இப்போதெல்லாம்
நான்
என்னை நினைவுகூர்ந்துகொள்ளும் விதத்தில்
உனக்கேதும்
அதிருப்தி இருப்பதில்லை.
என் அழுக்குகளை
உன் அழிவுகளைச்
சொல்லுவதால்
மாறிவிடாத உன்னிடம் தான்
திரும்பத் திரும்ப
முறையிட்டுக்கொண்டிருக்கிறேன்
அதை ரசித்துக்கொண்டிருக்கிறாய்
என்பது தெரியாமலேயே.
என்னை
அழிப்பதா அரவணைப்பதா
என்பதும்
உன் முடிவாகவே இருக்கிறது.
அதை என் அன்றாடக் கதைகளில்
பொருத்திக்கொள்ளும் விதத்தையே
நான் யோசித்துவந்திருக்கிறேன்.
நான் எதிர்த்தேன்
என்று சொல்வதைவிட
அரைப்படி நெல்தானே கேட்டேன்
என்று சொல்லிக்கொண்டே
இருப்பதில்தான் இருக்கிறது
உன் மகிழ்ச்சி.
உன்னை நான் எப்படி
நினைக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ
அப்படியே இருக்கிறாய்
என் நினைவுகளில்.
என் நினைவுகூரல்களிலும் இருக்கிறது
உன் அதிகாரத்திற்கான இடம்.