தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே, இந்த மசோதா தோல்வியடையும் என்பது தெரிந்திருந்தும், அதை முன்னெடுக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சித்தது. அண்மையில், மறு தேதி அறிவிக்கப்படாமலேயே முடிவடைந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையிலும், அதற்கான சூழலை அரசால் உருவாக்க முடியவில்லை. அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், பாஜக மிகுந்த கவனத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. இதைச் சாத்தியப்படுத்த பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மசோதாவின் உள்ளடக்கம் அதிகாரபூர்வமாக இன்னும் வெளிவராத நிலையில், 1971ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் உறுதி செய்யப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்காமல், ஒவ்வொரு மாநிலத்தின் மொத்தத் தொகுதிகளில் 50 விழுக்காடு வரை உயர்வு இருக்கும் என பாஜக வாய்மொழியாக உறுதியளித்திருக்கிறது.
தொகுதி மறுவரையறை பற்றிய விவாதம் இன்று புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல. இந்திய அரசியலமைப்பு உருவான காலத்திலிருந்தே, மக்களவைத் தொகுதிகளை மாநிலங்களுக்கு எவ்வாறு பகிர்வது, ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு மக்கள் தெகை இருக்க வேண்டும், ஒரு வாக்குக்கு எவ்வளவு அரசியல் மதிப்பு இருக்க வேண்டும் என்பவை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இந்த விவாதத்தில் மிக முக்கியமான கேள்வி, ‘மக்கள் தொகைக்கும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான சமநிலையின்மையை எவ்வாறு அணுகுவது, அதில் எதை முன்னிறுத்தித் தீர்வு காண்பது என்பதுதான்.’
இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு மக்களவைத் தொகுதிகள் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுவரையறை செய்யப்பட்டன. மக்கள் தொகை எங்கு அதிகரிக்கிறதோ அங்கு அதிகமான பிரதிநிதித்துவம் கிடைப்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கையாகக் கருதப்பட்டது. அதேவேளையில், இந்தியாவை அதனடிப்படையில் மட்டுமே வரையறுத்து விட முடியாது.
சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் அது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் விளைவாக, இன்று இந்த இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான மக்கள் தொகை இடைவெளி மிகப் பெரிதாகியுள்ளது. உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தரகாண்ட் பிரிக்கப்பட்ட பின்னரும், 1971 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை சுமார் 138 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்தச் சூழலில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காக ஒரு மாநிலம் அரசியல் ரீதியாகத் தண்டிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில்தான் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. 1971ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், அதே நிலையில் பேணுவதென முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம், மக்கள் தொகையைத் தென் மாநிலங்கள் கட்டுப்படுத்தியபோதும் அவற்றின் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படவில்லை. அதேபோல், உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்தபோதும், அதற்கேற்ப புதிய மக்களவைத் தொகுதிகள் உடனடியாக வழங்கப்படவில்லை.
ஒருபுறம், “ஒரு நபர், ஒரு வாக்கு” என்ற ஜனநாயகக் கொள்கை இருக்கிறது. மறுபுறம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் முன்னேறிய மாநிலங்களை அதற்காகத் தண்டிக்கக் கூடாது என்ற கூட்டாட்சிக் கொள்கை இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்துவதற்காகத்தான் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை முடக்கப்பட்டது. எனவே, மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகளை முழுமையாக மறுவரையறை செய்வது மட்டுமே நியாயமான தீர்வு என்று கருத முடியாது.
1976ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்வது 2000ஆம் ஆண்டு வரை முடக்கப்பட்டது. பின்னர், 2001ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 84ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம், இந்த முடக்கம் மேலும் 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. இதன் மூலம், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 1976 முதல் 2026 வரை மொத்தம் 50 ஆண்டுகளுக்கு மாற்றமின்றித் தொடர்ந்தது.
1976 முதல் 2026 வரை நீடித்த 50 ஆண்டுகால இடைக்கால ஏற்பாடு இப்போது முடிவுக்கு வருகிறது. 2026இல் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவுகள் வெளியானவுடன், அரசியலமைப்பின் 81 மற்றும் 82ஆவது பிரிவுகளின்படி தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கான பணிகள் அரசியலமைப்பு விதிகளின்படி தொடங்க வேண்டும். இந்தச் சூழலில், இதை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதுதான் முக்கியமான கேள்வியாகிறது.
2026ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே, 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை முடித்துவிட வேண்டும் என்று பாரதிய ஜனதா தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. 2029ஆம் ஆண்டு தேர்தலை மையப்படுத்தியே இதை பாஜக தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு 2002 ஜூலை 12 அன்று தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2008ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்தத் தொகுதி மறுவரையறையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை; மாறாக, தொகுதிகளின் எல்லைகள் மட்டுமே மாற்றப்பட்டன. இதை நடைமுறைப்படுத்துவதற்கே ஆறு ஆண்டுகள் ஆனது. தற்போது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசு இதனுடன் இணைத்திருப்பதால், மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறை, தொகுதி எல்லைகள் மாற்றம், பெண்களுக்கான இடஒதுக்கீடு என இந்த மூன்றையும் குறுகிய காலத்தில் செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.
அரசியலமைப்புச் சட்டம் “ஒரு நபர், ஒரு வாக்கு, சம மதிப்பு” என்ற அடிப்படையில், மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தொகுதிகளைப் பிரிப்பதற்கான தேசிய சராசரியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று கூறினாலும், ‘இயன்றவரை தேசிய சராசரியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடுவதன் மூலம் அதில் ஒரு நெகிழ்வுத்தன்மையும் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே குறைவான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்களும் கணிசமான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிகிறது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை முடக்கி, இந்த ஏற்பாட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்தால், அதைக் காரணமாகக் கொண்டு பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை முடக்கக் கூடாது. மாறாக, 2001ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டதைப் போல, அவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் மீண்டும் மறுசீரமைக்க வேண்டும். அதேபோல், பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டையும் இதைக் காரணமாகக் கொண்டு முடக்கக் கூடாது.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் அதிமுக தொகுதி மறுவரையறையை முழுமையாக ஆதரிக்கிறது. திமுக இதனை எதிர்த்தாலும், 1971ஆம் ஆண்டு அடிப்படையில் முடக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கையைத் தக்கவைத்துக்கொண்டு, கூடுதலாக 50 விழுக்காடு தொகுதிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறது. என்ன காரணங்களை முன்வைத்தாலும், “மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது” என்கிற திமுகவின் அடிப்படையான வாதத்திற்கு முன்னால், கூடுதலாக 50 விழுக்காடு தொகுதிகளை வழங்குவது அந்தக் கேள்விக்குப் பதிலாக அமையாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதை எதிர்க்கவோ ஆதரிக்கவோ தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்கள் இல்லையெனினும், சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை யோசனைக்கு எதிரான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. எனினும், அமித் ஷா தலைமையில் சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசும்போது, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தது முரணானது.
தமிழக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளும் இரு அவைகளின் உறுப்பினர்களும் தங்களின் தற்கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமல், தமிழ்நாட்டின் நீண்டகால அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கூட்டாட்சியின் சமநிலையையும் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்.

