“தனிமனித உளவியலில் சமத்துவம் வந்தால்தான் சாதியத்திற்கு எதிரான அமைப்புகள் சாத்தியம்”

தலித் பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளர் லலிதா | சந்திப்பு & எழுத்து : முத்துராசா குமார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த R.லலிதா (35) இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தில் (SASY – Social Awareness Society for Youths) பதினான்கு ஆண்டுகளாகத் தலித் பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளாராக இயங்கிவருகிறார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டப் பகுதிகளில் கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேலான சாதிய வன்கொடுமை வழக்குகளில் களப்பணியாற்றியுள்ளார். அதில் நான்கு வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனைகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் நிவாரணங்களும் கிடைத்துள்ளன. சாதிய வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்பட்டோருக்கு உளவியல் ரீதியான ஆற்றுப்படுத்துதல், மருத்துவ, சட்ட ரீதியாக உதவுதல், உண்மை கண்டறியும் பணி என்று இளம் வயதிலேயே தன்னை சாதியொழிப்புச் சமூகப் பணியில் இணைத்துக்கொண்ட லலிதா, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் முதுகலை சமூகவியல் முடித்துள்ளார்.

சமூகப் பணி நோக்கி, குறிப்பாய் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக வேலை செய்ய வேண்டுமென்று எந்தத் தருணத்தில் முடிவு செய்தீர்கள்.

என்னுடைய அப்பா, அம்மா சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். ஆதிக்கச் சாதியினர் ஊரின் முகப்பில் இருக்கிறார்கள். அடுத்து காலனி இருக்கிறது. அங்குதான் வசித்துவருகிறோம். ஊர்த் தெருவுக்குள் நாங்கள் போக முடியாது. தலித்தாக இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்ற சாதிக் கொடுமைகளைச் சிறுவயதிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். பள்ளிக்கல்வி முடித்த பிறகு, திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ சேர்ந்தேன். அம்மாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படிப்பைத் தொடர முடியவில்லை. குடும்பச் சூழலால் தெருவில் உள்ள பிள்ளைகளுக்கு டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். இயல்பிலேயே இருக்கும் பேச்சாற்றலால் தெருவுக்குள் வரும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு என்னைப் பிடித்துப் போனது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கத் தெருவில் முகாம்கள் நடத்துவார்கள். வேலை நேரம் போக அதில் நான் கலந்துகொள்வேன். பக்கத்து ஊர்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கவும், அதை அறிமுகம் செய்யவும் என்னையும் கூட்டிச் சென்றனர். அங்கு போய் பேசுவேன். அதற்கு ஊதியமும் கொடுத்தார்கள்.

அப்படியொரு ஞாயிற்றுக்கிழமை செஞ்சி அருகேயுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு இருக்கக்கூடிய அரசு ஆரம்பப் பள்ளியில் விடுமுறை நாளிலும் ஒரே கூட்டமாக இருந்தது. என்னவென்று விசாரித்தோம். அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த நான்காம் வகுப்பு பையன் வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் கடுமையாக அவனை அடித்து அப்பா, அம்மாவைக் கூட்டி வரச் சொல்லியிருக்கிறார். அந்தப் பையனின் கை, கால்கள், முகம் வீங்கியுள்ளதைப் பார்த்து அவனின் அம்மா மிகவும் மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார். ‘பையன் சரியா படிக்கல, வீட்டுப்பாடம் செய்யலைனா அடிக்காம என்னக் கூப்பிட்டுச் சொல்லிருக்கலாமேங்க சார். இப்படி அடிச்சுருக்கீங்களே. பையனுக்கு எதாவது ஆயிருந்தா என்ன சார் பண்றது?’ என்று ஆற்றாமையோடு ஆசிரியரிடம் கேட்டுள்ளார். ‘நீ என்னடி என்கிட்ட வந்து இப்படிப் பேசுற, மொத வெளில போடி’ என்று மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் தரக்குறைவாகத் திட்டியுள்ளார். ‘எம்புள்ளைய ஏன் இப்படி அடிச்சீங்கனு கேட்டா, இப்படி வாடி போடின்னு பேசுவியா. நீ வாத்தியாரா இருந்தா என்ன யாரா இருந்தா என்ன, நீ போடா வெளில’ என்று அந்த அம்மா பதிலுக்குத் திட்டியுள்ளார். வாத்தியாரின் ஊர் செஞ்சி. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அது மிகப்பெரிய அவமானமாக ஆகிவிடுகிறது. ‘உங்க அம்மா என் கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டால்தான் உன்ன ஸ்கூல்ல மறுபடியும் சேர்ப்பேன்’ என்று மாணவனிடம் சொல்லியுள்ளார். பிள்ளையின் படிப்பு பாதிப்புக்குள்ளாகி எதிர்காலம் பாழாகிவிடும் என்று யோசித்த அந்த அம்மா தன்மானத்தை விட்டு மறுநாள் போய் ஆசிரியரிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

கிராமப் பஞ்சாயத்தைக் கூட்டி ‘இவள் எங்களை அசிங்கப்படுத்திவிட்டாள், ஊர் முன்னிலையில் எங்கள் எல்லோர் கால்களிலும் விழுந்து மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என ஆசிரியர்கள் கூட்டாகச் சொல்லியிருக்கின்றனர். அந்த அம்மாவும் அனைவரின் கால்களிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். அதோடு அவர்கள் விடவில்லை. அந்த அம்மாவின் குடும்பத்தைப் பஞ்சாயத்தில் சமூகப் புறக்கணிப்புச் செய்துள்ளனர். ஊரில் எங்கும் ஆடு மாடு மேய்க்கக் கூடாது என்று ஊர்த் தடை விதித்துள்ளனர். அந்த அம்மாவின் வீட்டைச் சுற்றிக் கருவேல முள்வேலி போட்டிருக்கின்றனர். அவர்களைப் பற்றி மிகவும் அசிங்கமாக எழுதிய சுவரொட்டியை அவரது வீட்டில் ஒட்டியிருக்கிறார்கள். ஊரைச் சார்ந்துதான் வாழ்வாதாரம் இருப்பதால் அந்த அம்மா எந்த எதிர்வினையும் செய்யவில்லை. அப்போது எனக்குப் பதினெட்டு வயது இருக்கும். அந்த அம்மாவைப் பார்த்துப் பேசினேன். ‘இவ்வளவு கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு ஏன் இருக்கணும். போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கலாம் வாங்க’ என்று அழைத்தபோது அவர் வரவில்லை. அச்சம்பவத்தில் என்னுடைய கோபத்தைப் பார்த்து உடன் வந்த மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த அக்கா ஒருவர் ‘இளம் ரத்தம் இப்படித்தான் துடிக்கும். இங்க மட்டும் இப்படியில்ல, இதே மாதிரி நெறையா கிராமங்கள் இருக்கு. நீ ஆக்ரோஷப்படத் தேவையில்ல’ என்று சொன்னார். அந்தச் சம்பவம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

சமூகப் புறக்கணிப்புப் போன்ற சாதியக் கொடுமைகளை அப்போது நேரில் பார்த்தேன். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் இருக்கும் ‘அகல்’ திறன் மேம்பாட்டு மையம் எனது ட்யூஷன் சென்டருக்கு மிகவும் உதவினார்கள். சிலகாலம் கழித்து அருட்தந்தை ஒருவரின் உதவியோடுதான் முதுகலை முடித்தேன். எனது ஊரிலிருந்து வெளியே படிப்படியாகப் பயணிக்கையிலும், அருட்தந்தைகள் வழியாகவும், வாசிப்பு வழியாகவும் சாதிகள், அதன் கொடுமைகள் பற்றி தெரிந்துகொண்டேன். ட்யூஷன் வேலைகள் ஒருபுறம் இருந்தாலும், சாதிக் கொடுமைகளுக்கு எதிராக எதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், அதை எப்படி முறைப்படுத்துவது என்பது தெரியாமல் இருந்தது.

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தில் பணிபுரியும் முருகப்பன், மாறன் ஆகியோர் 2009ஆம் ஆண்டு என்னைத் தொடர்புகொண்டனர். SASY அமைப்பைப் பற்றிக் கூறினர். ‘உங்களைப் பற்றி நண்பர்கள் சொன்னாங்க. திண்டிவனத்தில் ஒரு மீட்டிங் இருக்கு. நீங்க வர முடியுமா’ என்று கேட்டனர். மீட்டிங்கில் கலந்துகொண்டேன். தமிழ்நாடு முழுதும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய கணக்கெடுப்புச் செய்யப் போவதாகச் சொன்னார்கள். பெஸ்வாடா வில்சன் அவர்களின் ‘சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன்’ அமைப்போடு சேர்ந்து கணக்கெடுப்புச் செய்தோம். செஞ்சி, திருக்கோவிலூர் பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கணக்கெடுப்புச் செய்து தருமாறு என்னையும் ரவி என்பவரையும் கேட்டார்கள். கணக்கெடுப்பு எப்படி எடுக்க வேண்டுமென்ற அறிமுகம் கொடுத்தனர். கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களின் ஊர், பெயர், கல்வி, குடும்பம், பொருளாதாரம், எத்தனை ஆண்டுகள் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள், இறப்புகள், சொந்த வீடு இருக்கிறதா, பிள்ளைகளின் கல்வி நிலை… இப்படியான தகவல்களுடனும் புகைப்படங்களுடனும் கணக்கெடுப்பைச் சமர்ப்பித்தோம். முதல் களப்பணி இதுதான். சிறுவர்கள், படித்த இளைஞர்கள் மலக்குழியில் இறங்கி மலம் அள்ளியதைப் பார்த்து மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒருவாரமாக என்னால் தூங்க முடியவில்லை, சாப்பிட முடியவில்லை. இவற்றுக்கு என்னதான் தீர்வு என நிறைய யோசித்தேன்.

SASY அமைப்பு அதன் செயல்பாடுகள், அதில் உங்களை இணைத்துக்கொண்டது பற்றிச் சொல்லுங்கள்.

1983ஆம் ஆண்டு தலித் ஆர்வலர்கள் குழுவால் நிறுவப்பட்ட தலித் மனித உரிமை அமைப்பே SASY. தலித், பழங்குடி மக்கள் மீது நிகழ்த்தப்படும் சாதிய வன்கொடுமைகள், காவல்துறை சித்ரவதைகளில் பாதிக்கப்படுவோருக்குத் துணையாக உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துதல், மருத்துவம், சட்ட ரீதியாக உதவுதலே SASYயின் நோக்கம். வன்கொடுமைகள் நடந்த இடங்களுக்குச் சென்று இரு தரப்பிலும் உரையாடி உண்மை அறியும் அறிக்கை தயார் செய்வதில் தொடங்கி பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் நிவாரணமும், குற்றவாளிகளுக்குத் தண்டனையும் கிடைக்கும் வரை SASYயின் செயல்பாடுகள் இருக்கும்.

கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பற்றிய கணக்கெடுப்பில் எனது பணியைப் பார்த்து, SASYயின் இப்போதைய மாநில ஒருங்கிணைப்பாளர் முருகப்பன், SASYயில் பணிபுரிய 2009ஆம் ஆண்டு என்னை அழைத்தார். ஷிகிஷிசீஐ பற்றி விரிவாகச் சொன்னார். எனக்குள் இருந்த நிறைய யோசனைகளுக்குத் தீர்வாக SASYயில் என்னை இணைத்துக்கொண்டேன். விழுப்புரம் மாவட்டத்தில் தலித், பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்களில் 130 வழக்குகளின் கோப்பினை என்னிடம் கொடுத்தனர். அனைத்தையும் படித்தேன். பிறகு, அந்த வழக்குகளின் அனைத்துத் தகவல்களையும் எனக்கு விளக்கினார்கள். SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம், கள ஆய்வு, உண்மை கண்டறியும் அறிக்கை தயார் செய்தல், காவல்துறை, நீதிமன்றங்களின் இயங்குமுறைகள் என்று எல்லாவற்றையும் பற்றி அறிமுகமும் பயிற்சியும் கொடுத்தனர். விழுப்புரம் மாவட்ட தலித் பெண் மனித உரிமைச் செயற்பாட்டாளராகப் பணிபுரிய ஆரம்பித்தேன்.

சாதிய வன்கொடுமைகளில் உங்களின் கள ஆய்வு, உண்மை கண்டறியும் பணியின் படிநிலைகள் எப்படி இருக்கும்?

தலித் மனித உரிமை மீறல்கள் பற்றி SASYக்கு நேரடியாகப் புகார் வருவது ஒருபுறம் இருந்தாலும், நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வரும் வன்கொடுமை செய்திகளைத் தொடர்ந்து கவனிப்போம். நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மூலமும் தகவல்கள் வரும். ஊராட்சி, பேரூர், மாநகர் தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசுவோம். உடைமைகள் பெரிய அளவில் சூறையாடப்பட்டிருந்தால், பெரிய கலவரமாகி பாதிப்பு தீவிரமாகியிருந்தால் சேதங்களின் மதிப்பைக் கணக்கிடவும், மக்களிடம் உரையாடவும் பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கூட்டாகச் செல்வோம். இல்லையென்றால் தனியாகச் செல்வேன். முதலில், பாதிக்கப்பட்டவர்கள் என்னை விசாரிப்பார்கள். நடந்த வன்கொடுமையை அறிந்த விதம், SASY, அதில் எனது வேலைகள் என்ன, எதற்காக வந்துள்ளேன் என்பவற்றை அவர்களிடம் தெளிவாகச் சொல்வேன். சிலர் உடனே பேச முன்வருவார்கள், சிலர் தயங்குவார்கள், சிலர் காத்திருக்க வைப்பார்கள், அடையாள அட்டை கேட்பார்கள். சிலர் அலுவலகத்துக்கு போன் செய்து விசாரித்துவிட்டுப் பேச ஆரம்பிப்பார்கள்.

எடுத்தவுடனேயே என்ன பிரச்சனை என்று கேட்காமல் அவர்களின் மனநிலை, சூழலைப் புரிந்துகொண்டு நலம் விசாரிப்பேன். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே நம்பிக்கையுடன் பேசத் துவங்கி நடந்த வன்கொடுமை பற்றிப் பகிர்ந்துகொள்வார்கள். வன்கொடுமை நடந்த நாள், கிழமை, நேரம், காரணம் எல்லாவற்றையும் தெளிவாகக் கேட்டுப் பதிந்துகொள்வேன். அடிதடி, ஆயுதத் தாக்குதலில் உடம்பில் எந்தப் பகுதியில் காயங்கள் உள்ளன, காயங்களின் தன்மை எப்படி உள்ளன என்பதைக் குறித்துக்கொள்வேன். மருத்துவமனைக்குப் போன நேரம் அதன் ரசீதுகளைப் பரிசோதனை செய்வேன். எத்தனை பேர் தாக்கினார்கள், காயங்கள் பற்றிய தகவல்கள் மருத்துவமனை விபத்துப் பதிவேட்டில் பதியப்பட்டிருக்கும். காவலர்கள் தாக்கினால் கூட அதில் கண்டிப்பாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதையும் ஆராய்வேன். மருத்துவர் கையெழுத்துப் புரியவில்லை என்றால், தெரிந்த மருத்துவரிடம் அனுப்பி சரி பார்த்துக்கொள்வேன். ஏனென்றால் ‘தானாய் கீழே விழுந்துவிட்டார்’ போன்ற முறைகேடுகள் விபத்துப் பதிவேட்டில் செய்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் உடலாலும் மனதாலும் நிலைகுலைந்து இருக்கையில் காவல் நிலையத்தில் முறையாகப் புகார் அளித்திருக்க மாட்டார்கள். உண்மையில் நடந்தது ஒன்றாக இருக்கும் காவல் நிலையத்தில் வேறொன்றாகப் புகார் பதிவாகியிருக்கும். காவல் நிலையம் சென்று அதைச் சரி பார்க்க வேண்டும். உண்மைக்குப் புறம்பான (Mistake of act) எஃப்.ஐ.ஆர் என்று வழக்கை முடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இப்படி ஒவ்வொரு படிநிலையிலும் உண்மை அறியும் அறிக்கையினை வலுவாகத் தயார் செய்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நிவாரணங்களையும் பெற்றுத் தர இயலும். SASYயின் போன் நம்பரையும், எனது நம்பரையும் பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு வருவேன். புகார் நகல், எஃப்.ஐ.ஆர் நகல் வாங்கிய பிறகு SASYயில் இருந்து மாநில, தேசிய மனித உரிமை ஆணையம், மாநில, தேசிய SC/ST ஆணையம், வன்கொடுமையில் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மாநில, தேசியக் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில, தேசிய மகளிர் ஆணையம், முதலமைச்சர், காவல்துறை துணைத் தலைவர், உள்துறைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார்களை அனுப்புவோம்.

பாதிக்கப்பட்டோரிடம் உரையாடி பதிவு செய்வது போல சாதியவாதிகளிடம் உரையாடுகையில் அவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது. குறிப்பாய் பெண்கள், சிறுவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது?

அச்சமாக இருந்ததால் என்னுடைய முதல் களப்பணியில் காவல் நிலையத்திற்கும் போகவில்லை, சாதியவாதிகளையும் பார்க்கவில்லை. போனில்தான் பேசினேன். அடுத்தடுத்த களப்பணிகளில் சாதியவாதிகளையும் காவலர்களையும் நேரில் சந்தித்துப் பேசினேன். நாங்கள் உரையாடலுக்கு எவ்வளவு முயன்றாலும் சாதியவாதிகள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள். ‘அந்த ஆளுங்களுக்குத்தான் இவுங்க சப்போர்ட்டு’ என்று சொல்லிவிடுவார்கள். சிலரோ எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்று முடித்துவிடுவார்கள். இருந்தாலும் காவல்துறையில் அவர்கள் அளித்த எதிர் புகாரை ஆவணத்தில் எடுத்துக்கொள்வோம். ஆண்கள்தான் சாதியக் கலவரங்களை உருவாக்குவார்கள் என்ற பார்வை இருக்கிறது. அப்படியில்லை. ஊர்ப் பொதுப் பாதையில் தலித் சவத்துக்கு வழிவிடாமல் முள்ளு வெட்டிப் போட்டுப் பாதையை மறித்த பெண்களைப் பார்த்திருக்கிறேன். கிராமங்களில் பெண்கள் மீது வழக்குப் போட யோசிக்கும் தன்மை இயல்பாய் இருக்கும். அதைச் சாதிய மனநிலை கொண்ட பெண்கள் நுட்பமாய்ப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. இதில் சில சிறுவர்களையும் பார்த்திருக்கிறேன். சங்கராபுரம் அருகே மூங்கில்துறைபட்டில் கல்லூரி நண்பனைத் திருவிழாவுக்கு அழைத்திருக்கிறார் ஓர் இளைஞர். ‘அவன் பறப்பையன். அவன ஏன்டா நீ கூப்பிடுற’ என அவரைப் பார்த்து ஊரார் கேட்டுள்ளனர். அது சாதியக் கலவரத்தில் போய் முடிந்தது. இருவருக்குள் இருக்கும் சாதியம் கடந்த மனிதத்தை சாதிய மனநிலைகளால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. SC/ST வன்கொடுமை வழக்குகளில் உள்ளூர்க் கட்டப்பஞ்சாயத்துகள் காவல்துறை, மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, மருத்துவத்துறை எவ்வாறு செயல்படுகின்றன.

சாதியமும் கட்டப்பஞ்சாயத்துகளும் பின்னிப் பிணைந்தவை. SC/ST வன்கொடுமை வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய உள்ளூர் கட்டப்பஞ்சாயத்துகள் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் செயல்படுகின்றன. தலித் மக்களிடம் அடிமை மனநிலையைத் தக்க வைப்பதிலும், அவற்றைப் பயன்படுத்துவதிலும் உள்ளூர்ப் பஞ்சாயத்துகள் கவனமாக இருக்கும். பாதிக்கப்பட்டோர் SC/ST வன்கொடுமை வழக்கு பதியாமல் இருக்க உள்ளூர்ப் பஞ்சாயத்துகளிலிருந்து நிலம், பணம் தருவதாகச் சொல்வார்கள். அவர்களின் எதிர்காலம் குறித்து ஒருவிதமான அச்சுறுத்தல்களை மறைமுகமாகத் தருவார்கள். அல்லது வீட்டார்களை நேரடியாகப் பயமுறுத்துவது. வீட்டைக் கொளுத்துவோம், கொலை செய்வோம் எனப் பகிரங்க மிரட்டல் விடுப்பார்கள். எதுவும் பலனளிக்கவில்லை என்றால் சாதியவாதிகளுக்கு ஆதரவாக வழக்கு நடத்த ஆதிக்கச் சாதியினர் ஊரில் வரிவசூல் செய்வார்கள். தங்களின் அப்பா, தாத்தா காலம் போல நாங்கள் இப்போது இருக்க முடியாது என்று எதிர்ப்புணர்வோடு இருக்கக்கூடிய இளைஞர்களை ஊர்க் கட்டுப்பாடுகளுக்கு அடிபணியுமாறு பெற்றோர்களே அடக்கி வைக்கின்றனர்.

கண்டமங்களம் அருகே கொத்தாம்பாக்கம் கிராமத்தில் தலித் பெண் ஒருவர் தனியார் வங்கியொன்றில் இருபத்து ஐந்தாயிரம் முன்பணம் கட்டி வேலைக்குச் சேர்கிறார். நூறுநாள் வேலை சம்பளம், ஆதரவற்றோர் உதவித் தொகைக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்து ஊரில் விநியோகிப்பார். ஒருவேளை பணம் தொலைந்தால் அந்தப் பெண் கட்டிய முன்பணத்திலிருந்து வங்கி நிர்வாகம் பணத்தை எடுத்துக்கொள்ளும். அப்படியொருநாள் அவர் பணம் விநியோகித்துள்ளார். பணம் தீர்ந்துவிட்டதால் ‘நாளை எடுத்துவந்து தருகிறேன்’ என்று மக்களிடம் சொல்லியுள்ளார். ‘அவுங்களுக்கு மட்டும் காசு கொடுத்துருக்க. ஏன் எங்களுக்குத் தரல. காலனிக்கு வந்து உன் வீட்டு வாசல்ல வந்து காத்துக்கிட்டிருக்க முடியாது’ என்று ஆதிக்கச் சாதியினர் சிலர் அந்தப் பெண்ணை சாதிய ரீதியாகத் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். அந்தப் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், ‘ஊராட்சி மன்றத் தலைவர், ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து எனக்குச் சாதிய ரீதியாக மனவலியக் கொடுத்துட்டே இருந்தாங்க’ என்று மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்துவிட்டார். அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

நூறுநாள் வேலையில் பிரச்சினை, அதனால்தான் அந்தப் பெண் இறந்தார் என்று செய்திகள் கிடைத்தன. வழக்கறிஞர் மூலமாக இந்த வழக்கின் வெளிவராத தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. அதன்படி அவரது மரண வாக்குமூலத்தை வைத்து, இந்த வழக்கு சார்ந்து அனைத்து அறிக்கைகளையும் தயார் செய்தோம். சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்துதான் அந்தப் பெண்ணின் தற்கொலை வழக்கு SC/ST வழக்காக மாறுகிறது.

காவல்துறையில் ஏதேதோ சொல்லி சரியான பதில்கள் தரவில்லை. SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் பதிவானவுடன் குற்றவாளிகள் தலைமறைவாகிவிட்டனர். பிறகு, குற்றவாளிகள் சிறை சென்று முன்ஜாமீனில் வெளியே வந்தனர். திமுக மேலிடத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரின் அக்கா மகன்தான் ஊராட்சி மன்றத் தலைவர். அந்த முக்கியப் புள்ளி அந்தப் பெண்ணின் கணவரையும், அவரது உறவினர்களையும் அழைத்துப் பிள்ளைகளின் பேரில் பேங்கில் பணம் போடுவதாகப் பஞ்சாயத்துப் பேசி வழக்கை வாபஸ் வாங்கச் சொன்னார். கணவர் அவர்களுடன் உடன்பட போனார். ‘நீங்கள் எங்களோடு இருந்தால் அதே பணத்தை இழப்பீடாக நாங்கள் வாங்கித் தருகிறோம்’ என்று அவருக்கு எடுத்துச் சொன்னோம். பிறகு, அவர் வழக்கை வாபஸ் வாங்கவில்லை. எனக்கும் அவர்கள் இலட்சங்களில் பணம், நகைகள் தருவதாகச் சொன்னார்கள். வறுமையான குடும்பச் சூழலிலும் அவர்களின் பணத்தையும் நகையையும் நான் பொருட்டாகவே மதிக்கவில்லை. அரசிடமிருந்து எட்டு இலட்சத்து இருபத்து ஐந்தாயிரம் ரூபாயை நிவாரணமாகப் பெற்று அந்தப் பெண்ணின் கணவர், பிள்ளைகளுக்குக் கொடுத்தோம். வழக்கு நடந்துகொண்டிருக்கிறது.

கொரோனா காலத்தில் நடந்த சம்பவம் இது. திருநாவலூர் அருகே தேவியானந்தல் கிராமத்தில் தலித் இளைஞரும் வன்னியர் பெண்ணும் காதலித்துள்ளனர். ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துவந்துள்ளனர். உள்ளூர்க் கட்டப்பஞ்சாயத்து இருவரையும் கண்டுபிடித்து ஊருக்குக் கூட்டிவந்து பிரித்து வைக்கின்றனர். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட பெண்ணின் அப்பா பெற்ற மகளையே ஆணவக்கொலை செய்தார். பழியை அந்தப் பையன் மீது போட்டார்கள். திருநாவலூர் சரக காவல்நிலையத்திற்கு அந்தப் பையனை அழைத்துச் செல்லாமல் எலவானாத்தூர் கோட்டையில் உள்ள காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லிக் காவல்நிலைய சித்ரவதை செய்தனர். நடந்த அனைத்திற்கும் பின்னால் வடமாவட்ட அரசியலின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர் இருந்தார். பெண்ணின் அப்பாவிடம் பேசுகையில், ‘அதெப்படி அந்தச் சாதிப் பையனுக்குப் பொண்ணக் கட்டிக் கொடுக்க முடியும்’ என்று எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் பேசினார்.

எங்களது அடையாள அட்டையில் ‘மனித உரிமை காப்பாளர்’ என்று இருந்தால் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்குப் பிரச்சினை இல்லை. ‘தலித் மனித உரிமை காப்பாளர்’ என்றிருக்கையில் அலுவலகங்களுக்கு உள்ளே கூட அரசு அதிகாரிகள் விடமாட்டார்கள். தலித் அல்லாதவர்களிடமும் கேள்விகள் கேட்க வேண்டி இருப்பதால் தலித் என்ற அடையாள அட்டையைப் பார்த்தவுடன், ‘அவர்களுக்குத்தான் சாதகமாக இருப்பார்கள்’ என்று பேச மறுப்பார்கள்.

பொதுச் சமூகத்தின் ஓர் அங்கமான காவல்துறையின் பார்வையில் கறுப்பாக இருந்தால், மாட்டுக்கறி உண்டால், அழுக்காக இருந்தால், அழுக்காக உடை அணிந்தால் அவர்களெல்லாம் பள்ளன், பறையன். ‘காலனிகாரன் கூட உனக்கு என்ன வேலை’, ‘கோர்ட் கேசுன்னு அலையாத. அவன் கூட சமாதானமா போ. உன்கூட லலிதா மாதிரியான ஆளுங்க எவ்வளவு நாளு வருவாங்க, அவுங்க அடுத்தடுத்து வேற கேசுக்குப் போயிடுவாங்க. ஊர் ஆட்களும் நாங்களும்தான் இங்க இருப்போம்’ என்று மிரட்டும் தொனியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் காவலர்கள் பேசுவார்கள். வழக்கை வாபஸ் வாங்க பாதிக்கப்பட்ட மக்களை ஸ்டேசனுக்குத் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசுவார்கள்; கிராமத்தில் ஆள் வைத்துப் பேசுவார்கள்; வெளியில் கூட்டிப்போய்ப் பேசுவார்கள்.

சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒருவர் காவல்துறையில் புகார் கொடுத்தவுடன் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் எஃப்.ஐ.ஆர் போட வேண்டும், சாதிய வன்கொடுமை வழக்கில் 24 மணிநேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சையும், உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துதலும் கொடுக்கக் காவல்துறை வழிகாட்ட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், காவல் நிலையத்தில் அப்படி எதுவும் நடப்பதில்லை. சாதிய ரீதியாக ஒரு தலித் தாக்கப்படுகையில் அதை அடிதடி வழக்காக மட்டும் பதிந்து சார்ஜ் சீட் போடுவார்கள். அரசு சிறப்பு வழக்கறிஞரிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. SC/ST வன்கொடுமை வழக்கில் பதிய வேண்டும் என்று வழக்கறிஞர் சொல்வதைக் காவல்துறை கவனத்தில் எடுக்காது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து உடனே எஸ்.பிக்குத் தகவல் சொல்ல வேண்டும்; வழக்கின் விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பியை, எஸ்.பி நியமிக்க வேண்டும்; அந்த விசாரணை அதிகாரி வழக்கை விசாரிக்க வேண்டும். எதுவுமே சட்டப்படி நடப்பதில்லை. காவல்துறையினர் பாதிக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களுக்குள் பிரச்சினையை உண்டாக்குவார்கள். பாதிக்கப்பட்ட மக்களை இரண்டு பிரிவாகப் பிரிப்பார்கள்.

கடந்த வருடம் ஆறு தலித் பெண் பிள்ளைகள், இருவர் மூன்றாம் வகுப்பு; இருவர் நான்காம் வகுப்பு; இருவர் ஐந்தாம் வகுப்பு, என ஆறு பிள்ளைகளும் ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். தவறான முறையில் தொட்டு, பிறப்புறுப்பில் பென்சிலால் குத்தி அதில் காயமானது வரை பிள்ளைகள் தெளிவாகத் தங்கள் ட்யூஷன் டீச்சரிடம் சொல்லியிருக்கின்றனர். வீட்டில் சொன்னபோது, ‘ஸ்கூல் லீவு போட இப்படிச் சொல்றீங்களா’ எனக் கண்டித்திருக்கிறார்கள்.

ஆனால், காவல்துறை ஆய்வாளர் அந்த ஆசிரியர் மீது போக்சோ வழக்கு மட்டுமே பதிந்தார். தலித் பெண் இன்ஸ்பெக்டர், குழந்தைகள் மாற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்கிறார். ஆசிரியர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குப் பதியவில்லை. திமுக மேலிடத்தின் முக்கியப் புள்ளிகளில் ஒருவரின் சாதிக்காரர்தான் அந்த ஆசிரியர். அவர்கள் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் உறவினர்களையும் குடும்பத்தையும் மிரட்டி அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று கோர்ட்டில் சொல்ல வைத்தனர்.

கொத்தம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது காதலனோடு வருகையில், நான்கு பேர் கொண்ட கும்பல் அவரைப் பாலியல் வல்லுறவு செய்தனர். தண்டவாளத்தில் சரசரவென இழுத்ததில் அந்தப் பெண்ணின் பின்புறத்திலும், மாரிலும் காயங்கள் இருந்தன. மணக்குள விநாயகர் மருத்துவமனையில் கொடுத்த அறிக்கையிலும் காயத்தின் தன்மைகள் பற்றித் தெளிவாக எழுதப்பட்டிருந்தன. ஆனால், காவல் நிலையத்தில் குற்றவாளிகள் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கும் பதியவில்லை, பாலியல் வல்லுறவு வழக்கும் பதியவில்லை. பல போராட்டங்களுக்கும் வாக்குவாதங்களுக்கும் பிறகுதான் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பாலியல் வல்லுறவு வழக்கு பதியப்பட்டது.

வந்தவாசி பக்கத்தில் உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பேர் பக்கத்து ஊர் திருவிழாவுக்குப் போனார்கள். இரண்டு பேருமே பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்கள். வழியில் காவலர்கள் விசாரிக்கின்றனர். காலனி என்று சொன்னவுடன் அவர்களை அடித்து வண்டியில் ஏற்றியுள்ளனர். வீட்டுக்குத் தகவல் சொல்லாமல் காவல் நிலையத்தில் வைத்து அடித்திருக்கின்றனர். ஒரு பையனின் வீட்டுக்குப் போய் பீரோவை உடைத்து ரசீதுகளை எடுத்துத் திருட்டு நகை என்று ஒப்புக்கொள்ளச் சொல்லி அடித்துள்ளனர். வந்தவாசி ஜே.எம் கோர்ட்டில் பெற்றோர் பிராது விண்ணப்பம் தந்தனர். உடனே டி.எஸ்.பி, தாசில்தார் போய் விசாரித்ததில் இருவர் மீது எந்தத் தப்பும் இல்லை என்று நிரூபணம் ஆனது. மாநில SC/ST ஆணையத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளித்ததின் அடிப்படையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கீழ்கொடுங்காளூர் காவலர்கள் மீது குற்றவழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றும், உளுந்தை கிராமத்தைச் சேர்ந்த இருவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை மீண்டும் புலன் விசாரணை செய்ய வேண்டுமென்றும் மாநில SC/ST ஆணையம் அரசுக்குப் பரிந்துரைத்தது. ஆனால், அந்தக் காவலர்கள் மீது இப்போதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2012ஆம் ஆண்டு, திருக்கோவிலூர் அருகேயுள்ள தீமண்டபத்தில் பொய் வழக்கில் பழங்குடியின இளைஞர்களைக் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்துக்கு நீதி கேட்டுச் சென்ற பழங்குடியின பெண்களைப் போலீஸார் பாலியல் வல்லுறவு செய்தனர். செமன் டெஸ்ட் குறிப்பிட்ட நாட்கள்தான் இருக்கும். அதற்குப் பிறகு பலன் இல்லை. அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்காது. எஸ்.பியும் அவரது கூட்டாளிகளும் அந்தப் பெண்களை ஐந்து நாட்கள் மறைத்து வைத்திருந்தனர். இப்படிக் காவல்துறை முக்கிய சாட்சியங்களை அழிப்பார்கள்.

பல போராட்டங்களைக் கடந்து 2015இல்தான் விழுப்புரத்தில் SC/ST சிறப்பு நீதிமன்றம் வருகிறது. 2008இல் திருக்கோவிலூர் பக்கத்தில் குலதீபமங்கலம் என்னும் ஊரில் தலித் மக்களைக் கோயிலுக்குள் நுழையவிடாததால் மிகப்பெரிய கலவரம் நடந்தது. 2016இல் நீதிமன்றத்துக்கு வழக்கு வருகிறது. ‘யோவ்… அவுங்க ரெண்டு பேரையும் மொத பேச விடு. நீ எதுக்கு நடுவுல வாற. அவுங்க பஞ்சாயத்துப் பேசி முடுச்சுக்கட்டும்’ என்று முதல் ட்ரயலில் அரசு சிறப்பு வழக்கறிஞரைப் பார்த்துப் பிராமண பெண் நீதிபதி சொல்கிறார். நீதிபதியே இப்படிச் சொன்னால் எப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். அந்த வழக்கறிஞரின் முகமே ஒருமாதிரி ஆகிவிட்டது. நீதிமன்றத்துக்கு உள்ளேயே பஞ்சாயத்து நடக்கிறது. குற்றவாளிகளின் வழக்கறிஞர் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவார். சக வழக்கறிஞர்கள் எதுவும் தெரியாதது மாதிரி உட்கார்ந்திருப்பார்கள். நீதிமன்றத்துக்குள் பாதிக்கப்பட்டவர்கள் முன்பு காவல்துறை எங்களை மிரட்டும் தொனியில் பேசுவார்கள். சாட்சி சொல்ல வருபவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கை கொள்கின்றனர். சில நேரங்களில் நீதிபதியும் மிறிசியில் மட்டும் தண்டனை கொடுத்துவிட்டு SC/ST சட்டப்பிரிவில் தண்டனைக் கொடுக்க மாட்டார்.

வெகு சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூரின் மேல்பாதி கிராமத்தில் தலித் இளைஞரொருவர் திரவுபதி கோயிலுக்குள் நுழைந்து வழிபட்டார். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வன்னியர் சமூகத்தினர் அந்த இளைஞரை அவரது வீடு வரை அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் கோயிலுக்குள் எப்படித் தலித் மக்களை அனுமதிக்காமல் போகலாம் என்று கேட்டால் ஆதிக்கச் சாதியினரிடம் பதில் இல்லை. துணை மாவட்ட ஆட்சியர் நினைத்திருந்தால் அவர்களை ரிமான்ட் செய்திருக்கலாம் ஆனால், செய்யவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வாய்மொழியாகவோ எழுத்துப்பூர்வமாகவோ புகார் கொடுத்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டுமென்று சட்டத்தில் இருக்கிறது. அதை மீறும் பட்சத்தில் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4இன்படி வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால், டி.எஸ்.பி எஃப்.ஐ.ஆர் போடவில்லை. இதற்கு டி.எஸ்.பி மீதே வழக்கு பதிவு செய்யலாம். கோட்டாட்சியரின் முன்னெடுப்பில் இருதரப்பிலும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அந்த இளைஞரின் தரப்பிலிருந்து கையொப்பமிட்டுள்ளனர், ஆதிக்கச் சாதியினர் கையொப்பமிடவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் ஒத்துவரவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகு, செய்திகள் மாநிலம் எங்கும் பரவிய பிறகுதான் ஆதிக்கச் சாதியினர் மீது SC/ST வன்கொடுமை வழக்கு பதியப்பட்டது. இப்போது வரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

2021இல் பொங்கல் சமயத்தில் வீரளூர் கிராமத்தில், ஞாயிறு பொதுமுடக்கம் நாளன்று அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அம்மா ஒருவர் இறந்துவிடுகிறார். தனிச் சுடுகாட்டுப் பாதை இருக்கிறது. இருந்தாலும் அது மக்கள் நடக்க ஏதுவாக இல்லை. குறைந்தது பதினைந்தாயிரம் செலவு செய்து அதைச் செப்பன்னிட்டுதான் ஊர்வலம் போகக் கூடிய நிலை. எனவே, அந்த மக்கள் மாநில நெடுஞ்சாலை வழியாகப் பிணத்தைக் கொண்டு செல்கிறார்கள். ஆதிக்கச் சாதியினரின் தடையை மீறி பிணத்தைக் கொண்டு செல்கின்றனர். கலவரம் நடக்கிறது. அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை வெட்டிக் கொலை செய்ய போலீஸ் பாதுகாப்போடு கலவரம் நடக்கிறது. ஆதிக்கச் சாதியினர் அனைவரும் சாதி டீசர்ட்டுகளுடன் கலவரத்தில் ஈடுபட்டார்கள். அனைத்து அருந்ததியர் மக்களும் பெங்களூர், கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை போன்ற நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து பிழைப்பு நடத்தி வீடு வாசலைக் கட்டியுள்ளனர். சுமார் 250 வீடுகள், அவர்கள் சம்பாதித்து சேர்த்த உடைமைகள் அனைத்தையும் சூறையாடினர். அருந்ததிய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் விருப்பப்படி அரசு சிறப்பு வழக்கறிஞரைத் தாங்களே நியமித்துக்கொள்ள SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் விதி 4(5) சொல்கிறது. அதன்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். மேற்கு வங்கத்தில் சாதாரண வழக்கு ஒன்றை மேற்கோள் காட்டி அதை மறுத்துவிட்டார். ஆட்சி மாறுகையில் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் மாற்றி நியமனம் செயப்படுகின்றனர். அவர்களில் சிலர் போதாமையுடன்தான் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டோர் தங்களின் விருப்பத்துக்கேற்ற அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதில் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை சேர்ந்து நிறையக் குளறுபடிகளை உண்டாக்குவார்கள்.

சாதிய வன்கொடுமை வழக்குகளில் காயத்தின் தன்மைகளைப் பொறுத்து வழக்கின் பிரிவுகள் உறுதியாக மாறும். ஓரத்தூரில் சாவு வீட்டில் சடங்குகள் செய்யும்போது புதிரை வண்ணார் சமூகத்து முதியவரை, வன்னியர் சமூகத்தைச் சார்ந்த நபர் திட்டி அடித்துவிடுகிறார். முதியவர் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார். எஃப்.ஐ.ஆர் போடும் நிலை. அரசு மருத்துவமனைக்குப் போகிறார். அவரது பெயர், வயது, ஊர் பற்றிய தகவல்களை மருத்துவர் கேட்கிறார். ஊரில் சண்டை என்று சொன்னவுடன் நீங்கள் யாரென்று கேட்டுள்ளனர். காலனி என்றவுடன் இளக்காரமாய், ‘போய் உட்காரு போ, உயிர எடுக்க வந்துருவீங்களே’ என்று சொல்லியுள்ளனர். சில மருத்துவர்கள் ரிபோர்ட்டை ஒழுங்காகத் தர மாட்டார்கள். விபத்துப் பதிவேட்டில் கவனமாக இருப்போம்.

பாதிக்கப்பட்டவர்கள் உங்களின் செயல்பாடுகளுக்குப் போதுமான ஒத்துழைப்புத் தருகிறார்களா?

சில இடங்களில் ஒத்துழைப்புத் தருவார்கள், சில இடங்களில் தர மாட்டார்கள். 2010ஆம் ஆண்டு தீபாவளி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஐந்து கொலைகள் நடந்தன. அதில் இரண்டு சாதியக் கொலைகள். முதல் கொலை பதினொரு வயது தலித் சிறுவன். விழுப்புரம் அருகில் ஆனாங்கூர். காலனி ஆட்கள் ஊர்த் தெருவில் பொருட்கள் மட்டும் வாங்க வேண்டும், நின்று பேசக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, கூட்டமாய்ப் போகக் கூடாது என்ற கட்டுப்பாடு வகுத்துள்ளனர். தீபாவளி அன்று வீட்டிற்கு மளிகைச் சாமான்கள் வாங்க அந்தச் சிறுவன் ஊர்த் தெருவிற்குள் போகிறான். அங்கு வேறொரு பையன் சிகரெட் பிடிக்க, இச்சிறுவன்தான் சிகரெட் பிடிக்கிறான் என்று சொல்லி அவனை வெட்டிவிடுகின்றனர். நான் சம்பவ இடத்திற்குப் போய் பணிகளைத் தொடங்கிவிட்டேன். சொர்ணாவூர் கீழ்பாதியில் இரண்டாவது சாதியக் கொலை. மேல்பாதி, கீழ்பாதி என்று சொல்வார்கள். மேல்பாதியில் வன்னியர்களும், கீழ்பாதியில் தலித்துகளும் வசிக்கின்றனர். ஊராட்சி மன்றத் தலைவர் தலித். அவரைச் சுற்றி இருநூறு பேர் இருந்தனர். என்னிடம் அடையாள அட்டைக் கேட்டார்கள். மக்கள் சிவில் கழகத்தைச் சேர்ந்த நபரைக் கண்டிப்புடன் நடத்தி தரையில் உட்கார வைத்திருந்தனர். எதிர் தரப்பிலிருந்து அவரை அனுப்பியிருப்பதாகத் தவறாக நினைத்துக்கொண்டனர். என்னையும் அப்படியே நினைத்தனர். கொஞ்சம் விட்டிருந்தால் என்னையும் தாக்கியிருப்பார்கள். ‘உங்களுக்குப் பேச விருப்பம் இருந்தால் பேசுங்கள். உதவி செய்யத்தான் வந்தோம். நாங்கள் களத்துக்கு வராமல் கூட அலுவலகம் போய் தகவல் சொல்லிவிடுவோம்’ என்று எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர்கள் ஒத்துழைப்புத் தரவில்லை. நான் அவரை மீட்டுக்கொண்டு நான்கு கிலோமீட்டர் நடந்து வந்து இரவுப் பேருந்து ஏறினோம். மக்கள் ஒத்துழைக்காததால் சொர்ணாவூர் கீழ்பாதி வழக்கு வீணாகிவிட்டது. சிறுவனின் கொலை வழக்கில் அந்த மக்கள் முழு ஒத்துழைப்பு தந்தார்கள். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் எந்த எல்லை வரை நிற்பீர்கள்?

கள ஆய்வு, உண்மை கண்டறியும் அறிக்கை தயார் செய்வது, மருத்துவ, சட்ட ஆலோசனைகள் சொல்வது, வழக்கறிஞர்களை நியமிப்பது, வழக்கறிஞர்கள் எப்படிக் குறுக்கு விசாரணை செய்வார்கள், நீதிமன்றம் எப்படிச் செயல்படும், கூண்டில் ஏறி எப்படிச் சாட்சி சொல்ல வேண்டும் என்பதிலிருந்து அவர்களுக்கு நீதி கிடைக்கும் எல்லை வரை நிற்பேன். நாங்கள் சாராத சில வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் எங்களை வந்து பார்ப்பார்கள். பழங்குடியினப் பெண்கள் அதிகமாக வருவார்கள். அவர்களுக்கும் உதவுவோம்.

SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் போதுமானதாக இருக்கிறதா?

நம்மை சாதி சொல்லி யாராவது திட்டினாலோ, தாக்கினாலோ அல்லது எதாவதொரு வடிவில் ஒடுக்கினாலோ ஜாதி கேசு போடலாம் என்று மக்களுக்குத் தெரிகிறது. ஆனால், அவை எப்படிச் செயல்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம், அதன் பிரிவுகள், சட்ட ஆலோசனைகள் பற்றிய விழிப்புணர்வைக் கிராமங்களில் இளைஞர்களைத் திரட்டி நடத்திவருகிறோம். புகார் எழுத கற்றுக்கொடுக்கிறோம். சட்டம் பற்றிக் காவலர்களிடம் எப்படிப் பேசுவது போன்ற பயற்சிகளைத் தருகிறோம்.

SC/ST வன்கொடுமை வழக்கில் இழப்பீடுகள், நிவாரணங்கள் முறையாகக் கிடைக்கின்றனவா? தீர்ப்புக்குப் பிறகான சூழலில் பாதிக்கப்பட்டோரின் இருப்பிடங்களும் உளவியலும் வாழ்வாதாரமும் எப்படியாக உள்ளன?

இழப்பீடுகள், நிவாரணங்கள் முறையாகக் கிடைப்பதில்லை. பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகள் நீதிமன்றத்திற்குப் போய் வரப் பயணப்படி, உணவுப்படி தர வேண்டும் என்று சட்டத்தில் உள்ளது. இப்போதுவரை கொடுத்தது கிடையாது. எஃப்.ஐ.ஆர் போட்டு ஏழு நாட்களுக்குள் மூன்று தவணைகளில் முறையான இழப்பீடுகள், நிவாரணங்களைத் தர வேண்டும். எஃப்.ஐ.ஆர் போட்டவுடன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன், தீர்ப்பு வந்தவுடன் என மூன்றுமுறை கொடுக்க வேண்டும். சாதிக் கலவரத்தில் இறப்பு, பாலியல் வல்லுறவு அதனைத் தொடர்ந்து சாலை மறியல்கள், போராட்டங்கள் எனப் பெரிய அளவில் நடந்தால் மட்டுமே உடனடியாக நிவாரணங்களைக் கொடுக்கிறார்கள். சாதி சொல்லி திட்டுதல், அடிதடி, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் ரீதியான துன்புறுத்தல் போன்ற சாதிய வன்கொடுமைகளில் உடனடியாக இழப்பீடு கொடுத்ததே கிடையாது. மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி என்ற தனியான பிரிவு, எஃப்.ஐ.ஆர் போட்டதிலிருந்து தீர்ப்பு வரும்வரை வன்கொடுமை வழக்கைக் கண்காணிக்கும். சாதியைச் சொல்லித் திட்டிய வன்கொடுமை வழக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் இழப்பீட்டோடு அரசு புதிதாக அறிவித்திருக்கும் பனிரெண்டாயிரத்து ஐநூறு சேர்த்து மொத்தம் அறுபத்து ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாயைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டுமென அந்தப் பிரிவு மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைக்கும். ஆட்சியர் ஆதிதிராவிட நல வாரியத்துக்கு அனுப்புவார். அவர்கள் அனைத்துத் தகவல்களையும் பரிசோதனை செய்வார்கள். பிறகுதான் இழப்பீடு தருவார்கள். உதாரணமாக, சாதிய வன்கொடுமையில் சாதாரண சட்டை கிழிந்துவிட்டதென்றால் பாதிக்கப்பட்டோர் விலை உயர்ந்த சட்டை கேட்டாலும் வாங்கித் தர வேண்டும். வீரளூர் சாதிய வன்கொடுமை கலவரத்தில் வீடுகள் உள்ளிட்ட உடைமைகளைச் சேதப்படுத்தியதற்கு வழங்கிய இழப்பீட்டைச் சொன்னால் நம்பமாட்டீர்கள். ஒருவருக்கு எழுபது ரூபாய் மட்டும் வங்கிக்கணக்கில் போட்டுள்ளனர். அதே வீரளூரில் மூன்றுமாடி வீட்டைச் சூறையாடியதில் அதன் இழப்பீட்டு மதிப்பு மூன்று இலட்சம். ஆனால், அரசு ஒரு இலட்சத்து இருபத்து நாலாயிரம் கொடுத்தது, அதுவும் இரண்டு பேருக்குச் சேர்த்து. ஆதிதிராவிட நல வாரியத்தில் போதுமான நிதி இல்லை என்று சொல்வது தனியொரு வாதம்.

சாதிய வன்கொடுமை நடந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பார்வையிட வேண்டும். அல்லது மாவட்டத் துணை ஆட்சியர் பார்வையிட வேண்டும். பெரிய கலவரம் நடந்துவிட்டால் தாசில்தார் நேரடியாகச் சம்பவ இடத்திற்குப் போய் பாதிப்பு விவரங்களை ஆராய்ந்து பட்டியலிட வேண்டும். நிலைமை சீரடையும் வரை, அது எத்தனை மாதமானாலும் சரி, ரேஷன் பொருட்கள் இலவசமாகத் தர வேண்டும் என்பது சட்டம்.

சாதிய வன்கொடுமை நடந்து, வழக்கும் போட்டு, தீர்ப்பு வந்த பிறகும் பாதிக்கப்பட்டோர் முற்றிலும் இருபத்தைந்து ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படுகின்றனர். மோசமான மனநிலைக்குப் போய்விடுவார்கள். அவர்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவது மிகவும் சவாலான காரியம். உளவியல் ரீதியான காயங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்களை முதலில் தேற்றுவோம். அடுத்து மருத்துவ உதவி செய்வோம். பெரிய கலவரம் என்றால் மருத்துவ முகாம் நடத்துவோம். கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல்கள், ‘காசு தரேன் கேசை வாபஸ் வாங்கு’ என்று ஆதிக்கச் சாதியினர் சொல்வார்கள். பின்வாங்குபவர்களை, உள்ளூரிலிருந்து வெளியேறுபவர்களை அழைத்துப் பேசுவோம். எங்கு போனாலும் சாதிய வன்கொடுமை தொடரத்தான் செய்யும். இங்கிருந்தே நாம் போராட வேண்டும். அதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று நம்பிக்கை அளிப்போம். அரசின் இழப்பீடுகளைப் பற்றி எடுத்துச் சொல்வோம். இருந்தும் அதையும் போராடித்தான் வாங்க வேண்டும். இழப்பீடு வாங்கவில்லை என்றாலும், வாங்கியதாகச் சொல்வார்கள். காசுக்காகத்தான் ஜாதி கேசு போடுவதாகவும் சொல்வார்கள். இதைப் பற்றிப் பாதிக்கப்பட்டோருக்கு எடுத்துச் சொல்வோம்.

நீங்கள் களப்பணியாற்றிய வழக்குகளில் கிடைத்த இழப்பீடுகள், நிவாரணங்கள், குற்றவாளிகளுக்குக் கிடைத்த தண்டனைகளில் சிலவற்றைச் சொல்லுங்கள்.

நான் களப்பணியாற்றிய வழக்குகளில் அறுபது சதவீதம் இழப்பீடு வாங்கிக் கொடுத்துள்ளேன். வழக்கு சமாதானம், வழக்கு நிலுவை, இழப்பீடு நிலுவை என மீதி நாற்பது சதவீதம். பாதிக்கப்பட்டவர்களின் விருப்பப்படி வழக்கறிஞர்களை நியமித்து நீதி பெற்றுள்ளோம். ஒரு கொலை வழக்கில் எட்டுப் பேருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இரண்டு இலட்சம் நிவாரணத் தொகை தந்தனர். இன்னொரு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இரண்டு தவணைகளில் ஐந்து இலட்சமும் பசுமை வீடும் இழப்பீடாகக் கொடுத்தனர். ஒருவரின் உடைமைகளைச் சேதப்படுத்தி வைக்கோல்போரைக் கொளுத்திய வழக்கில் குற்றவாளிக்கு மூன்று வருடச் சிறை தண்டனை கிடைத்தது. இழப்பீடாகக் கறவை மாட்டையும், பத்தாயிரத்தையும் இரண்டு வருடங்கள் கழித்தே கொடுத்தனர். மற்றுமொரு கொலை வழக்கில் இரண்டு தவணைகளில் ஒன்றரை இலட்சம் கொடுத்தனர். தீர்ப்புக்குப் பிறகு இப்போது வரை நிவாரணம் வரவில்லை. தமிழ்நாட்டில் ஒரு SC/ST வழக்கில் கூட இழப்பீடாக நிலம் தரவில்லை. நிவாரணம் தருவதிலும் ஆட்களைக் குறைப்பார்கள்.

பழங்குடியின இருளர், குறவர் சமூக மக்கள் மீது தொடுக்கப்படும் சாதிய வன்கொடுமைகளுக்கு நடுவில் அவர்களின் அன்றாடம் எப்படியாக உள்ளது.

ஊரின் ஆதிக்கச் சாதியினர் பழங்குடியின இருளர், குறவர் சமூக மக்கள் மீது நடத்தும் சாதிய வன்கொடுமைகள் ஒருபுறமிருக்க, காவல்துறை அவர்களைத் திருடர்களாகத்தான் பார்க்கிறது. கூடை பின்னுதல், பண்டிகை காலங்களில் பொம்மைகள் விற்பது, பன்னி மேய்த்தல், செங்கல் சூளைகளில் அடிமையாக வாழ்க்கையைக் கழித்தல், உள்ளூர்க் கழனிகளில் கூலியாக இருத்தல் என இந்த மக்களின் அன்றாடம் கழிகிறது. வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இருளர், குறவர் மக்கள் மீது பொய் வழக்குகள் உள்ளன. காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத வழக்குகளை இவர்கள் மீது போடுவார்கள். மயிலம், செஞ்சி என்று காவல் நிலையங்களில் பொய் வழக்குகளைப் பிரித்துக்கொள்வார்கள். காவல்நிலைய சித்ரவதைச் செய்வார்கள். நீதிமன்றம் போய் பெயில் கிடைத்து வருகையில் மற்றுமொரு பொய் வழக்கில் மறுபடியும் உள்ளே அழைத்துப் போவார்கள். இப்படித்தான் இவர்களின் வாழ்க்கை போகிறது.

2010இல் பழைய விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே கூட்டுறவு வங்கியில் இரண்டு கோடி மதிப்பிலான நகைகள் திருடு போயின. எலவனாசூர் கோட்டையைச் சேர்ந்த இருளர் ஒருவரை நடுவீரப்பட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று, காவல்நிலைய சித்ரவதைச் செய்து கொலை செய்தனர். ஒரு விபத்தில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு உண்டாகி அவரால் இனி நடக்க முடியாது என மருத்துவர்கள் அளித்த மருத்துவச் சான்றிதழ் அவரது வீட்டாரிடம் உள்ளது. ஆனால், அவர் போலீஸாரிடம் தப்பித்து ஓடி மரத்தில் மோதி இறந்ததாகக் காவல்துறையில் கூறினார்கள். அந்த வங்கியில் வேலை செய்த காசாளரும் காவலாளியும் திட்டமிட்டு நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர் என்ற உண்மை கொஞ்சநாள் கழித்துதான் தெரியவந்தது. இறந்தவருக்கு மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. அவரது மனைவி இப்போதுவரை கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு இருளர் பழங்குடி எனச் சாதிச் சான்றிதழ் தரவில்லை. சாதி சான்றிதழ் கிடைத்திருந்தால் அவரது மகன் காவல்துறையில் பணிபுரிந்துகொண்டிருப்பார், வாழ்க்கையும் மாறியிருக்கும். எதுவுமே நடக்கவில்லை. அவரின் இறப்புக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4இன் கீழ் அந்தக் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம், அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருந்திருக்கும். இம்மாதிரியான குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் காவலர்கள் மீது அதிகபட்ச தண்டனைகள் கொடுத்தால்தான் காவல் நிலையச் சித்ரவதைகளும், அதனையொட்டிய கொலைகளும் குறைய வாய்ப்பிருக்கிறது.

SC/ST வழக்குப் பதிய பாதிக்கப்பட்டவரிடம் 2018இலிருந்து சாதிச் சான்றிதழ் கேட்பதில்லை. காவல் நிலையத்திலிருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரிடம் தொடர்புகொண்டு சாதியை உறுதி செய்துகொள்கிறார்கள். இழப்பீடு தருகையில் சாதிச் சான்றிதழ் கேட்பார்கள். SC/ST வழக்கு பதிய வைக்க ஒரு போரரட்டம் என்றால் இழப்பீடுக்கு இன்னொரு போராட்டம் வேண்டியதாய் உள்ளது. சாதிச் சான்றிதழ் இல்லாமல் இழப்பீடு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

2012இல் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வயலில் மின்சாரம் வைத்துக் கொலை செய்துவிடுகிறார். முழுக்கச் சாதிய வன்மத்தில் நடந்த கொலை அது. இதை வெறும் விபத்து வழக்காகப் பதிவு செய்தனர். பிரேதத்தைச் சாலையில் கிடத்தி மறியல் செய்து SC/ST வழக்கு போட வைத்தோம். அதிலும் சரியான பிரிவில் வழக்கு பதியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான இழப்பீடுகள் நியாயப்படி கிடைக்க வேண்டும் என்றுதான் SC/STயில் சரியான பிரிவைப் போடச் சொல்லிப் போராடுகிறோம். இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் சாதிச் சான்றிதழ் கேட்டார். கிராம நிர்வாக அலுவலரிடம் போனால் அவர் தாசில்தாரைப் பார்க்கச் சொன்னார். ‘இறந்தவர் புதிரை வண்ணார்தானா என ஆய்வு மேற்கொண்டு சான்றிதழ் தருகிறேன்’ எனச் சொல்லி, கடைசியில் ‘இறந்தவர் புதிரை வண்ணார் இல்லை’ என்று கூறி தாசில்தார் சாதிச் சான்றிதழ் தரவில்லை.

சாதிச் சான்றிதழுக்கு இணையத்தில் பதிவு செய்யும் முறை வந்திருக்கிறது. அதற்குத் தேவையான அடிப்படையான ஆவணங்கள் கூட இருளர், குறவர் மக்களிடம் இல்லை. தவிர, அதிகாரிகள் கைக்குத்தான் இறுதி முடிவும் போகிறது, நிராகரிப்பும் நடக்கிறது. பேராசிரியர் கல்யாணி அய்யா என்ன சொல்கிறாரென்றால், ‘ஒரு முகாம் நடத்தி அந்த மக்களிடம் என்ன சான்றிதழ்கள் இல்லையோ அவற்றை வழங்கலாம்.

பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் இவற்றை அந்த மக்களுக்குத் தெரியப்படுத்தலாம்’ என்கிறார். இருளர்களும் குறவர்களும் வசதியாக வாழ இதைக் கேட்கவில்லை. பிள்ளைகளின் படிப்புக்கும் எதிர்காலத்துக்கும்தான் சான்றிதழ்கள் கேட்கின்றனர். இருளர், குறவர் மக்களின் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்ற சாதிய மனநிலை சில அதிகாரிகளுக்கு இருக்கிறது. இடஒதுக்கீட்டுக்கு ஆசைப்பட்டுச் சில தலித் அல்லாதோர் ‘பட்டியல் சாதி’ எனச் சாதிச் சான்றிதழ்கள் வாங்கி வைத்திருக்கும் நிலையும் தமிழ்நாட்டில் இருக்கிறது. அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

2020இல் பதிவு செய்யப்பட்டு அந்த ஆண்டின் இறுதிவரை புலன்விசாரணை செய்யப்படாமல் இருந்த வன்கொடுமை வழக்குகள் 694 என NCRB அறிக்கையின் மூலம் தெரியவருகிறது. 2021இன் இறுதியிலோ 825 வழக்குகள் புலன்விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டில் கூடுதலாக வழக்குகள் விசாரணையின்றி நிலுவையில் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சுமார் 40 சதவீதம் வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல், விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருப்பதாக ழிசிஸிஙி அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன் 186 வழக்குகள் தவறான தகவல், போதுமான ஆதாரங்கள் திரட்ட முடியவில்லை எனக் காரணம் காட்டி காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன எனவும் தெரியவந்துள்ளது.

இதற்குப் பின்னுள்ள காரணங்களைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா?

சாதிய வன்கொடுமைகள் அதிகரிக்கச் சமூகத்தில் நிலவும் சாதிய வெறிதான் காரணம். இயல்பாகவே அதிகாரங்களின் பெரும்பான்மை மனநிலை தலித் மக்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. அடிப்படையான நீதி கிடைக்கவே பெரும் போராட்டமாக இருக்கிறது. SC/ST வன்கொடுமை வழக்கில் தலித்துகள் நீதியைப் பெறக்கூடாதென்று சில அதிகாரிகளும் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. சில தலித் அதிகாரிகளும் கூட.

சாதிய வன்கொடுமை வழக்கில் எஃப்.ஐ.ஆர் போட்டாலும் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சார்ஜ் சீட் போடாமலேயே வைத்திருப்பார்கள். எப்.ஐ.ஆர் போட்ட அறுபது நாளுக்குள் சார்ஜ் சீட் போட்டாக வேண்டும், அடுத்த 120 நாளுக்குள் வழக்கை முடிக்க வேண்டுமென்று சட்டம் சொல்கிறது. ஆனால், இங்கு அப்படிச் செய்வதில்லை. கேட்டால் Wound Certificate கிடைக்கவில்லை என்று சொல்வார்கள். ஏன் சார்ஜ் சீட் போடவில்லை என்பதற்கு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் எழுதிக்கொடுக்க வேண்டும். அதையும் செய்வதில்லை. சார்ஜ் சீட் போட்டாலும் நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் வைத்திருப்பார்கள். இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 307இன்படி கொலை முயற்சி எனத் தலித்துகள் மீது எதிர் வழக்கு போடுவார்கள். SC/ST வழக்கை உண்மைக்குப் புறம்பான வழக்காக மாற்றுவார்கள். கட்டப்பஞ்சாயத்துச் செய்து வழக்கை நீர்த்துப்போகச் செய்வார்கள், அதிகாரிகளும் கட்டப்பஞ்சாயத்தை ஊக்குவிப்பார்கள். எஃப்.ஐ.ஆர் போட்ட பிறகும் இப்படிச் செய்வார்கள். கோர்ட்டில் வழக்கில் நம்பர் போடமால் இருக்க ஆதிக்கச் சாதியினர் பணம் கொடுப்பார்கள். அதற்கும் நாம் அழுத்தம் தர வேண்டும். மருத்துவ அதிகாரி மாற்றலாகிப் போய்விடுவார். அதற்கும் சம்மன் அனுப்ப வேண்டும். அவர் வருவதற்கு இழுத்தடிப்பார். இப்படியாகத்தான் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

சாதிய வன்கொடுமை வழக்கில் ஆதாரம் இருக்க வேண்டிய அவசியம் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இல்லை. ஒரு தலித் ஏதோவொரு விதத்தில் ஒடுக்கப்படும்போது அதில் சாதியப் பாகுபாடு இருந்தே தீருகிறது. சாதிய வன்கொடுமை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருக்கும் மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலித்தாக இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், தலித் அதிகாரிதான் நியமிக்கப்படுவார். ஏனென்றால், விசாரணை அதிகாரி நேர்மையாகச் செயல்படாத பட்சத்தில் அவர் மீது SC/ST வழக்கு போட சட்டத்தில் இடமுள்ளது. அதற்கு இடம் தராத வகையில் அதிகாரிகள் மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவும், வழக்கின் வீரியத்தைக் குறைக்கவும், வழக்கு நீதிமன்றம் போவதைத் தாமதப்படுத்தவும் உயரதிகாரிகள் மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மாவட்ட விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிறது. அதற்கு மாவட்ட அளவில் ஆட்சியரும், மாநில அளவில் முதல்வரும் தலைவர்கள். மாவட்ட அளவிலான குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறையும், மாநில அளவிலான குழு ஆறு மாதத்திற்கு ஒருமுறையும் SC/ST வழக்குகளை ஆய்வு செய்ய வேண்டும். எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன, சார்ஜ் சீட் எத்தனைப் பதிவாகியுள்ளன, இழப்பீடுகள் எந்த அளவில் வழங்கப்பட்டுள்ளன என்பவற்றை விசாரிக்க வேண்டும். அதற்குண்டான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். இது முறையாகச் செயல்படுவதில்லை. காவல்துறையின் ஓர் அங்கமாக மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி பிரிவு இருக்கிறது. இதற்கு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்தான் பொறுப்பு. ஒரு சாதிய வன்கொடுமை நடந்துவிட்டால் அந்தப் பிரிவிலிருந்து சம்பவ இடத்திற்குப் போய் விசாரிப்பார்கள். அவர்கள் விசாரிக்கும் நபர் ஊராட்சி மன்றத் தலைவராகத்தான் இருப்பார். தமிழ்நாட்டில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெரும்பாலும் அப்பகுதியின் ஆதிக்கச் சாதியாகத்தான் இருப்பார்கள். அவர் எப்படி உண்மையைச் சொல்வார், சொந்தச் சாதிக்கு எப்படி எதிராக நிற்பார்!

சாதியவாதிகள், காவல்துறையால் நீங்கள் அச்சுறுத்தப்பட்டதுண்டா?

பின்தொடர்வார்கள், போனில் மிரட்டல்கள் வரும், பெண் என்பதால் மாண்பைச் சிதைக்கும்படி பேசுவார்கள். ‘வச்சுக்கிறேன்’ என்று அதிகாரிகளும் காவலர்களும் கூசாமல் பேசுவார்கள். பெண் என்பதாலும், அதிலும் தலித் என்பதும் தெரிந்து இப்படிப் பேசுவார்கள். ‘நீ பொம்பளையா இருக்குறதுனால உன்ன விட்டு வச்சுருக்கேன். இல்லேன்னா உன் ஷேப்பவே மாத்திருப்பேன். வேலூர் பக்கம் வருவேல்ல, பாத்துகிறேன் உன்ன’ என்று வழக்கொன்றில் ஒரு பெண் டி.எஸ்.பி என்னை மிரட்டினார். உளுந்தூர்பேட்டையில் நடந்த சாதிய மோதல் ஒன்றில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கலந்துகொண்டேன். பேச்சுவார்த்தையின் போக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத தோற்றம் உண்டானது, ‘சார் இந்த வழக்கு கோர்ட்டுல நடக்கட்டும். ஊர் ஒற்றுமையா இருக்குறதால நீங்க நடவடிக்கை எடுங்க. பாதிக்கப்பட்டவங்க கோர்ட்டுல வழக்கப் பாத்துக்கட்டும்’ என்று சொன்னேன். ‘நீ யாருடி’ன்னு டி.எஸ்.பி கூட்டத்துக்கு முன்பு என்னைத் திட்டினார்.

பாலியல் வல்லுறவுக்காளான ஒரு சிறுமியின் வழக்கு. இறுதி வரை சிறுமிக்கு உறுதுணையாக இருந்தேன். குற்றவாளிகளின் ஆட்கள் வீட்டுக்கு வந்து என்னை ஆபாசமாகத் திட்டி மிரட்டினார்கள். நான் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்தேன். செஞ்சி காவல் நிலையத்துக்குத் தகவல் சொன்னபிறகுதான் அவர்கள் கிளம்பினார்கள்.

‘பறப்பசங்களுக்கு வாதாட வந்திருக்கா’ என்று கோர்ட்டுக்குள் காதுபட அசிங்கமாகத் திட்டுவார்கள். அனைத்து ஊர்களிலும் சாதிய வழக்கறிஞர் குழு இருக்கும். அப்படியான குழுவிலிருந்து வழக்கறிஞர் ஒருவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் பேசினார், ‘எதுனா SC/ST கேசு போட்ருவீங்கன்னு உங்கக்கிட்ட பேசவே பயமா இருக்கு மேடம்’ என்றார். ‘தப்பு பண்ணாதாங்க பயப்படணும்’ என்று சொன்னேன். பிறகு போனில் பேசினார், ‘எனக்கு ஆண் வாரிசு இல்லை, நீங்க வாறீங்களா’ எனக் கேட்டார். அவர் அதை ஒலிப்பதிவு செய்வது தெரிந்தது. அவரைச் சுற்றி சாதிய வழக்கறிஞர் குழு இருப்பதையும் உணர முடிந்தது. ‘வாரேன், உங்க மனைவிய என்கிட்டே பேசச் சொல்லுங்க’ என்று பொறுமையாகப் பேசினேன். எங்களது வழக்கறிஞர் குழுவும் நானும் அடுத்தநாள் அவரை நீதிமன்றத்தில் வைத்துக் கண்டித்தோம். அதன்பிறகு என்னைப் பார்த்தாலே ஒதுங்கி ஓடிவிடுவார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே நம்மைச் சித்திரிப்பார்கள், பொய் வழக்குப் போடுவார்கள். அப்படியொரு முறை எங்கள் அலுவலகத்துக்கு எனக்கு எதிராகக் கடிதம் ஒன்றை அனுப்பினார்கள். அதை விசாரித்ததில் உண்மை தெரிந்துவிட்டது. வீரளூர் கலவரத்தில் சாதியவாதிகளும் காவல்துறையும் சேர்ந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தரப்பை எனக்கு எதிராகத் திருப்பினர். அத்தரப்பு எனக்கு எதிராக மாநில, தேசிய தலித் ஆணையத்துக்குப் புகார் எழுதியது. வழக்கையும் புகாரையும் விசாரித்த ஆணையம் அந்தத் தரப்பினரின் புகார்தாரரை அழைத்து, ‘இதெல்லாம் காவல்துறை செய்யக்கூடிய உத்திகள். எதிரியிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு பிரிவினை செய்வார்கள். சாட்சிகளைக் கலைப்பார்கள். படித்த பையன்தானே நீ, உனக்கு அறிவில்லையா. கேசை வாபஸ் வாங்கு’ என்று கண்டித்தார்கள். இது பெரிய போராட்டக் களம்தான். அனைத்தையும் எதிர்கொண்டு போக வேண்டும்.

சாதிய வன்கொடுமைகளைப் பொதுச் சமூகமும் வெகுஜன ஊடகங்களும் எப்படிப் பார்க்கின்றன?

பொதுச் சமூகம் மற்ற விஷயங்களுக்குக் கொடுக்கும் கவனமும், பெருந்திரள் கோபமும், கேள்விகளும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இருப்பதில்லை. சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான உரையாடல்களை நிகழ்த்தினாலும் ‘எப்பப் பாரு இவுங்களுக்கு இதுதான் வேல. சாதியப் பத்திப் பேசிட்டே இருப்பாங்க’ என்று கடந்துவிடுவார்கள்.

எத்தனை வெகுஜன ஊடகங்களில் சாதிய வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் வருகின்றன. பரபரப்பாய்ப் பேசப்பட்டால் வரும். ஆனால், உள்ளூர் அளவில் தினமும் அவ்வளவு சாதிய வன்கொடுமைகள் நடக்கின்றன. வெகுசில வெகுஜன ஊடகங்கள், சில மாற்று ஊடகங்கள் இவற்றை வெளிக்கொண்டுவருகின்றன. கள்ளக்குறிச்சியில் ஊடகவியலாளர் ஒருவர் இலவச பஸ் பாஸுக்கு விண்ணப்பிக்கிறார். மக்கள் தொடர்பு அதிகாரி சாதிய ரீதியாக அவரை வன்கொடுமை செய்து பஸ் பாஸுக்கு அனுமதி தரவில்லை. அவர் அந்த அதிகாரி மீது SC/ST வழக்கில் அனைத்து ஆணையத்துக்கும் புகார் அனுப்பியும் இப்போதுவரை ஒரு நடவடிக்கையும் இல்லை. பத்திரிகையாளருக்கே இந்த நிலைமை.

சாத்தான்குளம் லாக்கப் மரணம் ஊடகத்தில் பேசப்பட்ட அளவுக்கு, தலைநகர் சென்னையில் குதிரை ஓட்டும் வாலிபரைக் காவல் நிலையச் சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவம் எத்தனை வெகுஜன ஊடகத்தில் வந்தது? இப்போதுவரை அதை SC/ST வழக்காக மாற்றவில்லை. தலித் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு செய்திகளைத் தேசிய அளவில் கொண்டு போக ஏன் வெகுஜன ஊடகங்கள் பாரபட்சம் காட்டுகின்றன.

விழுப்புரத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் இது. இளைஞர் ஒருவர் ஏதோவொரு காரணத்திற்காகத் தற்கொலை செய்துகொள்கிறார். அது அப்பகுதியில் சர்ச்சையாகிறது. அதே நாளில் ஒரு தலித் திருநங்கையும் வேறு காரணத்திற்குத் தற்கொலைக்கு முயல்கிறார். இளைஞன் இறக்க திருநங்கைதான் காரணம் என்று ஊடகங்கள் தம் போக்கில் ஒரு செய்தியை வெளியிட்டன. ‘எம் பொண்ணுக்கும் அந்தப் பையன் சாவுக்கும் சம்பந்தம் இல்ல. போலீஸ் வேற எங்களத் தொல்ல பண்றாங்க. பொண்ணப் பத்தி தப்புத் தப்பாச் செய்தி போடுறீங்க’ எனத் திருநங்கையின் அம்மா ஊடகத்தாரிடம் அழுது பேசினார். ‘எஸ்.பி சொன்ன விஷயத்தை நாங்க போடுறோம் அவ்ளோதான்’ என அவர்கள் சொன்னார்கள். ‘எஸ்.பி சொன்னா போடுறீங்க, நாங்க சொன்னா போடுவீங்களா’ என அந்த அம்மா அழுதபடிக் கேட்டார். ‘நீங்க மறுப்புச் செய்தி கொடுங்க போடுறோம்’ என அவர்கள் சொன்னார்கள். அவர் கொடுத்த மறுப்புச் செய்தி இப்போதுவரை எந்த ஊடகத்திலும் வரவில்லை.

இந்தப் பணிகளை உங்கள் வீட்டில், ஊரில், நண்பர்கள் எப்படியாகப் பார்க்கின்றனர்?

வீட்டில் எதுவும் சொல்வதில்லை. ஊரில் என்னிடம் நின்று பேச மாட்டார்கள், சில நண்பர்கள் கூட. சாதிய வன்கொடுமைகள் அதிகமிருக்கும் பகுதியாக வட மாவட்டம் மீது ஒரு பார்வை இருக்கிறதே. ஏதேனுமொரு வடிவில் தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் சாதிய வன்கொடுமைகள் நடந்தபடிதான் உள்ளன. அவற்றின் அளவுகளைப் பொறுத்து அவை வெளியில் தெரிகின்றன.

சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இக்காலகட்டத்தில் எப்படியான சமூக, அரசியல் அமைப்புகள் உருவாக வேண்டுமென நினைக்கிறீர்கள்?

இப்போதெல்லாம் யாரும் சாதி பார்ப்பதில்லை என்று சொல்வதெல்லாம் பொய். நாங்கள் அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக, பங்காளிகளாக, தாய் பிள்ளைகளாகப் பழகுகிறோம், ஒன்றாகச் சாப்பிடுகிறோம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு மட்டுமே. தங்கள் வீட்டிலிருந்து ஒரு பொண்ணோ, பையனோ தலித் ஒருவரைக் காதலிக்கிறேன், திருமணம் செய்யப் போகிறேன் என்று சொல்லும்போது பார்க்கலாம், ஒன்றுக்குள் ஒன்றாகப் பழகுபவர்களின் சாதியப் பற்றை. மதம் மாறியும் சாதியைப் பிடித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்க்கலாம். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் நடந்த மலக்குழி மரணங்களைப் பற்றி உண்மை கண்டறியும் அறிக்கை தயார் செய்தேன். அங்கு யாராவது வேலை கேட்டுப் போகையில் ‘இந்தக் காலனியிலிருந்து வருகிறேன்’ என்று சொன்னால் ‘க்ளீனிங் வேலைதான் இருக்கு செய்றீங்களா’ எனக் கேட்கிறார்கள். இப்படியான சூழல்தான் நிலவுகிறது. சாதி இல்லாத கிராமத்துக்குப் பத்து இலட்சம் தருவதாக முதலமைச்சர் சொல்லியிருக்கார். எத்தனைக் கிராமங்களுக்குப் பத்து இலட்சம் கொடுத்திருக்கிறார். தனிமனித உளவியலில் சாதியொழிப்பு, சமத்துவம் வந்தால்தான் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான சமூக, அரசியல் அமைப்புகள் சாத்தியம்.

சாதிய வன்கொடுமைகளும் அதன் களங்களும் நிச்சயம் உங்களின் மனநிலையைப் பாதிக்கும். எதைப் பிடிமானமாகக் கொண்டு மனநிலையைச் சமன் செய்துகொள்கிறீர்கள்?

ஏன் இந்த வேலைக்கு வந்தோம் என்று அடிக்கடி மனச்சோர்வு உண்டாகும். இன்னொருபுறம் யாருக்கு வேலை செய்கிறோமோ அவர்களே நம்மைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். சாதியவாதிகளின் பேச்சைக் கேட்டும், பணத்தை வாங்கிக்கொண்டும் நமக்கு எதிராகத் திரும்புவார்கள். தகவல்களைப் பெறுவதில் சிக்கல்கள் உண்டாக்குவார்கள், வெளிப்படையாக எதிர்ப்பார்கள். அப்போதெல்லாம் மிகவும் மனக்கஷ்டம் உண்டாகும். அவர்களின் அறியாமையை நினைத்து என்னை நானே தேற்றிக்கொண்டு பயணத்தை ஆரம்பிப்பேன். ஒருசிலருக்காக நான் பின்வாங்கினால், உடைந்து உட்கார்ந்தால் நிறைய பேர் பாதிக்கப்படுவார்கள்.

ஒரு தலித் பெண் மீதான வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மூன்று வருடம் சிறை தண்டனை கிடைத்தது. ‘ஊர்ல கவுரவமா வாழுறேன்மா’ என எப்போது என்னைப் பார்த்தாலும் அந்தப் பெண் சொல்வார். இப்படி முன் பின் தெரியாத எத்தனையோ பேரின் வார்த்தைகளை, அவர்களது வீட்டு நல்லது கெட்டதுகளுக்கு என்னை அழைக்கும் அன்பினை, என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிகையினையே பிடிமானமாகவும் உந்துசக்தியாகவும் எடுத்துக்கொள்வேன்.

அடுத்தகட்ட நகர்வாக ஏதும் திட்டம் உள்ளதா?

SASY அமைப்பு எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. சாதிய வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களுக்குச் சட்ட ரீதியாக உதவி அவர்கள் மனித மாண்போடு வாழும் வகையில் எனது எதிர்கால பயணம் இருக்கும். அந்தவகையில் ‘நீதியின் குரல்’ என்ற அமைப்பைத் தன்னிச்சையாகத் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்.

புகைப்படங்கள் : R.ஸ்ரீராம்

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger
error: Content is protected !!