பழுதடைந்த பார்வை: அம்பேத்கரின் சமூகப் புரட்சிச் சிந்தனைகளைத் தவறாகச் சித்திரிக்கும் டெல்டும்டே

ஜெயசீலன் ராஜ் | தமிழில்: இஸ்க்ரா

பி.ஆர்.அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகளை ஒட்டி வெளியாகும் நூல்களின் பெரும் பட்டியலில் தற்போது ஆனந்த் டெல்டும்டே எழுதிய Iconoclast: A Reflective Biography of Dr.Babasaheb Ambedkar எனும் படைப்புசார் வாழ்க்கை வரலாற்று நூல் புது வரவாகச் சேர்ந்திருக்கிறது.

இப்புத்தகம் அம்பேத்கரின் வாழ்க்கையை ஏழு கட்டங்களாகப் பகுக்கிறது. சாதி முறையோடு பிணைந்துள்ள சமூக வாழ்க்கையை எதிர்கொள்ளுதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆட்படுதல், காலனித்துவத்திற்கு எதிரான மற்றும் பின் – காலனித்துவ அரசியல் சூழலை உட்கிரகித்து நடத்தல் போன்று அவர் வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களை ஒவ்வோர் அத்தியாயத்திலும் உரையாடுகிறார் நூலாசிரியர்.

அம்பேத்கரின் வாழ்வை ஒட்டிய ஏழு அத்தியாயங்களைத் தாண்டி, இறுதிப் பகுதி அவரின் மரணத்திற்குப் பிந்தையக் காலகட்டத்தைப் (1956 – 2023) பற்றிக் குறிப்பிடுகிறது. அம்பேத்கர் எனும் மனிதர் இந்தியப் பொதுச் சமூகத்திலும் அரசியல் வாழ்க்கையிலும் எதிர்கொண்ட விமரிசனங்கள் இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. அத்தோடு சாதி முறைக்கு எதிரான அவரின் சில போராட்டங்கள் எவ்விடத்தில் சறுக்கின என்றும் டெல்டும்டே விவரிக்கிறார்.

சாதி முறையின் தீவிரத்தன்மைப் பற்றியும், மற்றைய ஒடுக்குமுறைகளிலிருந்து சாதிய ஒடுக்குமுறை எங்ஙனம் வேறுபடுகிறது என்கிற விவரிப்பையும் முதல் அத்தியாயம் துவக்கி வைக்கிறது. இதை விளக்குவதற்குச் சாதிய அமைப்புக்குள் இருக்கும் மதக் கட்டுமானங்களையும் சமயச் சடங்குகளையும் சான்று காட்டுகிறார் டெல்டும்டே. பிறப்பின் அடிப்படையில் ஒடுக்குமுறைக்குத் தள்ளப்பட்ட சாதிக் கட்டுக்குள் இருந்ததால், அம்பேத்கரின் குடும்பம் அன்றாட வாழ்வை எதிர்கொண்ட விதம்; பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் இயந்திரக் கரங்களினாலும் சுற்றியிருந்த சுதேச சமஸ்தானங்களின் ஆட்சிமுறையினாலும் அவர் வாழ்க்கைப் பாதை எதிர்ப்பினூடே உருப்பெற்ற விதம் ஆகியவை இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மகர் சமூகத்தைச் சார்ந்த இராணுவ அதிகாரியின் மகனாகப் பிறந்தது தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆளுமையாக வளர்ந்தது வரை, அம்பேத்கரின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து இன்று அநேகருக்கும் தெரிந்துவிட்டது. சாதாரண பொதுக்கூட்ட உரையாடல்களில் கேள்வி ஞானம் வாய்க்கப்பெற்றால்கூட அம்பேத்கரின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் குறித்துப் போதிய புரிதல் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் எளிதில் தேடி படித்துக்கொள்ளலாம்.

ஆனால், டெல்டும்டே எழுதியுள்ள இவ்வாழ்க்கை வரலாற்று நூல் மேலதிகத் தரவுகளைக் கொண்டுள்ளது. அம்பேத்கரின் படைப்புகளுக்கு மத்தியிலும், 19 – 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் நிலவிய அரசியல், பொருளாதார நிலைகட்கு மத்தியிலும் அவரின் வாழ்க்கையைக் கச்சிதமாகப் பொருத்திப் பார்க்கும் மெனக்கெடலை இந்நூலாசிரியர் செய்திருக்கிறார். அம்பேத்கர் குறித்து இதுவரை வெளிவந்திருக்கிற வாழ்க்கை வரலாற்று நூல்களை மிகவும் பயனுள்ள வகையில், இதன் ஆக்கத்திற்கு உபயோகித்துள்ளார்.

அம்பேத்கரின் எழுத்துகள் – குறிப்பாக அவர் நடத்திய இதழ்கள், மேடையில் முழங்கிய உரைகள் – இந்நூலாக்கத்திற்குக் கருவி நூல்களாக அமைந்துள்ளன. இந்தியாவின் அரசியல் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதோடு, வெவ்வேறு காலங்களில் அவர் எழுதிய படைப்புகள் சாதி குறித்து அவருக்கிருந்த புரிதலை உணர்ந்துகொள்ள உதவுகின்றன. சாதிய முறையை எதிர்கொள்வதற்கு அம்பேத்கரின் எழுத்துகள் வழிநெடுக துணைபுரிவதை இந்நூல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது.

அங்ஙனம் பார்க்கையில், இப்புத்தகம் அம்பேத்கரின் நுண்மான் நுழைபுலத்தை எடைபோடுகிறது; அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அறிவுஜீவித்தனம் துணை நின்றதை எடுத்துரைக்கிறது. சாதி பேதமற்ற சமத்துவ உலகைக் கட்டமைக்க அம்பேத்கரின் பரந்த வாசிப்பு மாபெருந் துணையென்றால் மிகையாகாது. ஆளும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சுயாட்சி உரிமை வேண்டும் என்று முறையிட்ட அதே சமயம், ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கு’ அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கக்கூடாது என்று இரட்டை மனநிலையோடு காங்கிரஸார் வாதிட்டார்கள். இதுவொரு குறிப்பிடத்தகுந்த தருணம். சற்றொப்ப இதே காலகட்டத்தில்தான், வரலாற்றை விமர்சனப்பூர்வமாக வாசித்துத் தன் கருத்தாக்கத்திற்கு உருவம் கொடுத்தார் அம்பேத்கர். பின் காலனித்துவ இந்தியாவில் அரசியல், பொருளாதாரம் மற்றும் தலித்துகளின் நிலையை முன் ஊகித்து உணர்ந்துகொள்ள இப்படிப்பினைப் பெரிதும் உதவியது.

அம்பேத்கரின் படைப்புகளை நுணுகிப் பார்க்கையில் ஜி.எஸ்.குர்யே, எம்.என்.ஸ்ரீநிவாஸ் முதலான சமூகவியல் துறையின் ஜாம்பவான்கள் சிலர் பின்னாட்களில் வளர்த்தெடுத்த கோட்பாடுகளை, முன்கூட்டியே அவர் கண்டடைந்திருக்கிறார் எனத் தெரிகிறது. இவர்கள் உட்பட அம்பேத்கரை நன்கு வாசித்து இத்துறையின் உச்சிக்குச் சென்ற எவருமே அவரின் படைப்புகளுக்கு நியாயமான நன்றி செலுத்தாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

சான்றாக: அம்பேத்கர் தொடக்கக் காலத்தில் எழுதிய ‘இந்தியாவில் சாதிகள்: அதன் இயக்கம், தோற்றம் மற்றும் வளர்ச்சி’ எனும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைக் குறித்து ஆனந்த் டெல்டும்டே இந்நூலில் ஓரிடத்தில் உரையாடுகிறார். சாதிகள் எப்படி இயங்குகின்றன என்று அக்கட்டுரை நுணுக்கமாக ஆய்கிறது. இனம், வகுப்பு, பாலினம் என்று சாதிப் படிநிலையைப் பின்பற்றிச் சமூகத்தில் வெவ்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறார். பிற்காலத்தில் இக்கருத்தை நூல் பிடித்து வந்த எம்.என்.ஸ்ரீநிவாஸ், இதனை “சம்ஸ்கிருதமயமாக்கம்” என்று பெயரிட்டு வழங்கினார். ஆனால், இதை முன்மொழிந்த அம்பேத்கரின் பெயரை எங்குமே அவர் குறிப்பிடவில்லை.

ஸ்ரீநிவாஸ் முதலானவர்கள் அம்பேத்கரைத் தீவிரமாக வாசித்து, போலச் செய்தல் பண்பாட்டை நன்கு உள்வாங்கியிருந்தால் சாதி வழக்கங்களை மீறும்போது எப்பேற்பட்ட தண்டனைகள் வழங்கப்பட்டன என்று தெரிந்திருக்கும். ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறு நெடுகவும் இதுபோன்ற தண்டனைகளை எதிர்த்துவந்திருக்கிறார்கள்.

டெல்டும்டே இந்நூலை மிகச் சரியாக முன்னிறுத்துகிறார். A Reflective Biography (பிரதிபலிப்பூட்டும் வாழ்க்கை வரலாறு) என்று அவர் அழைக்கும் பாங்கு நுட்பமானது. குறைந்தபட்சம் அம்பேத்கரின் வாழ்வை மூன்று நிலைகளில் பிரதிபலிப்பதாய் இந்நூலைக் கட்டமைத்திருக்கிறார். முதலாவதாக, அம்பேத்கர் தன் கருத்துகளைப் பதியமிட்டு வளர்த்தெடுத்த சமூக, அரசியல் பின்புலத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது; இரண்டாவதாக, அம்பேத்கரின் முதன்மையான எழுத்துகளின் மூலம் அவரின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. அவரின் அரசியல் எழுத்துகளை ஒப்பிடுகையில் பொருளாதார ஆய்வேட்டிற்கு அதிக வெளிச்சம் கிடைக்கவில்லை. ஆனால், டெல்டும்டே அதனையும் கருத்தில் கொள்கிறார்.

இறுதியாக அம்பேத்கரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவரைப் பற்றி எழுந்த வாழ்க்கை வரலாற்று நூல்கள், அவர் மறைவுக்குப் பின் தோன்றிய அம்பேத்கரிய இயக்கங்கள் குறித்த பிரதிபலிப்பாய் இந்நூல் மலர்ந்திருக்கிறது. அம்பேத்கரிய இயக்கங்கள் அவரை ஒரு புனிதச் சின்னமாக உயர்வு நிலைக்கு ஏற்றின. அதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, ‘பிரதிபலிப்பு’ எனும் வார்த்தையைத் திட்டமிட்டுப் பயன்படுத்துகிறார். இதுபோன்ற அணுகுமுறை ‘ஐகானோகிளாஸ்ட்’ எனும் நூல் தலைப்புடன் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. கட்டமைக்கப்பட்ட நம்பிக்கைகளை அல்லது புனித பிம்பங்களைத் தகர்ப்பவர் என்பது அதற்குப் பொருள்.

அம்பேத்கரிடம் எத்தனையோ பண்புகள் இருக்க, ‘ஐகானோகிளாஸ்ட்’ எனும் பதத்தைக் கையாள்வது ஏன்? ஒருவேளை டெல்டும்டே, அம்பேத்கரின் கேள்வி கேட்கும் சுபாவத்தை முன்னிறுத்த விரும்பியிருக்கலாம். அதே சுபாவத்தைப் பயன்படுத்தி, அம்பேத்கரின் புனித பிம்பக் கட்டுமானத்தைச் சோதிக்க நினைத்திருக்கலாம்.

புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களுமே முக்கியமானவை என்றாலும், இறுதி அத்தியாயம் கூடுதல் கவனம் பெறுகிறது. ஏனெனில், ‘ஐகானோகிளாஸ்ட்’ எனும் பதத்தை அம்பேத்கருடன் பொருத்திப் பார்க்கும் வேலை நடைபெறுவது இங்குதான். முந்தைய அத்தியாயங்களை ஆழமாகப் படிக்கையில், அம்பேத்கரின் ஆளுமையில் உள்ள சிற்சில குறைபாடுகளையும் அரசியல் வாய்ப்புகளில் இருந்த கட்டுப்பாடுகளையும் நூலாசிரியர் முன்வைப்பது புலனாகும். அதன்மீதான விமரிசனத்தை இறுதி அத்தியாயத்தில் உரையாடுகிறார்.

சான்றாக: இந்நூல் சில கருத்துகள் மீது தொடர்ச்சியாக விமரிசனங்களை முன்வைக்கிறது. அம்பேத்கர் தனது முனைவர் பட்ட நெறியாளரிடம் பொய் உரைத்தாரா எனக் கேட்பது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சாதி குறித்த அணுகுமுறையைக் கேள்விக்குள்ளாக்குவது; சாதி முறைக்கும் வகுப்பு பேதத்திற்கும் இடையிலான அவரின் இணைப்பை எத்தகைய புரிதலுக்கு உட்படுத்துவது என்று தொடர்ச்சியாகப் புதிர்போடுகிறார். சாதி குறித்த அடிக்கட்டுமானங்களை உணர்வதற்கு இந்து சமய புனித நூல்களை அளவுக்கு விஞ்சி அம்பேத்கர் கவனப்படுத்தினார்; எதார்த்த வாழ்வில் இதற்குத் துணை நின்ற காரணிகளைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இது அவரின் சாதி குறித்த புரிதலில் குறைபாடு உண்டாக்கியது என்று டெல்டும்டே வாதிடுகிறார்.

ஆனால், அம்பேத்கர் சமய நூல்களை மட்டுமே கருத்தில் கொண்டு சாதி எதிர்ப்பில் ஈடுபட்டார் எனச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. முதலாளித்துவச் சமுதாயம் உருவாக்கிய ஏற்றத்தாழ்வு நிறைந்த வாழ்வையும் தம் சிந்தனைக்கு உட்படுத்தினார். பொருள்மைய காரணிகளே சாதியின் தோற்றத்திற்கு அடிப்படை என டெல்டும்டே சொல்வதோடு, உண்மையில் அம்பேத்கரும் ஒத்துப்போகிறார். சமூகக் குழுக்கள் சீரான வளர்ச்சி விகிதத்தில் சாதியாக வளர்ச்சிபெற்றதை அவர் படைப்புகளில் காணமுடியும். அதே சமயம், இந்தியாவில் சமூகக் குழுக்களின் நிலை வேறு இயல்பினது என்று உணர்கிறார். இங்கு அவை சாதிய முறையால் உருப்பெற்றுள்ளன. சமூகப் பொருளாதார வாழ்வை நிர்ணயிக்கும் சமயம் சார்ந்த புனித நூல்கள் இவ்வொடுக்குமுறைக்குப் புனிதப் பட்டம் அளித்து மெச்சியுள்ளன. எனவே, இந்தியாவில் நிலவும் ஏற்றுத்தாழ்வுகளுக்குப் புனித நூல்களின் பங்கு அளப்பரியது என்று அம்பேத்கர் வாதிட்டார்.

இப்புரிதலை மனத்திலிருத்திக்கொண்டு, அம்பேத்கர் காலத்து இந்தியச் சமூகம் புனித நூல்களில் சொல்லப்பட்ட சாதி சார் தொழில்களை ஏன் பெருவாரியான கிராமங்களில் வலிந்து திணித்தது என்று ஆராய்ந்தால் விடை கிடைக்கும். அம்பேத்கருக்கு வகுப்புவாத குழுக்கள் பற்றி மனத்திலிருந்த திட்டம் இந்தியச் சமூகத்தின் எதார்த்த வாழ்வினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் சந்தேகம் வேண்டாம்.

அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு சமூகத்திலும் சமயத்திலும் அடிப்படை மாற்றங்கள் உண்டாக வேண்டும் என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். இதன்மூலம் அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையே மறைமுகப் பிணைப்பு இருப்பதை அவர் உறுதியாக நம்பினார் எனச் சொல்லமுடியும். சோசலிச அரசு அமைவதிலும், தொழிலாளர் நல உரிமைகளில் கவனம் கொண்டதிலும் அம்பேத்கரின் பார்வை பிரதிபலிக்கிறது.

இறுதி அத்தியாயத்தில், டெல்டும்டேவின் விமர்சனங்கள் தொகுத்துக் கொடுக்கப்படுகின்றன. விமர்சனப்பூர்வமாக எதிர்கொள்ளாமல் – கிட்டத்தட்ட கடவுளைப் போல் அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளப்பட்டதை மென்மையாகச் சாடுகிறார். இத்தகைய மீதூர வழிபாட்டினால் அம்பேத்கரின் உண்மைக் கோட்பாடுகளைத் தழுவி நிழலுலக அநீதிகளை எதிர்த்துப் போராட வலிமையற்றுப் போவோம் என்று எச்சரிக்கிறார் டெல்டும்டே.

அம்பேத்கர் ஒரு குற்றமற்ற ஆளுமை எனச் சித்திரிப்பது, இறைநிலைக்கு உயர்த்துவது போன்றவை அரசியலற்றச் செயல்பாடு என்று அவர் குறிப்பிடுகிறார். இவை அறிவியக்கத்தின் முன்னேற்றத்தைத் தடை செய்வதுடன், அதன் செயல்பாடுகளையும் வலிமை குன்றச் செய்யும் என்கிறார். அம்பேத்கர் குறித்த பிரதிபலிப்புகளால் உந்தப்பட்டு எழுதியவை என்றாலும், ஒரு கட்டத்தில் தனிப்பட்ட கருத்துகளின் தாக்கம் இந்நூலில் அதிகரிக்கிறது. சில வாதங்கள் குறுகிய நோக்குடனும் அர்த்தமற்றதாகவும் இருக்கின்றன. அவற்றைப் பின்னர் குறிப்பிடுகிறேன்.

இன்றைக்குள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல், பணம் செலவளித்து விளம்பரப் பரப்புரை செய்து, கட்டமைக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பின்புலத்தால் மேலிருந்து கீழாக ஒற்றைத் தலைவராய் பிம்பம் ஏற்றப்பட்டு உயர்வு எய்தியவர் அல்ல அம்பேத்கர். தலித் அரசியல் இயக்கங்கள் அம்பேத்கருக்குப் புனித உருவம் உண்டாக்குவதில் கணிசமாகப் பங்காற்றின என்றாலும், கீழிருந்து மேலாக மக்களே அவரை வணக்கத்திற்குரிய மனிதராக உயர்த்தினர் என்பதுதான் இங்குத் தனித்துவமான விஷயம்.

கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் தலித் மக்கள், தம் வாழ்க்கைக்குக் கண்ணியமும் மதிப்பும் தேடிக்கொள்ள அம்பேத்கர் எனும் ஆளுமையைத் தழுவிக்கொள்கின்றனர். இச்செயல்பாடு ஏதேனும் ஓர் இயக்கத்தாலோ, தனி நபராலோ திட்டமிட்டுச் செய்யப்படுகிறது எனச் சொல்வதற்கில்லை. பிரெஞ்சு தத்துவ அறிஞர் டெலூஸின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘படரும் வேர்த்தண்டின்’ குணநலன்களைப் பெற்று எவ்விதிக்கும் ஆட்படாமல் எல்லாத் திசைகளிலும் இச்சுடர் படர்கிறது. நிச்சயமாக இது அரசியலற்றச் செயல்பாடு அல்ல.

அம்பேத்கரிடம் முழுமையாகச் சரணடைபவர்களைக் காணும்போது, அவர்களின் தனிப்பட்ட பிணைப்பைக் கண்டு ஒருவித அனுதாபம் தோன்றுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் சுதந்திரத்திற்கான குறியீடாக மட்டுமன்றி, பல்வேறு தலித் மக்களின் வலி நிறைந்த வாழ்வைப் பிரதிபலிக்கும் கர்த்தாவாக விளங்குகிறார். மக்கள் தத்தமது வாழ்வியல் அனுபவங்களை அவர் உருவத்தின் மீது ஏற்றிப் பார்க்கின்றனர். ஆகவே, அம்பேத்கரைக் கொண்டாடுவது அர்த்தமற்றது என்றோ மீமிகைக் கற்பனையோ என்றோ சொல்வதில் நியாயமில்லை. மாறாகக் கீழிருந்து இயக்கப்படும் தலித் அரசியலில், தலித் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து துளிர்விடும் பலமான எதிர்ப்பின் இலைகள் அவை.

அதேவேளையில் அம்பேத்கரை வழிபாட்டு நிலைக்கு உயர்த்தும்போது, தலித் இயக்கங்களுக்குள் ஓர்மை உண்டாகிறது; செல்ல வேண்டிய பாதை குறித்துத் தெளிவு பிறக்கிறது. இதுபோன்ற சடங்குகளும் குறியீடுகளும் முற்போக்கு இயக்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன; மனிதர்கள் ஒருங்கிணைந்து கூட்டு நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள இடமளிக்கின்றன. வரலாற்று அழிப்புக்கு எதிரான தலித்துகளின் ஒட்டுமொத்த போராட்ட வடிவம்தான் இந்த வழிபாடு என்று சிலர் கருதுகிறார்கள். வெவ்வேறு துணைநிலைச் சாதிகள் ஒரேவிதமான பொது அனுபவத்தின் மூலம் ஒன்றிணைகின்றன.

இந்திய அரசியல் கலாச்சாரத்தில் தனிமனித வழிபாடு, சடங்கியல் நிகழ்வு, அரசியல் பயணங்கள் அனைத்தும் நீண்டகாலமாகவே பிரிக்கமுடியாத பந்தத்தில் இருக்கின்றன. இவற்றைப் பொதுநிலையில் விமரிசனம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். ஆனால், அம்பேத்கரிய இயக்கங்களை மட்டும் தனியே கோடிட்டுக் காட்டுவது அபாயகரமான விஷயம். இது தலித்துகள் முதலான விளிம்புநிலை மக்கள் மீது நியாயமற்ற, இனவெறிகூடிய பார்வையைப் பலப்படுத்துகிறது. அம்மக்கள் உணர்வுநிலைக்கு ஆட்பட்டவர்கள் போலவும், தெளிவான மனநிலையோடு பகுத்தறிவுடன் சிந்திக்கும் திறன் அற்றோர் போலவும் தவறாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்கள்.

அம்பேத்கர் எழுதிய ‘சாதியை அழித்தொழித்தல்’ நூலுக்கு, அருந்ததி ராய் முன்னுரை எழுத வேண்டும் என்று நவயானா பதிப்பகம் கோரியபோது அம்பேத்கரைப் பின்பற்றும் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்தச் சூழலில் மேற்சொன்ன விஷயம் தெளிவாக உணரப்பட்டது. அருந்ததி ராய் எழுதிய உள்ளடக்கம் பற்றியும், மறுப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுக் காட்டியும், கொந்தளிப்பு வெடித்த சூழலைத் தெளிவாக வரையுறுத்துக் கூறியும் எதிர்த்தரப்பினர் செவிமடுத்துக் கேட்கவில்லை. தீவிர விமரிசனங்களுக்குப் பதிலளிக்காமல், அவற்றை உணர்ச்சிப் பிரவாளக் கொந்தளிப்பு எனச் சொல்லி ராயின் ஆதரவாளர்கள் கைக்கழுவினார்கள்.

தர்க்கப்பூர்வமான உரையாடல்களை வேண்டுமென்று நிராகரித்தார்கள். Hatred in the Belly புத்தகத்தில் அம்பேத்கரிய கொள்கைவாதிகளின் நியாயமான கருத்துப் போராட்டம் பற்றிய செய்திகள் இடம்பெற்றிருக்கின்றன. அறிவு உற்பத்தித் தளத்திலும் பகிர்மான நிலையிலும் தலித் மக்கள் மீது தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்தப்பட்டுவருகிறது. சாதியத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்ப்பது நோக்கம் என்று சொன்ன பதிப்பகங்கள் கூட வியாபாரக் காரணங்களால் தலித் வாழ்க்கை மீது சமர் புரிகின்றன.

ஐகானோகிலாஸ்ட் புத்தகத்திற்கு முன்கூட்டியே பாராட்டுரைப் பெறுவதற்காக 17 ‘அறிஞர்களை’ தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் – இப்பட்டியல் பதிப்பகத்தாரால் உறுதியானதாக இருக்கலாம் – ஆச்சரியங்கொள்ளும்படி அதில் ஒருவர்கூட தலித் இல்லை. அம்பேத்கரியப் படிப்புகளில் தலித் அல்லாதவர்களின் குரல் எங்ஙனம் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்று. ஆனால், இதுபோன்ற அதிகாரக் குரல்கள் கிராமப்புறங்களில் வலுவிழக்கின்றன. அங்குள்ளவர்கள் அம்பேத்கரின் எழுத்துகளை அறிவுஜீவிக் கொடையாக மட்டும் கருதாமல், சமூக விடுதலைக்கும் கூட்டு அடையாளத்துக்கும் வழிகாட்டும் விளக்காய் பார்க்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளில் உள்ள தலித் இயக்கங்களோடு கள – ஆய்வின் பொருட்டு நான் உரையாடிய சமயம், அவர்களின் சிந்தனையும் செயல்பாடுகளும் அம்பேத்கரின் பிரதிபலிப்பில் உருவானவை என்று உணர்ந்தேன். தலித்துகளின் பொருளாதாரப் பிரச்சினையைச் சமூகச் சிக்கல்களுடன் பொருத்திப் பார்க்கும் போக்கு எப்போதுமே அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. ஆகவே, தலித் இயக்கங்கள் கலாச்சாரப் போராட்டங்களில் அதிகச் சிரத்தையுடன் நேரம் செலவளிக்கின்றன எனச் சொல்வது தவறான பார்வை மட்டுமல்ல, கள – எதார்த்தத்தின் அடிப்படைப் புரிதலற்ற மதிப்பீடு.

நன்றி: thewire.in (Faulty Gaze: Misinterpreting the Ideology of the Iconoclast)

கட்டுரையாளர் இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் மானுடவியல் மற்றும் சர்வதேச வளர்ச்சித் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

] [email protected]

Previous
காசி

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger