பேரொளிப் பயணம்

யாழன் ஆதி

கடலின் புன்னகையும் விடுதலையின் ருசியும்

23

பௌத்தம், மானுட விடுதலையின் வேர்.  சமயங்கள் மனிதர்களை மீட்க வரலாம் ஆனால், விடுதலை செய்ய முடியாது. மீட்பு என்பது இறப்பிற்குப் பின்பானது. நியாயத் தீர்ப்பில்தான் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா அல்லது தண்டிக்கப்பட்டீர்களா என்பது  தெரியும். ஆனால், பௌத்தம் அப்படிப்பட்ட மறுபிறப்பை மறுக்கிறது. இந்தப் பிறவியிலேயே உங்கள் செயல்களுக்கான பயன் தெரியும். வீட்டின் கூரை சரியாக வேயப்படவில்லை என்றால், மழை கண்டிப்பாக உள்ளே வரும் என்கிறது தம்மபதம். தீயது நினைத்தால் தீமைதான் வரும். ஆக, இவ்வாழ்விலேயே நமக்கான எதிர்வினைகள் நமக்குக் கிடைத்துவிடும்.

எனவேதான், பௌத்தம் மனிதர்களுக்கு வாழ்க்கையைப் புரியவைப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறது. தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொண்டு வாழ்வைப் பற்றிய ஒரு சீரிய புரிதலை உருவாக்க பௌத்தம் எப்பொழுதும் முனைகிறது. அப்படித்தான் கடல் ஒரு மிகப்பெரிய குறியீடாக மாற்றப்பட்டிருக்கிறது.

கடலைக் குறித்துப் பல்வேறு செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கடல் உலகத்தில் 71% இருக்கிறது. ஆகவேதான் இந்த உலகத்தை நீல கிரகம் என்று சொல்கிறோம். கடலின் ஆழம் ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர். பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி 11 கிலோமீட்டர் கொண்ட மிக ஆழமான கடல் என்று சொல்லப்படுகிறது. கடலில் 3.5% உப்பு இருக்கிறது. உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா நீர்களையும் தனதாக்கிக்கொண்டதால் அதைப் பெருங்கடல் என்கிறோம்.

தமிழில் கடலுக்கு ‘முந்நீர்’ என்றொரு பெயரும் இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நாற்பது இடங்களில் முந்நீர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதிகாசங்களில் வராக அவதாரத்தில் விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துக் கடலில் குதித்துப் பூமியைச் சுருட்டிக் கடலில் மறைத்து வைத்திருந்த அசுரனிடமிருந்து பூமியை மீட்டதாக அறிவியலுக்குப் புறம்பான ஒரு கதை இருக்கிறது.

ஆனால், பௌத்தம் அப்படிப் பார்க்கவில்லை. அது கடலை வெறும் நீர் நிலையாக மட்டும் பார்க்கிறது. பல உயிர்கள் வாழும் பல்லுயிர் ஓம்பியாகக் கடலைப் பௌத்தம்  பார்க்கிறது. அந்த நீர்நிலையை மனித வாழ்விற்கு ஒரு மிகச் சிறந்த குறியீடாக அது மாற்றி வைக்கிறது. கடலோடும் பழங்குடிச் சமூகத்தின் தலைவராகிய பகரத என்பவர் புத்தருடன் நிகழ்த்திய உரையாடல் ஆனந்தருக்கு மிகவும் பிடித்தமானது.

“பகரதனே, கடலோடும் மக்களாகிய நீங்கள் பெருங்கடலில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஆம் புத்தரே! நாங்கள் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.”

“பகரதா, ஒன்று சொல். இந்தக் கடலில் நீங்கள் எத்தனை அதிசயங்களை, அற்புதமான பண்புகளைக் காண்கிறீர்கள்?”

“எட்டு அதிசயமான பண்புகளைப் பெறுகிறோம் என்று  கூறலாம் ததாகரே! இந்த எட்டும் எங்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகின்றன. இதோ அந்த எட்டுப் பண்புகள்.

  • பெருங்கடல் எப்போதும் நிதானமாகத் தன் அலைகளை உயர்த்தும். நிதானமாக அலைகள் வீழும். மெதுவாகச் சமநிலை அடையும். நிலத்தைப் போல திடீரென்று சரிந்துவிடாது.
  • பெருங்கடல் எப்பொழுதும் தன்னுடைய எல்லையைவிட்டுத் தாண்டாது. தன் எல்லைகளை விரிவாக்காது. அதன் விளிம்பைத் தாண்டிச் செல்லாது.
  • பெருங்கடல் தன்னிடத்தில் ஒரு பிணத்தையும் அனுமதிக்காது. கடலில் ஒரு பிணம் விழும் என்று சொன்னால் உடனடியாக அதைத் தூக்கிக் கொண்டுவந்து கரையில் சேர்த்துவிடும். இறந்துபோன எதையும் கடல் தன்னிடத்திலிருக்க அனுமதிக்காது.
  • பல்வேறு ஆறுகள் பெருங்கடலில் வந்து கலந்தாலும் அவற்றின் பழைய பெயர்கள் எல்லாமே இல்லாமல்போய் கடல் என்ற ஓர்மையில் கரைந்துவிடும்.
  • எவ்வளவு நீர் அந்தக் கடலில் சேர்ந்தாலும் மழை பொழிந்தாலும் கடல் தன் அகலத்தையும் அளவையும் அதிகரித்துக்கொள்ளாது.
  • கடலுக்கு இருப்பது உப்புச் சுவை என்ற ஒன்று மட்டும்தான்.
  • கடல் தன்னகத்தில் முத்து, பவளம், சங்குகள் போன்ற விலை மதிக்க முடியாத பொருட்களை வைத்திருக்கும்.
  • பல உயிர்கள் வாழ்வதற்கான இடமாகவும் கடல் இருக்கிறது. நூறு அடிகளுக்கு மேற்பட்ட நீளம் கொண்ட உயிர்கள்கூட கடலில் இருக்கின்றன.

இந்த எட்டும்தான் கடலில் நாங்கள் மகிழ்வதற்குக் காரணமாக இருக்கின்றன. போதகரே இதைப் போல தம்மத்தில் உங்களுக்கு ஏதாவது அதிசயங்கள் இருக்கின்றனவா?”

“ஆம், இருக்கிறது பகரா. தம்மத்திலும் மனிதர்கள் உணர்ந்துகொள்ளத்தக்க அற்புதங்கள் இருக்கின்றன. அவை கூட எட்டுதான்.”

புத்தர் தொடர்கிறார்:

“கடல் எப்படி நிதானமாக அலைகளை எழுப்பி, நிதானமாக உயர்ந்து நிதானமாகப் பரவுகிறதோ அதைப் போலத்தான் தம்மம் என்னும் ஒழுக்கமும் நிதானமாகக் கற்கப்பட்டு, நிதானமாகப் பயிற்சியாக்கப்பட்டு, நிதானமாக முன்னேறும். நிலம் திடீரெனச் சரிவதைப் போல தம்மமும் திடீரென ஒருவருக்கு உயர்வைத் தந்துவிடாது.

பெருங்கடல்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி, கரைகளைத் தாண்டிச் செல்லாததைப் போலவே, நான் பயிற்றுவிக்கும் என் தம்மத் தோழர்கள் ஒருபோதும் தங்கள் வாழ்விற்காகவோ வசதிக்காகவோ தம்மக் கொள்கைகளை மீற மாட்டார்கள்.

பிணம் வீழ்ந்தால் கடல் அதனைத் தன்னகத்தே வைத்துக்கொள்ளாமல், உடனடியாக வெளியேற்றி கரையில் கொண்டுபோய் விட்டுவிடுவது போல், தம்மமும் தனக்கெதிரான, அறமற்ற, தீய, நன்னடத்தையற்ற, வெளிப்படையாக இல்லாமல் இரகசியமான செயல்களை உடைய, பேராசைகளை உடைய, தீய நடத்தையுடையவர்களைத் தன் சங்கத்தைக் கூட்டி வெளியேற்றிவிடும்.

மண்ணில் புரண்டோடும் பெரும் நதிகள், கடலை அடைந்தபின் எப்படித் தங்கள் பெயர்களையும் பெருமைகளையும் இழந்து கடல் என்று மாறிவிடுகின்றனவோ அப்படியே தம்மத்தில் இணைபவர்களும் அவர்கள் நால்வருணத்தர்களாக இருந்தாலும், பார்ப்பனர்களாக இருந்தாலும், பொதுமக்களாக இருந்தாலும், அனாதைகளாக இருந்தாலும் தம்மத்தை அடைந்துவிட்டால் தங்கள் பழைய நிலைகளெல்லாம் அழிந்து தம்மத்தைப் பின்பற்றுபவர்கள் என்னும் ஒற்றை அடையாளத்தோடுதான் வேறுபாடுகளற்று இருப்பார்கள்.

நிப்பாணம் என்பது ஒரு பொருளாகவோ அல்லது இடமாகவோ அல்லது நிலையாகவோ இல்லாதது. அது உயர்வுற்ற நிலை. எனவே, அதில் அதிகமாவதோ குறைவதோ இல்லை. எப்படிக் கடலுக்கு நிலத்திலிருந்தும் வானத்திலிருந்தும் காலம் முழுக்க எவ்வளவு தண்ணீர் வந்தாலும் பெருங்கடல் தண்ணீர்மைக் குன்றாமலும் அதிகமாகாமலும் இருக்கிறதோ, எப்படி உலகத்தின் பல பகுதிகளில் இருந்தாலும் அவை எப்போதும் உப்புச் சுவையை மட்டும் கொண்டுள்ளதோ, அதைப் போலவே தம்மமும் ஒரே ருசியை மட்டுமே கொண்டது, விடுதலையின் ருசி.

கடலில் பல விலையுர்ந்த முத்து, பவளம், போன்ற பொருட்கள் இருப்பதைப் போலத்தான் தம்மத்திலும் நான்கு உண்மைகள், ஐந்து ஒழுக்கங்கள், உயர்வடைவதற்கான ஏழு பண்புகள், எண்மார்க்கம் என்னும் எட்டுவழிப்பாதை போன்ற விலை மதிப்பற்ற அறங்கள் உண்டு.

கடலில் எப்படிப் பல உயிர்கள் வாழ்கின்றனவோ அதைப் போல தம்மத்திலும் தொடக்க நிலையில் இருப்பவர்கள், தம்மத்திற்கான பயிற்சிகளைத் தொடங்கியிருப்பவர்கள், தொடர்ந்து பயிற்சியைச் செய்பவர்கள், உயர்வடைவதற்கான தகுதிகளைப் பெற்று அறவோர் ஆவதற்கான பயிற்சிகளைச் செய்பவர்கள் பலரும் இருக்கின்றனர். இந்த எட்டுதான் கடலைப் போலவும் தம்மத்திலும் மகிழ்வைத் தரும் எட்டு அற்புதங்கள்.”

கடல் எப்படிப் பரந்து விரிந்து இந்த உலகத்தின் இயக்கத்தில் பங்கேற்கிறதோ, தம்மமும் பரந்து விரிந்தது இந்த மானுடத்தின் இயக்கத்தில் பங்கேற்கிறது. கடலில் போய்ச் சேர்ந்துவிடுவதால் எல்லா நதிகளும் தம் தன்மையை இழப்பது போல் தம்மத்தில் இணைபவர்கள் தங்கள் அடையாளங்களை இழக்கிறார்கள். அவர்களுக்கென்று முன்பிருந்த அடையாளங்கள் தற்போது இல்லை. அவர்களின் ஜாதி, பிறப்பு, வாழ்வு முறை எல்லாம் மாறி அவர்கள் தம்மத்தில் கரைவதால் புதிய தன்மையினை அடைகிறார்கள். அதனால் அவர்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது. அறவோர்களாக மாறிவிடுகிறார்கள்.

கேமாவின் வாழ்க்கையே அதற்கோர் உதாரணம். கேமா மகத நாட்டின் பட்டத்தரசிகளில் ஒருத்தி. பேரழகு வாய்ந்தவள். பொன்னிற மேனியுடையவள். அழகின் எல்லாக் கூறுகளும் அவளிடம் நிரம்பி வழிந்தன. மன்னன் பிம்பிசாரனின் மனைவி என்னும் பெருமிதம் அவளுக்குள் பொங்கியது. அதனால் அவள் பெரும் அழகுணர்ச்சி உடையவளாக இருந்தாள். அழகில்லாத எதையும் திரும்பிக்கூட அவள் பார்ப்பதில்லை. பிம்பிசாரனோ புத்தரின்மேல் பேரன்பு கொண்டவன். தம்மத்திலும் சிறந்து விளங்குபவன். புத்தரைப் பார்த்து அவரின் ஆசியைப் பெற வேண்டும் என்று கேமாவை பிம்பிசாரன் வலியுறுத்திவந்தான். ஆனால், அங்கே என்ன அழகு இருக்கப் போகிறது என்று அதை கேமா மறுத்தாள்.

ஒருநாள் புத்தரைச் சந்திக்கும் சூழல் வந்தது. கேமா பழங்களையும் வாசனைப் பொருட்களையும் புத்தருக்கு அளிப்பதற்காகக் கொண்டு வந்தாள். தூரத்தில் புத்தர் தன் சீடர்களுக்குப் போதித்துக்கொண்டிருக்கிறார். மிக அழகிய பெண்கள் இருவர் புத்தருக்குச் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். அந்தச் சூழலே மிக ரம்மியமானதாக, பேரழகு வாய்ந்ததாக இருந்தது. கேமாவுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. நாம் நினைத்தது போலில்லாமல் இங்கிருப்பவை எல்லாம் மிக அழகானவையாக இருக்கிறதே என்று எண்ணினாள். சாமரம் வீசிக்கொண்டிருந்த பெண்கள் திடீரென முதுமை அடையத் தொடங்கினார்கள். அவர்களால் விசிற முடியவில்லை. அவர்களின் அழகு குலையத் தொடங்கியது. தோலில் சுருக்கங்கள் தோன்றின. கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள்  இறந்துகொண்டிருந்தனர்.

கேமா இதைப் பார்த்தாள். அவளுக்கு வாழ்வும் புத்தரின் போதனைகளும் புரியத் தொடங்கின. புத்தரால் காட்டப்பட்ட மாயக் காட்சியால் தன் வாழ்வில் அறநிலையை அடையத் தொடங்கினாள். தன்னுடைய எல்லா அடையாளங்களையும் இழந்து தம்மத்தைப் பின்பற்றி பிற்காலத்தில் ஆகச்சிறந்த பிக்குணிகளில் ஒருவராக ஆனாள் என்பது புத்த நெறிக்கதை.

ஆபத்தான
ஆசைச் சேற்றுச் சகதியைக் கடந்தவர்
தீமையெனும் சிக்கலான சாலையைக் கடந்தவர்
பிறவிப் பெருங்கடல் கடந்தவர்
அறியாமை இருள் கடந்தவர்
நான்கு தீமை வெள்ளம் கடந்தவர்
நிப்பாணத்துக் கரையை அடைந்தவர்
உள்ளொளி தியானம் ஆற்றி
பற்றற்று
சலனமற்று
எதனினும் தொடர்பற்று
நிரந்தர அமைதியில் நிறைந்தவரே
அறவோர்

(தம்மபதம் 414)

m yazhanaathi@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger