என் சொற்களை
ரசக்குடுவையில்
ஊற வைத்திருக்கிறேன்.
பழைய திராட்சைக்கனியோடு
சிவந்த ரோஜா இதழ்களின்
அத்தர் இட்டு
அவ்வப்போது ஈட்டிய
பாவங்களோடு
சிறிது அழுகிய துன்பம் சேர்த்து
ஊறிக்கொண்டிருக்கின்றன
என் சொற்கள்.
அவற்றை எடுத்து
அப்பமளவு உருட்டித் தட்டி
உங்கள் நாவிற்குப்
படைக்கத் திட்டம்.
பிதாக்களே!
பெற்றுக்கொள்ளுங்கள்
பரிமாறுகிறேன்
நினைவில் கொள்ளுங்கள்
சொற்கள்
செரிக்கப்பட வேண்டியவை.
ஆமென்