நீட்: மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலம்

தலையங்கம்

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) 35 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியது. அதனைத் தொடர்ந்து, அண்மையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்ததன் பின்னணியில், கடந்த 25ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

அதே நாளில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 19 வயது மாணவி அன்கிதா சாங்களே, நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியால் தனது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அந்தக் கடிதத்தில்,

“நீங்கள் என் மீது அளவு கடந்த அன்பைப் பொழிந்தீர்கள். ஆனால், உங்கள் ஆசைகளில் ஒன்றைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அம்மா, ஒவ்வொரு கஷ்டமான சூழலிலும் ஒரு தோழியைப் போல எனக்குத் துணையாக இருந்தீர்கள். அண்ணா, நீங்களும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தீர்கள். அம்மா, அப்பாவை விடவும் அதிகமாக என்னை நேசித்தீர்கள். நான் தற்கொலை செய்துகொண்டதற்கு நீங்கள் யாரும் எந்த வகையிலும் பொறுப்பல்ல.  நான் நீட் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எனக்காக நீங்கள் அனைத்தையும் தியாகம் செய்தீர்கள். ஆனால், உங்கள் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல், நான் தோல்வியடைந்துவிட்டேன்.”

19 வயதான மாணவி, தன் மரணத்திற்குப் பிறகும் யாரும் குற்றவுணர்வுக்கு ஆளாகக் கூடாது என்ற முதிர்ந்த சிந்தனையுடன் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். ஆனால், இத்தகைய ‘கொலைகளுக்கு’ வழிவகுக்கும் நீட் தேர்வு முறையைத் தொடர்ந்து பாதுகாத்துவரும் பாஜக அரசு, இதுவரை எந்தவித அரசியல் அல்லது தார்மீகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தவில்லை. மற்றொருபுறம், நீட் தேர்வை அதன் நடைமுறைக் குறைபாடுகள் அல்லது நிர்வாகக் குளறுபடிகளின் அடிப்படையில் மட்டுமே விமர்சித்துவந்தவர்களும், அன்கிதாவின் மரணத்திற்குப் பிறகு, தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இதுபோன்ற மரணங்கள், பிரச்சினை தேர்வு நடத்தும் முறையில் இல்லை; தேர்வு முறையின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே உள்ளது என்ற உண்மையை இன்னும் தீவிரமாக முன்வைக்கின்றன.

நீட் தேர்வு, அது நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்து எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. இந்த எதிர்ப்புணர்வு, மாணவர்களின் திறமை குறைபாட்டிலிருந்து வந்ததல்ல. மாறாக, நீட் தேர்வானது சமூக – பொருளாதார – உளவியல் ரீதியாக மாணவர்களைத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கக்கூடிய கட்டமைப்பைக் கொண்டது. குறிப்பாக, பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் சமமான போட்டிக்கான வாய்ப்புகளை இழந்து, கடுமையான மன அழுத்தம், குடும்பச் சுமை, தனியார் பயிற்சி மையங்களின் ஆதிக்கம், எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

அதேவேளையில், இந்தியாவிலுள்ள தனியார் பயிற்சி மையங்கள் ஆண்டுக்குச் சுமார் ரூ.58,000 கோடி மதிப்புள்ள வணிகமாக வளர்ந்துள்ளன. அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து, மறுதேர்வு நடத்தப்பட்ட அந்த ஒருமாத இடைவெளியைக் கூட பயிற்சி மையங்கள் வணிக வாய்ப்பாக மாற்றின. மறு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, கூடுதலாக அந்த முப்பது நாட்களுக்கான பயிற்சிக் கட்டணத்தையும் மாணவர்களிடமிருந்து வசூலித்தன. நீட் தேர்வால் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் சமமான மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பெறுவர் எனப் பொய் சொல்லி நீட்டை நியாயப்படுத்திய பாஜக அரசால், குறைந்தபட்சம் இந்தப் பயிற்சி மையங்களின் சுரண்டலையாவது தடுக்க முடிந்திருக்கிறதா? கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு அரசுத் தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, பூஜ்யம். 2021இல் இருந்து இப்போது வரை நீட் தேர்வால் 93 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். அண்மையில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவால் ஒரே மாதத்தில் 13 பேர் மரணத்திருக்கிறார்கள், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர்.

இவை அல்லாமல் 2014 முதல் 2024 வரை இந்தியாவில் 1.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட Accidental Deaths and Suicides in India (ADSI) அறிக்கையின்படி, 2014இல் 8,068 ஆக இருந்த மாணவர் தற்கொலைகள், 2024இல் 14,488 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 80% அதிகரிப்பைக் குறிக்கிறது.

நீட் தேர்வுக்கு ஆண்டுதோறும் 15 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்தாலும், தகுதி பெறுபவர்கள் 57%க்கும் குறைவாகவே உள்ளனர். இதனால் பல மாணவர்கள் மீண்டும் ஓராண்டு முழுவதும் பயிற்சி மேற்கொண்டு தேர்வை எழுத வேண்டிய நிலை உருவாகிறது. தனியார் பயிற்சி மையங்களின் அவசியமும், மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய கட்டாயமும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை அதிகரிப்பதாக Times of India புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ‘மருத்துவர்’ அனிதா தற்கொலைக்குப் பிறகு மிகப்பெரிய சமூக, அரசியல் எழுச்சி உருவானது. பாரதிய ஜனதா கட்சியையும், அதனுடன் இணைந்த இந்து அமைப்புகளையும் தவிர்த்து, நீட் ஒழிப்பு என்ற ஒற்றைப் புள்ளியில் ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தன. பாரதிய ஜனதா ஆட்சியை ஆதரித்துக்கொண்டே, நீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் இருப்பதாக அறிவித்துக்கொண்டது அப்போதைய அதிமுக அரசு. நீட்டை ஒழிப்பதாகக் கூறி 2019 நாடாளுமன்றத் தேர்தலையும், 2021 சட்டமன்றத் தேர்தலையும் திமுக எதிர்கொண்டது. ஆனால், நீட்டை ஒழிக்கும் இரகசியத்தை இறுதிவரை தெளிவுபடுத்தாமலேயே அதன் ஆட்சிக் காலம் முடிந்தது. நீட்டுக்கு எதிராக நாடு முழுவதும் உருவாகி வரும் எதிர்ப்பின் தொடக்கப்புள்ளி தமிழ்நாடுதான் என்றும், அந்த எதிர்ப்பைத் தேசிய அரசியல் விவாதமாக மாற்றியதில் தங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் திமுக கோரி வருகிறது.

ஆனால், உண்மையில் 2021இல் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் நீட் தொடர்பாக எந்தப் பெரிய அரசியல் விவாதத்தையும் திமுக முன்னெடுக்கவில்லை. 2021-2026 காலகட்டத்தில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த பெரும்பாலான மாணவர்களின் மரணங்களைக் கூட திமுக தொடர்ந்து நினைவுகூரவில்லை. தேர்தலுக்கு முன்பு நீட் எதிர்ப்பை முக்கிய அரசியல் விவாதமாக மாற்றியதை மறுக்க முடியாது. ஆனால், அந்த எதிர்ப்பை மக்கள் இயக்கமாகவும், மாணவர் இயக்கமாகவும் வளர்த்தெடுக்கும் அரசியல் முயற்சி, எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கூட மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் CJP மூலம் இன்று நாடு முழுக்கச் சாத்தியப்பட்டிருக்கும் உரையாடல் முக்கியமானது. ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட வேண்டிய ஓர் உயிர்க் கொல்லி நோயாக நீட் நாளுக்கு நாள் பரிணமித்துக்கொண்டே இருக்கிறது. பாரதிய ஜனதாவின் ஒட்டுமொத்த ஆட்சியும், அது அறிமுகப்படுத்திய, அறிமுகப்படுத்தவிருக்கும் அத்தனை மசோதாக்களும் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானவை.

நிலம் கையகப்படுத்தும் சட்டம், துறைச் செயலாளர் அந்தஸ்து கொண்ட பதவிகளுக்கு நேரடி நியமனம் (Lateral Entry) உள்ளிட்ட சில திட்டங்கள் அரசியல் காரணங்களால் மத்திய அரசால் கைவிடப்பட்டுள்ளன. எம்.ஜே.அக்பரும் பதவி விலகியிருக்கிறார். ஆனால், கடந்த 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில், எந்த அரசியல் கட்சியையும் சாராமல் மாணவர்களின் சுயாதீனமான போராட்டத்தின் விளைவாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்ற நிகழ்வாக மட்டுமே பார்க்கப்பட முடியாது. அதைவிட முக்கியமாக, பாரதிய ஜனதா ஆட்சியின் அதிகார வர்க்கத்திற்கு எதிராக இளைஞர்கள் தன்னெழுச்சியாக அணிதிரளும் அரசியல் சாத்தியம் உருவாகியிருப்பதையே அது சுட்டிக்காட்டுகிறது. இந்தப் போராட்டத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர். அவர்களை ஒடுக்குவதற்காகக் காவல்துறையினரும் துணை இராணுவப் படையினரும் இணைந்து நடத்திய தாக்குதல்கள், இரும்பு ஆணிகள் பொருத்தப்பட்ட தடுப்புகள், பெல்லட் குண்டுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் என இவை அனைத்தையும் கடந்து, தங்களது போராட்டத்தின் மீது கொண்டிருந்த உறுதியை அவர்கள் தளர விடவில்லை. ஜனநாயகப்பூர்வமான போராட்டத்தின் மீதான இந்த நம்பிக்கையும், சமகால இளைஞர்களின் நெஞ்சுறுதியும், CJP அமைப்புடன் இணைந்து அவர்கள் உருவாக்கிய இந்த எழுச்சியும் இன்றைய தலைமுறைக்கு முக்கியமானதோர் அரசியல் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஜனநாயகபூர்வமான போராட்டத்தின் வாயிலாக உரிமையை வென்றெடுப்பதற்கான சூழலையே திமுக, அதிமுக ஆட்சிகள் கடந்த காலங்களில் உருவாக்கித் தரவில்லை. அத்தகைய மக்கள் போராட்டங்களை ஊக்குவித்ததும் இல்லை. ஜல்லிக்கட்டு போராட்டம், PETA என்கிற அமைப்பை எதிர்த்துப் போராடியவரை ஊக்குவிக்கப்பட்டது; மாநில, மத்திய அரசு பறித்த உரிமைகளுக்கு எதிரான முழுக்கங்களாக மாறியபோது, அப்போராட்டம் வன்முறையைக் கொண்டு முடித்து வைக்கப்பட்டது. காவல்துறை அனுமதி இல்லாமல் போராடுவதற்கேற்ப அமைந்திருக்கும் ஜந்தர் மந்தர் போன்றதோர் இடம் இங்கே இன்றுவரை சாத்தியமில்லாமல் இருக்கிறது. நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்படி ஒதுக்கப்பட்ட இடங்களில் சில மணி நேரங்கள் அடையாளப் போராட்டம் செய்வதே இங்கு நடைமுறையாக இருக்கும்போது, தன்னெழுச்சியான இளைஞர் கூட்டம் வெற்றிகரமானதொரு போராட்ட வழிமுறையை இந்தியாவிற்குக் கையளித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அப்படியான ஓர் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை த.வெ.க. அரசிடம் ஜனநாயகத்தை நம்பும் எல்லா இயக்கங்களும் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும்.

நீட் விவகாரத்தைப் பொறுத்தவரை, அத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற நம் காரணங்கள் பிற மாநிலங்களுக்குப் போய்ச் சேர வேண்டும். இன்று அங்கு சாத்தியப்பட்டிருக்கும் போராட்ட முறை, தமிழ்நாட்டில் பின்பற்றப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

நீட் எனும் கல்வி வணிகத்தின் சமூக – பொருளாதார அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தொடர்ந்து மாணவர்கள் தம்மை மாய்த்துக்கொள்ளும் சூழலில், அண்மையில் மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2,72,000 மாணவர்கள் மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்ற உண்மையைப் பலரும் கவனிக்கத் தவறிவிட்டனர்.

நீட் போன்ற ஒரு தேர்வை ஒருமுறை எதிர்கொள்வதே பல மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் நிலையில், அதை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால நம்பிக்கையை நீட் எனும் தேர்வு முறை தொடர்ந்து சிதைத்து வருகிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை நீட்டுக்காக மட்டுமே படித்து, அதில் வெற்றி பெற முடியாமல் பின்னர் வேறு படிப்புகளுக்குச் சென்ற மாணவர்களின் உளவியல், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. இவ்வளவு ஆழமான சமூகப் பிரச்சினைகளை உருவாக்கியுள்ள ஒரு தேர்வு முறை இனியும் இந்த நாட்டிற்குத் தேவையா என்பதை அரசு, அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் என ஒட்டுமொத்த சமூகமே அழுத்தமாக மறுபரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டிய காலம் இது.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger