மெட்ராஸை நிர்மாணித்த‍து பிரான்சிஸ் டே மட்டுமல்ல!

முத்தமிழ்ச் செல்வி

 

கஸ்ட் 22, 1639. சென்னையின் வரலாற்றில் முக்கியமான நாள். கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியான பிரான்சிஸ் டே, நாயக்க ஆட்சியாளர்களிடமிருந்து கடற்கரையோர நிலத்தைப் பெற்றார். அங்கு புனித ஜார்ஜ் கோட்டை உருவானது. ஆனால், அந்தக் கதையில் மறைக்கப்பட்ட இன்னொரு முக்கியமான பெயர் பேரி திம்மப்பா.

ஆந்திரப் பகுதியிலிருந்து வந்த வணிகரான திம்மப்பா, கிழக்கிந்தியக் கம்பெனியின் உள்ளூர் தொடர்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயல்பட்டார். உள்ளூர் ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும், ஆரம்பகாலக் குடியேற்றத்தை உருவாக்குவதிலும் அவரது பங்கு முக்கியமானது.

ஒரு கோட்டை கட்டுவது வேறு, ஒரு நகரத்தை உருவாக்குவது வேறு. மக்களைக் குடியேற்ற வேண்டும், வணிகத்தை வளர்க்க வேண்டும், குடியிருப்புகளை உருவாக்க வேண்டும். இந்த நகரத்தின் ஆரம்ப வளர்ச்சியில் திம்மப்பா போன்ற உள்ளூர் மக்களின் பங்களிப்பு மறக்க முடியாதது.

தமருள வெங்கடாத்திரி நாயக்கரிடமும், சிறீரங்க ராயலுவிடமும் பேரம் பேசி, மூன்று கிராமங்களுக்கான உரிமையை வாங்கியது திம்மப்பாதான். புதிய ஊருக்கு, நாயக்கரின் தந்தை பெயரால் “சென்னப்பட்டினம்” எனப் பெயரிடச் சொன்னதும் அவரே. கோட்டைக்கு வெளியே “பிளாக் டவுன்” (இன்றைய ஜார்ஜ் டவுன்) என்ற குடியிருப்பை உருவாக்கி, சாதி வாரியாக இடம் ஒதுக்கி, சென்னகேசவப் பெருமாள் மற்றும் சென்னமல்லீஸ்வர‍ர் கோயில்களைக் கட்டியதும் அவரே. மீனவர் தலைவர் மதராசனின் எதிர்ப்பைச் சமாளித்துக் குடியேற்றத்தை நிலைநிறுத்தியதும் அவர்தான்.

சுருக்கமாகச் சொன்னால், கோட்டையை பிரான்சிஸ் டே “கட்டினார்’’, நகரத்தை பேரி திம்மப்பா நிர்மாணித்தார். ஆனால், வரலாறு நினைவுகூர்வது கோட்டையை கட்டியவரையே. நகரை நிர்மாணித்தவர் ஓர் அடிக்குறிப்பாக மட்டும் மிச்சமாகி இருக்கிறார்.

 

நிலம் ஏன் அங்கேயே தேர்வானது என்பதிலும் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. மச்சிலிப்பட்டினத்திலிருந்து கடற்கரை வழியாக புதிய தளம் தேடி வந்த பிரான்சிஸ் டேவுக்கு, சாந்தோம் போர்த்துகீசியர் குடியேற்றத்தில்  வாழ்ந்த ஒரு கலப்பினப் பெண் மேல் ஈடுபாடு இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள். அவர் அருகில் இருக்கும் வகையிலேயே, சாந்தோமில்லிருந்து சற்று தள்ளி இந்தக் கடற்கரைத் துண்டை அவர் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனியின் மிகப்பெரிய காலனித்துவ மையங்களில் ஒன்றின் தளம் நிர்ணயிக்கப்பட்டதற்குப் பின்னால்  வர்த்தக‍க் கணக்கீடு மட்டுமல்ல, ஒரு தனிமனிதனின் தனிப்பட்ட காரணமும் இருந்திருக்கலாம் என்பது இன்றும் விவாதத்துக்குரிய, ஆனால் பரவலாக அறியப்படாத தகவல்.

இன்று நாம் சென்னை தினத்தைக் கொண்டாடும்போது, கோட்டையையும் கம்பெனியையும் நினைவுகூர்கிறோம். ஆனால், நகரத்தை நிஜமாக வடிவமைத்தது ஒரு பெயர் தெரியாத தரகர். இடம் ஒதுக்கியது, கோயில் கட்டியது, சாதிகளை உள்ளடக்கியது, மீனவர்களுடன் பேசி உடன்பாடு உருவாக்கியது இவை எல்லாம் ஓர் உள்ளூர் மனிதனின் வேலை. காலனித்துவ வரலாறு எப்போதும் “கண்டுபிடித்தவர்”களுக்கே கடன்பட்டு நிற்கிறது; உழைத்தவர்கள் அடிக்குறிப்புகளாகவே மிஞ்சுகிறார்கள்.

பேரி திம்மப்பாவின் வழித்தோன்றல்கள் இன்றும் சென்னையில் வாழ்கிறார்கள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாஷ்யம் நாயுடு பூங்கா அவர் குடும்பத்தின் நினைவாகப் பெயரிடப்பட்டதுதான். ஆனால், அவரது பெயர் பாடப்புத்தகங்களில் இல்லை. இந்த சென்னை தினத்தில் கோட்டைகளையும் அதிகாரிகளையும் மட்டுமல்ல, வரலாற்றின் அடிக்குறிப்பில் மறைந்த பேரி திம்மப்பா முதல் வடசென்னையின் உழைக்கும் மக்கள் வரை, இந்த நகரத்தை உருவாக்கிய ஒவ்வொரு கையையும் நினைவுகூர்வோம்.

சென்னை ஒரு நகரம் அல்ல… அது உழைப்பின் அடையாளம்…. அது சமூகநீதியின் களம்…. அது பல தலைமுறைகளின் வரலாறு… அது ஆயிரம் கனவுகளின் முகவரி… அது நம் பெருமை.

 

உசாத்துணை

  1. D. Love, Vestiges of Old Madras (1640–1800) — the primary colonial-era record; documents Beri Thimmappa’s 1648 temple donation and the Chennapattanam land grants.
  2. Muthiah, “A centenary’s links with Chennai, “The Hindu (2002) — standard reference for Thimmappa’s biography, cited on Wikipedia/Bharatpedia’s Beri Thimappa entry.
  3. Madras Discovered by S. Muthiah (the well-known heritage book) — describes Day as agent, Thimmappa as the dubash who “finalised terms with the local powers.”
  4. Susan Neild-Basu, “The Dubashes of Madras,” Modern Asian Studies (1984), academic paper on the dubash system generally, not Thimmappa specifically.
  5. The San Thome love-story detail is from a The Print excerpt (Jan 2025) of a book on Madras’s founding it describes Day’s secret attachment to a half-Indian woman of European blood living in San Thome as a factor in his choice of site, with Beri Thimmappa then negotiating the land from the Nayak Venkatadri Damarla.

 

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger