்து நிற்கிறது – நான் வெளியேறிய ஊர்கள், கைவிடப்பட்ட ஒழுங்கைகள், இனித் திரும்பிச் செல்ல முடியாத பாடசாலை, வீடுகளின் விறாந்தைகள், நான் கால்பதித்த புதிய நிலத்தின் குளிர், என்னை விழுங்கிய பார்வைகள், என் தோலை உரசிய விரல்கள் எல்லாம் நினைவுகளாக, வலிகளாக மீண்டும் மேலெழுகின்றன. சிரியாவும் ஈழமும் வேறு வேறு நிலங்கள். வேறு வேறு காலங்கள். வேறு வேறு வரலாறு. வேறு வேறு வெப்பநிலைகள். ஆனால், புலம்பெயர்வின் மொழி என்பது இங்கு ஒன்றே. அது ஜெர்மன் மொழியிலும், அரேபிய மொழியிலும், தமிழிலும் ஒரே சுவடைத் தேடுகிறது –

இழந்த தெருவின் நிழல்
இழந்த குரலின் எதிரொலி 
இழந்த அனைத்தின் உயிர்மீட்பு

இந்தத் தமிழாக்கம் வெறும் மொழியாக்கம் மட்டுமல்ல. ஓர் அடையாளத்தைத் தேடும் பயணம். அயூப்-இன் அலெப்போவும் எனது யாழ்ப்பாணமும் எமக்குப் பொதுவான புலம்பெயர் நினைவகத்தில் சந்திக்கும் இடம்.

m

I

‘தனித்தவளாய்
எவரேனும் அறியாதவளாய்
நானிங்கிருக்க
என்னைவிட்டு
நீ எங்கு சென்றாய்’
என்று அவள் சொல்ல

‘ஒவ்வொரு முறையும்
உனக்கெனக் கவிதை எழுதும்போதெல்லாம்
என்னைக் கொல்லா
நிலம் நோக்கிச் சென்றேன் நான்’
என்று அவன் சொன்னான்

II

‘கடுதாசியில் உன் அழகிய பெயர் பதித்த
ஒரு கவிதைத் தொகுப்பு
உன் வசமிருக்கும் இந்நேரத்தில்
உன் மனதின் ஆழங்களில்
அசையும் உணர்வு என்ன’
என்று என்னிடம் கேட்கப்பட்டது
நான் சொன்னேன்
‘துயர் பூசிய மகிழ்வென்னைத் தொடுகிறது
காரணம்
இருப்பின் பாதை நீண்டது
கனவென்பது தொடுவானமல்ல
தொடுவானங்கள்’

III

விதியின் வடிவம்
எனக்கொரு பொருட்டேயல்ல
எப்படி, எங்கே
எப்போது நான் வாழ்கிறேன்
என்பதும் அவ்வாறே
கவிதைகள் எழுதும்வரை
இயங்கிக்கொண்டிருப்பேன்
எனது அடைக்கலம்
என் கவிதைகளில்தான்
எனது கடைசி விடைபெறலும்
என் கவிதைகளே

IV

அகதியெனப்படுவது

ன்று
நானோர் அகதியாய்ப் பிறந்தேன்
இன்று
நானோர் அகதியாக வாழ்கிறேன்
நாளை
நானோர் அகதியாக இறப்பேன்
காலத்தால் என்னை மாற்ற முடியாது
நிலமும் என் விதியை அழகுபடுத்த முடியாது
ஏதோ ஒன்றை
நீங்கள் அனைவரும்
என்னிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்
உங்களில் சிலர் எதிர்பார்க்கிறார்கள்
நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டுமென
அதனூடாக அவர்கள்
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளையும்
கருத்தையும் வெல்ல முடியுமென
உங்களில் சிலர் எதிர்பார்க்கிறார்கள்
நான் ஒரு கெட்ட மனிதனாக இருக்க வேண்டுமென
அதனூடாக அவர்கள்
மற்றவர்களின் எதிர்பார்ப்புகளையும்
கருத்தையும் வெல்ல முடியுமென
சரி, உங்கள் யாரையும் நான் ஏமாற்றமாட்டேன்
உங்களில் சிலர் விரும்புவது போல
நான் நல்லவனாக இருப்பேன்
உங்களில் சிலர் விரும்புவது போல
நான் கெட்டவனாக இருப்பேன்
ஏனென்று நீங்கள் அறிவீர்களா
ஏனெனில் நான் ஒரு மனிதன்
மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும்
ஓர் இருண்ட பக்கமும்
ஒளி நிறைந்த பக்கமுமுண்டு
அதை நீங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை
காரணம்
நீங்கள் என்னை ஒரு மனிதனாகப் பார்க்கவில்லை
மாறாக,
என்னில் நீங்கள் பார்க்க விரும்புவது
என் மீதுள்ள உங்களின் எதிர்பார்ப்பை மட்டுமே

V

பயங்கரவாதமும் அகதியும்

னது மேசை அருகில்
தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தாள்
நாற்பது வயதுடைய
ஒரு ஜெர்மன் பெண்
எனது முடி
அழகும் நேர்த்தியும் கொண்டபோதிலும்
எனது உடை
சீராக இருந்தபோதிலும்
உணவுண்ணும்போது
நான் கடைபிடித்த
நாகரிக ஒழுங்கு இருந்தபோதிலும்
அவள் என்னை
ஒரு சாத்தானாகவோ அல்லது
குப்பைத்தொட்டியிலிருந்து வந்த ஒன்றாகவோ
பார்த்திருக்கக்கூடும்
கழிவறைக்கு அவள் செல்ல விரும்பியபோது
என்னைப் பார்த்தவாறே
ஏதோ ஒன்றைத்
தனது குழந்தையின் காதில் கிசுகிசுத்தாள்
எதுவும் எனக்குக் கேட்கவில்லை
ஆனால், எனக்குப் புரியாதா?
அப்போது அந்தக் குழந்தை
தனது இரு கைகளாலும்
அவளின் கைப்பையைப் பிடித்துக்கொண்டது
நான் செய்யக்கூடும் எனக் கருதப்பட்ட
ஒரு திருட்டிலிருந்து
அதனைக் காத்துக்கொள்ள
அப்போது யாருமே என்னுடன் இருக்கவில்லை
முள்ளென அவள் குத்திய
எனது இதயத்தைக் காத்துக்கொள்ள

VI

கத்தரீனாவும் அலெப்போவும்… ஒரு வரையறை

த்தரீனாவும் அலெப்போவும் இரண்டு நகரங்கள்
இரண்டிலும் இதயம் வாழ்ந்தது
பேரழகைக் கண்டது
அளவற்ற காதல்
கவிதையாய் வெடிக்கும் வரை

அலெப்போ வெறும் நகரமல்ல
மாறாக
பெருமிதத்தின் நிலம் அது
அங்கு நான் இருந்தேன்
நானாக இருந்தேன்

கத்தரீனாதான் ஒரேயொரு நகரம்
அதன் கைகளில் நான் அழுதேன்
ஏனைய நகரங்களெல்லாம்
அழுகையை
எனது கைகளில் பயின்றது

அலெப்போ என்பது அழகின் யதார்த்தமான புகைப்படம்
துயருற்ற காதலனின்
காயங்கள் நிறைந்த ஆன்மா அது

கத்தரீனா என்பது அழகின் பரிபூரணமான புகைப்படம்
அதன் குருதி வடிதல்
அங்கு ஏக்கத்துடன் இசைக்கப்பட்டது

இல்லை
அலெப்போ என்பது ஒரு நகரமல்ல
அது மனிதம்
அதன் அழகைச் சிதைவிலிருந்து காக்க
நான் இன்னும் போராடுகிறேன்
இந்த முழு உலகையும் எதிர்த்து –
தலைநகரங்கள், வண்டித் தரிப்பிடங்கள், ரயில் நிலையங்கள்,
விமான நிலையங்கள், துறைமுகங்கள் அனைத்தையும் எதிர்த்து –
கத்தரீனா என்பது
பாதுகாப்பின் தலைநகரம்
ஏனைய தலைநகரங்கள்
என்னை ஓர் அகதியெனக் காட்டியபோது
கத்தரீனா
ஒரு மனிதனாக என்னை அடையாளம் காட்டியது

அலெப்போ
என் இதயத்தின் வலி
நெருப்பின் மேல் பெரும் மோகம் கொண்ட வலி அது
கத்தரீனா
என் மனதின் வலி
அலெப்போவைவிட்டு நீங்கியபோது
என்னைத் தாக்கிய வலி அது

ஒரு போராளியாக
அலெப்போ எனது தாயகம்
கத்தரீனா – என்னைத் தாங்கிய
என்னைத் தாங்கிக்கொள்ளும்
என்னைக் கவிஞனாகத் தன்னகத்தே கொள்ளப்போகும்
எனது புலம்பெயர்வு

அலெப்போ
கிழக்கின் ஒரு நகரம் மட்டுமல்ல
ஒவ்வொரு காலத்திலும் உள்ள எல்லா நகரங்களும்
அதுவே
கத்தரீனா
காதலின் ஒரு புரட்சி மட்டுமல்ல
மாறாக
நான் நேசித்த ஒவ்வொரு பெண்ணும்
நான் நேசிக்கும் ஒவ்வொரு பெண்ணும்
நான் நேசிக்கப்போகும் ஒவ்வொரு பெண்ணும் அவளே
மென்மையும் அரவணைப்பும்
நிறைந்த ஒரு புரட்சி அவள்
நாடுகடத்தலின் விறைக்கும் குளிருக்கும்
தாயகத்தின் கடுமைக்கும்
எதிராக
நான் கட்டவிழ்க்கப்போகும் போர் அவள்

m prashanthy.sekaram@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger