“மகளே,
இந்தச் சொற்களை நீ வாசிக்கும்போது, உன் உடலில் ஓடும் என் ரத்தத்தின் ஒரு துளிகூட உனக்கு அந்நியமாகத் தோன்றலாம். உன் பிறப்புச் சான்றிதழில் அப்பாவின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ஓர் இடைவெளி இருந்திருக்கும். அந்த வெற்றிடம் தற்செயலான மறதி அல்ல; அது உன்னைக் காப்பதற்காக நான் உனக்குக் கொடுத்த பரிசு.
ஒரு தீவிலிருந்து இன்னொரு மேட்டு நிலத்துக்கு நிழல்களைப் போலத் தப்பி ஓடுபவர்களுக்கு, முகம் என்பது வரமல்ல, அது ஒரு தூக்குக்கயிறு. உன்னை அரசு ஆவணமொன்றின் காகிதக் கூண்டுக்குள் சிறை வைக்க எனக்கு மனமில்லை. அதனால்தான், அந்த இருண்ட சுரங்கப்பாதையின் நுனியில், என் உயிரினும் மேலான உன்னையும் உன் தாயையும் அந்த மாய உலகத்திலேயே விட்டுவிட்டு, நான் மட்டுமாக இருளுக்குள் கரைந்து போனேன்.
அன்று அந்த மருத்துவமனை எனக்குக் கட்டடமாகத் தெரியவில்லை; உயிர்களைக் காவு வாங்கும் பிரம்மாண்டமான இயந்திரமாக, சுவர்கள் நகரும் மாயக் குகையாக இருந்தது. கண்ட முகங்களும், கேட்ட இரும்புச் சக்கரங்களின் ஓசையும் இன்றும் என் கனவுகளில் ரயில்களாக தொடர் வீறிடும் சப்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கின்றன.
நீ ஒருபோதும் அலைந்து திரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, உனக்கு நான் அப்பாவாக இல்லாமல் போனேன். இதோ, அந்த இரவின் கதையை உனக்காகச் சொல்கிறேன்…”
m
அந்த மருத்துவமனையின் இணைப்புப் பாலம் எனும் இருண்ட தொண்டைக்குள் நுழைந்தபோது, வெளிச்சம் அவனைப் பின்தொடர அஞ்சி வாசலிலேயே நின்றுவிட்டது. அது இரண்டு கட்டடங்களின் சிமெண்ட் இணைப்புப் பாலம் அல்ல; ஒரு மனிதனை அவனது கடந்த காலத்திலிருந்தும், எதிர்காலத்திலிருந்தும் துண்டிக்கும் காலப்பயணம். அந்தப் பாலத்தின் தளம், அவனது பாதங்களுக்குக் கீழே சதுப்பு நிலத்தைப் போல நெளிந்தது.
பாதையின் சுவர்கள், பல தலைமுறை நோயாளிகளின் ரகசிய அழுகுரல்களை உறிஞ்சி வைத்திருந்தன. அவன் நடக்க நடக்க, சுவர்கள் மூச்சுவிடுவதை அவனால் உணர முடிந்தது; அவை மெல்ல நெருங்கி வந்து அவனது தோள்களை உரசி, அவனைச் சிலந்தி வலை ஈயைப் போல மாற்றின. ஒவ்வொரு காலடியும் தரையில் படும்போது, அது வெற்றுப் பாத்திரத்தில் விழும் கல்லின் சத்தமாக அதிர்ந்தது. விசாரணை அறையின் கதவு தடதடத்துத் தட்டப்படும் சத்தமாக எதிரொலித்தது.
எதிர் வரும் அந்நிய முகங்கள், ஒளியிழந்த கண்களுடன் நிழல்களைப் போலக் கடந்தன. அவர்கள் மனிதர்களா? அந்தச் சுரங்கப்பாதையிலேயே உறைந்து போன ஆவிகளா? வெள்ளை நிற உடை அணிந்த ஆண் செவிலியர்கள், துருப்பிடித்த ஸ்ட்ரெச்சர்களைத் தள்ளுகிறார்கள். அந்த இரும்புச் சக்கரங்கள் தரையோடு உரசும் ஓசை அவனது நரம்புகளைத் துண்டிக்கின்றது. அந்தச் சத்தம், நள்ளிரவில் கைவிடப்பட்ட படகு நடுக்கடலில் பாறைகளின் மேல் உரசும் ஓலம். ஒரு கணத்தில் நடைபாதை பிரம்மாண்டமான இரும்புத் தண்டவாளமாக உருமாறியது. சக்கரங்கள் ரயில்களாக மாறி தன் மீது ஏறிஇறங்குவதைப்போல அவன் உணர்ந்தான். அந்த ரயில் அவனை அவனது மனைவியிடமிருந்தும், பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையிடமிருந்தும் வெகுதூரம் இழுத்துச் சென்றது.
பாதையின் மூலைகளில் அமர்ந்திருந்த ஒளியிழந்த சாம்பல் கண், அவனிடம் ஏதோ இரகசியம் சொல்லத் நெருங்கியது. “பதிவு செய்யாதே… பெயர்களைச் சொல்லாதே… பெயர்கள் உன்னைச் சிறைப்படுத்தும்” அசரீரி அவன் காதுகளில் விழுந்தது. பாதையின் முடிவில் மங்கலான ஒளி, விடுதலையாக அவனுக்குத் தெரியவில்லை; அதுவொரு புதிய சிறையின் வாசல். அவன் தன் மகளை நோக்கித் துழாவிய ஒவ்வொரு அடியும், ஒரு நிலத்தின் எல்லையைக் கடக்கும் நடுக்கமாக நெஞ்சில் பாரமேற்றியது.
சுவர்கள் இப்போது இன்னும் வேகமாக நகரத் தொடங்கின. அவனது முகாமுக்கும், அரசு மருத்துவமனைக்கும் இடையில் இருந்த வித்தியாசம் மறைந்து போனது. அந்த நீண்ட தொண்டைக்குள் செரிக்கப்படாத உணவைப் போலச் சிக்கிக்கொண்டான். இறுதியில், அந்த இருண்ட சுரங்கத்தின் மறுமுனையில் அவன் வெளியே வந்தபோது, அவனது கைகள் காலியாக இருந்தன. அவனது மனைவி, குழந்தை அனைத்தும் அந்தச் சுவர்களின் மடிப்புகளுக்குள் நிரந்தரமாக உறைந்து போயிருந்தன.
அவன் மட்டும் வெளியே நின்றான் – ஒரு தீவும் அடையாளமும் இல்லாத, ஆனால் அந்த மாயச் சுரங்கத்தின் இரகசியங்களைச் சுமந்துகொண்டிருக்கும் மனிதனாக..
செல்வன் நீண்ட நடைபாதையில் நடக்கத் தொடங்கியபோது, காலடிகள் தரையில் படவில்லை; ஏதோவொரு கறுப்புத் திரவத்தின் மேல் மிதப்பதுபோல உணர்ந்தான். அந்தத் திரவம் பல ஆண்டுகளுக்கு முன்னால் அவன் கடந்து வந்த நடுக்கடல் இருளின் உவர்நீரைப் போலக் குளிர்ந்திருந்தது. ஒவ்வோர் அடியும் நிலத்தில் ஊன்றுவதற்குப் பதிலாக, காலத்தின் ஆழத்திற்குள் அமிழ்ந்து போனது.
மருத்துவமனையின் சுவர்கள் மெல்லத் தளர்ந்து நகரத் தொடங்கின. வலதுபுறச் சுவர் இடதுபுறம் நோக்கியும், இடதுபுறச் சுவர் வலதுபுறம் நோக்கியும் மெல்லச் சரிந்து, அவனது உலகத்தைக் குறுகிய பிளவாக மாற்றின. அந்தச் சுவர்கள் வெறும் சிமெண்ட் பூச்சுகளால் ஆனவை அல்ல; அவை பல தலைமுறை அழுகுரல்களையும், பதிவு செய்யப்படாத மரணங்களின் சாம்பலையும் கொண்டு கட்டப்பட்டவை. அவன் நகர முயன்றபோது, அந்த வலைக்கயிறுகள் அவனது பெயரற்ற அடையாளங்களாக மாறி, அவனது கை கால்களை இறுக்கின.
அந்தச் சுவர்களில் படர்ந்திருந்த விரிசல்கள், மெல்லத் திறக்கும் கண்கள்போல அவனை உற்றுப் பார்த்தன. “இங்கே எதற்காக வந்தாய்?” என்று அந்தச் சுவர்கள் அவனது மொழியிலேயே கிசுகிசுத்தன. அவன் சந்தித்த அந்நிய முகங்கள், நடைபாதையின் பிசுபிசுக் காற்றில் மிதந்துகொண்டிருந்தன. அவர்கள் ஒவ்வொருவரும் எல்லை தாண்ட இயலாது தவிக்கும் ஆவிகளைப் போலத் தெரிந்தனர்.
திடீரென்று, பின்னாலிருந்து எழுந்த இரும்புச் சக்கரங்களின் ஓசை அவனது பிடரியைக் குளிர்ந்துபோகச் செய்தது. அந்தச் சத்தம் தரையில் உருளும் சக்கரங்களின் ஒலியல்ல; அது பிரம்மாண்டமான இரும்புக் கம்பம் ஒன்று தன் தண்டவாளத்தில் உரசிக்கொண்டு வரும் காது ஜவ்வுகள் அதிரும் ஓசை. அந்த நடைபாதையே இப்போது நீண்ட ரயிலின் உட்புறமாக உருமாறியது. ஜன்னல்கள் இல்லாத அந்த ரயிலில், அவன் தன் மனைவியையும் குழந்தையையும் தேடி ஓடினான். ஆனால், அந்தச் சுவர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி, புதிய முகாமின் முட்கம்பிகளாக மாறி அவனது தோலைத் துளைத்தன.
அவன் மாயச் சுழலுக்குள் அகப்பட்டுக்கொண்டான். ஒவ்வொரு முறை அந்தப் பாதையின் நுனியைத் தொடும்போதும், அது மீண்டும் ஒரு மைல் தூரம் பின்னோக்கி நகர்கிறது. அவன் ஓடவில்லை; திரவக் கனவுக்குள் நீந்திக்கொண்டிருந்தான். அவனது அடையாள அட்டை அந்தத் திரவத்தில் கரைந்து போனது. அவனது முகம் சிதைந்து, அந்தச் சுவர்களின் நிறத்திற்கு மாறியது. இறுதியில், அவன் தன் குழந்தையை அடைய முயன்றபோது, அந்தச் சிலந்தி வலை அவனது குரல்வளையை நெரித்தது; அவனால் தன் மகளின் பெயரைச் சொல்லக்கூட முடியவில்லை – அந்தப் பெயர் இன்னும் எந்தப் பதிவேட்டிலும் எழுதப்பட்டும் இருக்கவில்லை.
எதிரே வந்த அந்நிய முகங்கள் யாவும் சிதைந்த ஓவியங்களைப் போலத் தெரிந்தன. ஈரமான காகிதத்தில் வரையப்பட்ட உருவங்கள் மழையில் கரைவது போல, அந்த முகங்களின் கண்கள் மூக்கோடு கலந்து, வாய் காதோடு ஒட்டி, அடையாளம் காண முடியாத சதைக் குவியலாக அவனைத் தாண்டி அவர்கள் சென்றார்கள். அவர்கள் மனிதர்களா அல்லது அந்த மருத்துவமனையின் பேராசை கொண்ட சுவர்களால் உறிஞ்சப்பட்ட, ரத்தமும் சதையுமற்ற வெறும் வெளிறிய ஆன்மாக்களா என்று அவனுக்கு மயக்கமெழுந்தது. அவர்கள் பேசவில்லை; ஆனால், அவர்கள் கடந்து போகும்போது ஒருவிதமான பழைய காகிதங்கள் உரசும் சத்தம் அந்தச் சுரங்கமெங்கும் கேட்டது.
திடீரென்று, அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு வெள்ளை நிற அங்கி அணிந்த ஆண் செவிலியர்கள் தோன்றினார்கள். அவர்கள் மனிதர்களைப் போல நடக்கவில்லை; இயந்திரத்தின் பாகங்களைப் போலச் சீராக இயங்கினார்கள். அவர்கள் தள்ளிக்கொண்டு வந்த அந்தப் பெரும் சக்கரங்கள் கொண்ட ஸ்ட்ரெச்சர்கள், மருத்துவ உபகரணங்களாக அவனுக்குத் தெரியவில்லை. அந்த இரும்புச் சக்கரங்கள் தரையில் உரசியபோது எழுந்த சத்தம், மாபெரும் இரும்புத் தண்டவாளத்தில் ரயில் அதீத வேகத்தில் பாய்ந்து வருவது போன்ற பிரமையை உருவாக்கியது.
ஓவியம்: நடராஜன் கங்காதரன்
அந்தச் சத்தம் அவனது மண்டை ஓட்டைக் கனமான இரும்புச் சுத்தியலால் அடிப்பதுபோல இருந்தது. தடம்… தடம்… அதிர்வு கால்களில் தொடங்கி, முதுகுத்தண்டு வழியாக ஏறி, அவனது நரம்பு மண்டலத்தையே சிதைத்தது. ஒவ்வொரு முறை அந்தச் சக்கரங்கள் தரையின் பிளவுகளில் மோதும்போதும், செல்வனின் கண்கள் இருண்டன. அந்தச் சத்தம் அவனை இங்கிருந்து அப்படியே அள்ளிக்கொண்டு, அவன் என்றோ புதைத்துவிட்டு வந்த ஒரு போர்முனைக்கோ அல்லது முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாமுக்கோ இழுத்துச் செல்லத் துடித்தது.
சுரங்கப்பாதையின் தரை இப்போது அதிர்ந்தது. ரயில் நிஜமாகவே அங்கே ஓடிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். ஸ்ட்ரெச்சரில் கிடந்த நோயாளிகள் யாவரும் போரில் கொல்லப்பட்ட அவனது உறவினர்களாக மாறியிருந்தார்கள். அவர்களது காயங்களிலிருந்து வடியும் ரத்தம், அந்தச் சக்கரங்களின் சுழற்சியில் தெளிக்கப்பட்டு, சுவர்களில் ஒரு விசித்திரமான வரைபடத்தை வரைந்தது. அது அவன் பிறந்த தேசத்தின் வரைபடத்தைப் போலவே இருந்தது.
“இந்த ரயிலில் ஏறிவிடு… இது உன்னை உன் தேசத்திற்கே கொண்டு செல்லும்” என்று அந்த ஆண் செவிலியர்கள் ஒருமித்த குரலில் பாடுவதுபோல அவனுக்குத் தோன்றியது. ஆனால், அந்த ரயில் போய்ச் சேரும் இடம் ஒரு கல்லறையாகவோ அல்லது ஒரு சிறைச்சாலையாகவோதான் இருக்கும் என்று உள்ளுணர்வு எச்சரித்தது. தண்டவாளச் சத்தம் குழந்தையின் அழுகுரலை அமுக்கியது. அவன் தன் காதுகளைப் பொத்திக்கொண்டான். ஆனால், அந்தச் சத்தம் அவனது ரத்த நாளங்களுக்குள் ஓடத் தொடங்கிவிட்டது. அவன் அந்தச் சத்தத்திலிருந்து தப்பிக்க ஓடத் தொடங்கினான். நீண்ட நடைபாதை முடிவற்ற இரும்புத் தண்டவாளமாக அவனது கால்களுக்குக் கீழே நீண்டுகொண்டே சென்றது.
“பெயர் என்ன? பதிவு செய்தாயா?” என்ற கேள்விகள் அந்தச் சுரங்கத்தின் ஈரம் படிந்த மூலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான நாவுகளால் கேட்கப்படுவது போல எதிரொலித்தன. ஒவ்வொரு முறை அவன் அந்தப் பாதையைக் கடக்கும்போதும், அந்தப் பாதை ஒரு ரப்பரைப் போலத் தன் நீளத்தை அதிகரித்துக்கொண்டே போனது. அவனது வரைபடம் கிழிக்கப்பட்டு, வீடுகளின் கூரைகள் தீப்பற்றி எரிந்தபோது அவன் அடைந்த அதே கசப்பான பயம், இப்போது அவனது குழந்தையின் பிறப்புச் சான்றிதழுக்காக அலைந்தபோது மீண்டும் அவனது அடிவயிற்றில் பிறந்தது.
அந்த மருத்துவமனையின் கறுப்பு நிறப் பதிவுப் புத்தகங்கள் அவனுக்கு வெறும் ஏடுகளாகத் தெரியவில்லை; அவை இராணுவ நீதிமன்றத்தின் மரண தண்டனைப் பட்டியலாகத் தெரிந்தன. அங்கே எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தும் அவனது குழந்தையின் கழுத்தைச் சுற்றியிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கயிறாக உருமாறியது. “பெயர் ஒரு சிறை… பெயர் ஒரு விலங்கு” என்று அந்தச் சுரங்கத்தின் சுவர்கள் அவனது காதுகளில் இரகசியமாக முணுமுணுத்தன.
மனைவியின் அறைக்குள் நுழைந்தபோது, அறையின் வெம்மைக் காற்று ஒரு கனவைப் போலத் தேங்கிக் கிடந்தது. அவளது முகம், பல ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் தத்தளித்தபோது பார்த்த தூரத்து மேகத்தைப் போல மங்கலாகத் தெரிந்தது; அவளால் அவனை அடையாளம் காண முடியவில்லை என்பதுபோல ஓர் விகாரம் அந்த முகத்தில் படிந்திருந்தது.
தொட்டிலில் கிடந்த குழந்தை, கறைபடிந்த அவனது கைகளால் தொட முடியாத புனிதமான ஒளியால் சூழப்பட்டிருந்தது. அதுவொரு குழந்தை அல்ல, வரைபடத்தின் எதிர்காலம்; அந்த எதிர்காலம் மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் சிறைப்பட்டிருந்தது.
“நாம் போக வேண்டும். இந்தப் பாதை மூடிக்கொண்டிருக்கிறது. அந்தச் சுவர்கள் நகரத் தொடங்கிவிட்டன. நாம் பதிவு செய்யப்பட்டால், இந்தச் சுவர்கள் நம்மை நிரந்தரமாக விழுங்கிவிடும். நம்மை எண்களாக மாற்றி, ஒரு கோப்புக்குள் அடக்கிவிடுவார்கள்,” என்று அவன் அலறினான்.
ஆனால், அவனது குரல் தொண்டையிலேயே உறைந்து போனது. வாய் அசைந்தது; ஆனால், சத்தம் எழும்பவில்லை. சுரங்கத்தின் இரும்புச் சக்கரங்களின் ஓசை அவனது குரலை அப்படியே உறிஞ்சிவிட்டது. மனைவி அவனை ஒரு பைத்தியக்காரனைப் போலப் பார்த்தாள். அவள் அந்தச் சுவர்களின் அங்கமாக மாறிவிட்டிருந்தாள்; அவளது கால்கள் அந்தத் தரையில் வேர்விட்டிருந்தன.
சுரங்கம் இப்போது மூச்சு விடத் தொடங்கியிருந்தது. வெளிச்சம் வரும் பாதையில் பெரும் இரும்புத்திரை ஒன்று மெல்ல இறங்குவதை அவன் கண்டான். “இப்போதே… இப்போதே தப்பிக்காவிட்டால், நாம் எப்போதும் நிழல்களாகவே இருப்போம்!” என்று அவன் மனதிற்குள் கதறினான். ஆனால் அவன் மனைவியோ, தன் மகளுக்கு உணவளிக்கத் தயாராகிக்கொண்டிருந்தாள்.
குழந்தையை அவன் தூக்க முயன்றபோது, சுரங்கப்பாதையின் இரும்புச் சக்கரங்களின் ஓசை பிரம்மாண்டமாகப் பெருகி அறையையே அதிர வைத்தது. அது மரணத்தின் சங்கீதம்போல அவனது நரம்புகளைத் துண்டித்தது. சுவர்கள் இப்போது முற்றிலும் நெருங்கி வந்துவிட்டன; அவை ஈரமான சதையைப் போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளத் துடித்தன. அவனது பார்வை மங்கியது; கண் முன்னே அடர்ந்த புகைமூட்டம் எழுந்து, அவனது மனைவியைத் தின்னத் தொடங்கியது. அவளால் ஒருபோதும் அந்தச் சுவர்களைக் கடந்து வர முடியாது என்பதை உணர்ந்த கணத்தில், அவளது உருவம் பழைய புகைப்படத்தின் நிறத்திற்கு மாறி மங்கத் தொடங்கியது.
ஒரு பக்கத்தில், அவனது கடந்த காலத்தின் ஆவிகள் – கடலில் மூழ்கிய நண்பர்கள், எரிக்கப்பட்ட கிராமத்தின் சாம்பல் வாசனை – அவனைப் பின்னோக்கி இழுத்தன. மறுபக்கம், அந்த அந்நிய நிலத்தின் சட்டங்கள் பெரும் இரும்புச் சங்கிலியாக மாறி அவனது கழுத்தை இறுக்கியது. அவனது சுவாசம் தடைப்பட்டு மீண்டது.
நுழைவாயிலின் விளிம்பைத் தொட்டு, தெருவின் குளிர்ந்த காற்று அவன் முகத்தில் அறைந்தபோது, பின்னால் திரும்பிப் பார்த்தான். நீண்ட நடைபாதை ராட்சதப் பாம்பைப் போலச் சுருண்டு, தன் வாலால் நுழைவாயிலை அடைத்துக்கொண்டது. பாம்பின் வயிற்றுக்குள் அவனது மனைவியும் குழந்தையும் நிரந்தரமாக மறைந்து போனார்கள். அவர்கள் இருந்த இடத்தில் இப்போது வெறும் வெற்றுச் சுவர்கள் மட்டுமே இருந்தன.
மருத்துவமனையின் அந்தப் பகுதி பெரும் கல்லாக உறைந்தது. அவன் தன் கைகளைப் பார்த்தான்; அவற்றில் மகளின் வாசனையோ அல்லது மனைவியின் தொடுதலோ எஞ்சியிருக்கவில்லை. மாபெரும் படுகளத்திலிருந்து தப்பித்த ஒரே தனித்துவிடப்பட்ட ஒற்றனாய் நின்றான். அவனது வெற்றி பெரும் தோல்வியின் மறுபக்கம். அவன் சுதந்திரமானவன்; ஆனால், அந்தச் சுதந்திரம் அவனது ஆன்மாவை அந்தச் சுரங்கத்திலேயே அடகு வைத்துவிட்டு வந்திருந்தது.
இரும்புத் தண்டவாளச் சத்தம் தெருவின் இரைச்சலில் மெல்லக் கரைந்தது. செல்வனுக்குத் தெரியும், இனி தான் எந்தப் பாதையில் நடந்தாலும், அந்த இரும்புச் சக்கரங்கள் அவனது நிழலில் தொடர்ந்து ஓடிவரும் என்று.
பயம் அவனது அறிவைக் கொன்றது. அதுவொரு கருப்பு மேகமாக அவனது மூளையைச் சூழ்ந்து, சிந்தனைகளைத் தின்றுத் தீர்த்தது. அவனது இதயம் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பறவையைப் போலக் கதறியது. அவன் அந்தச் சுரங்கத்தின் நுனியில் தெரிந்த அந்த ஒற்றை ஊசிமுனை வெளிச்சத்தை நோக்கி, தனது கடைசிச் சொட்டு ரத்தத்தையும் பணயம் வைத்து ஓடினான். அவன் ஓடும்போது தரை அவனது காலடியில் நிலைகுலைந்து ஆடியது; திரவமாக மாறியிருந்த சிமெண்ட் தளம் அவனை உள்ளே இழுக்கப் பார்த்தது.
அவன் மட்டும் அந்த நுழைவாயிலைத் தாண்டி, வீழ்ந்த நட்சத்திரத்தைப் போலத் தெருவில் விழுந்தான். சுற்றிலும் உலகம் இயல்பான கதியில் சுழன்றுகொண்டிருந்தது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் வேகமாகக் கடந்து சென்றனர். வாகனங்கள் தாளகதியுடன் ஓடிக்கொண்டிருந்தன. செல்வன் மருத்துவமனைச் சுவர்களைத் தாண்டி மகளின் மனைவியின் காலத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்தான். அவனது கடிகாரம் சுரங்கத்தின் வாசலிலேயே கூண்டுக் கோபுரமாகவே நின்றுவிட்டது.
அந்த மாயச் சுரங்கம் அவனது வாழ்வை கத்தி கிழித்தாற்போல் இரண்டாகப் பிளந்துவிட்டது. ஒரு பாதியில் அவனது குடும்பமும், அவனது ஈரமான நினைவுகளும் இரும்புச் சக்கரங்களின் ஓசையில் உறைந்து கிடந்தன. அங்கே காலம் கிடையாது; அந்தப் புகையிரதச் சத்தம் மட்டுமே நித்யமான தாலாட்டு. மறுபாதியில் அவன் மட்டும், எந்த அடையாளமும் இல்லாத இன்மையோடு தெருவில் நின்றான். அவனது பெயர், நிலம், உறவுகள் சுரங்கத்தின் பசிக்கு இரை.
கைகளை விரித்துப் பார்த்துக்கொண்டான். உள்ளங்கைகளில் ரேகைகள் அழிந்துபோயிருந்தன. அவனது விரல்களில் எஞ்சியிருந்தது, அந்தப் பாம்பின் செதில்கள் உரசிச் சென்ற கசப்பான மணம் மட்டுமே. நடக்கத் தொடங்கினான். ஒவ்வோர் அடியிலும், அந்த மருத்துவமனையின் இரும்புச் சக்கரங்கள் அவனது எலும்புகளுக்குள் ‘தடம்… தடம்…’ என்று ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அவன் சுதந்திரமானவன்; ஆனால், அது ஒரு சுடுகாட்டின் அமைதியைப் போல அவனைக் கவ்விக்கொண்டிருந்தது.
தெருவில் கரைந்து போனான். அலைந்து திரிபவனாய் அல்ல, ஒரு நிழலாய்.
m chenthuxe@gmail.com





