The Caste Con Census

கிருத்திகா சீனிவாசன்

னந்த் டெல்டும்டேஎழுதிய ‘தி காஸ்ட் கான் சென்சஸ்’ (The Caste Con Census (2025), Navayana) நவயானா வெளியீடு. சாதிவாரிக் கணக்கெடுப்பு பற்றி கடந்த 2025 மே மாதம் தி பிரண்ட்லைன் ஆங்கில இதழில் ஆனந்த் டெல்டும்டே அவர்கள் எழுதிய கட்டுரையின் நீண்ட ஆய்வு வடிவமே இந்தப் புத்தகம்.

இந்தியாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து எழுந்துள்ள விவாதங்களை, இந்நூல் சமூகவியல் ரீதியாகவும் விமர்சனப் பார்வையுடனும் ஆய்வு செய்கிறது. இத்தகைய கணக்கெடுப்புகள் சமூகநீதி எனும் உண்மையான நோக்கத்திலிருந்து விலகி, சாதியப் பிளவுகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்பதையும்; சாதிய அடையாளங்களைப் படிப்படியாக வகைப்படுத்தி அவற்றை எப்படிக் கூர்மையாக்குகின்றன என்பதையும் இந்நூல் விரிவாக விளக்குகிறது

இன்று நிலவும் சாதியக் கட்டமைப்பு எவ்வாறு உருவானது என்பதில் தொடங்கி, பழங்குடித்தன்மையிலிருந்து சாதியச் சமூகங்கள் கிளைத்த விதம்; அதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு படையெடுப்புகள்; அதிகாரத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வோர் இனக்குழுவும் தங்கள் இருப்பைத் தகவமைத்துக்கொண்ட முறைகள் எனச் சாதிய வரலாற்றைத் டெல்டும்டே மிக ஆழமாக விவரிக்கிறார்.சுதந்திரத்திற்குப் பிந்தைய 78 ஆண்டுகால இந்தியக் குடியரசு, விளிம்புநிலை மக்களைக் கணக்கெடுப்புகளின் மூலம் எவ்வாறு ஏமாற்றியுள்ளது என்பதையும், அவர்களின் சுயமரியாதையை வெறும் நலத்திட்டங்களுக்குக் கீழ் அடகு வைத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இவ்வரலாற்றின் அடிப்படையில், சாதிய அடையாளங்களையும் சமூக அநீதிகளையும் நிலைநிறுத்தச் செய்யப்படும் ஒரு ‘வஞ்சகம்’ (con) தான் இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்று வாதிடுகிறார். இது சமூக முன்னேற்றத்தை முன்னெடுப்பதை விட, தேர்தல் அரசியலுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அவர் இந்நூலில் குறிப்பிடுகிறார்.

கடந்த பத்தாண்டுகளாகவே ஆளும் பாஜக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பைத் திட்டவட்டமாக நிராகரித்து வந்தது. 2024 மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, ‘என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள் ஆகிய நான்கு பிரிவினர்தான் சாதிகள்’ என்று குறிப்பிட்டார். ஆனால், 2025 பீகார் தேர்தலின்போது இந்தக் கொள்கை முடிவில் அதிரடி மாற்றம் செய்து, ‘வருகின்ற 2026-27 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்’ என அறிவித்தார். அடடே! ஆளும் அரசுக்குத் திடீரெனச் சமூக அக்கறை பிறந்துவிட்டதோ என நாம் எண்ணும் முன், இதனைச் சற்று நிதானமாகக் கூராய்வு செய்ய வேண்டும் என்கிறார் ஆனந்த் டெல்டும்டே. சாதிவாரிக் கணக்கெடுப்பின் தரவுகளைக் கொண்டு நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து, அவர்களுக்கேற்ற நலத்திட்டங்களை அறிவிப்பதன் மூலம் பெரும்பான்மை வாக்குகளை அறுவடை செய்யவே இத்தகைய அதிரடி வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஈராயிரம் ஆண்டுகளாக மெல்லிய வேறுபாடுகளோடும், மிகுந்த சமரசத்தோடும் ஒரு குழுவாக வாழ்ந்து வந்த பழங்குடிச் சமூகக் கட்டமைப்பை, ஆரியர்கள் தொடங்கி அடுத்தடுத்து நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகள் சிதைத்து இறுக்கமாக்கின. குறிப்பாக, அறிவியலில் சிறந்து விளங்கிய ஆங்கிலேயர்கள் இயற்கைக் கூறுகளைப் பட்டியலிட்டு, வகைப்படுத்துவதில் மிகுந்த வல்லமை கொண்டிருந்தார்கள். அதே பாணியில் அவர்கள் தங்கள் ஆட்சியைத் தக்கவைக்க ஏதுவாக, இந்தியாவில் ஏற்கெனவே நிலவி வந்த சாதியப் பிரிவுகளைப் பல்வேறு கூறுகளின் அடிப்படையில் வகைப்படுத்திப் பிரித்தனர். குறிப்பாக, 1857 சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு இந்தியர்கள் மீண்டும் ஒன்றிணையாமல் இருப்பதை உறுதி செய்ய, பிரிட்டிஷ் அரசு சாதியை, பெரும் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டது என்று ஆனந்த் டெல்டும்டே குறிப்பிடுகிறார்.

காலனிய ஆதிக்கத்தைச் செலுத்துவதற்காகச் சாதிவாரிக் கணக்கெடுப்பை முதலில் அறிமுகப்படுத்திய பிரிட்டிஷ் அரசு, அதனை ஒரு நடுநிலையான நிர்வாகச் செயலாகவே சித்திரித்தது. ஆனால், உண்மையில் அக்கணக்கெடுப்பு வெறும் தரவுகளைச் சேகரிக்கும் பணியல்ல; அது இந்தியச் சமூகத்தைப் பிளவுபடுத்தவும், காலனித்துவ ஆட்சிக்கு எதிரான மக்கள் திரள் அணிதிரட்டலைத் தடுக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு கூர்மையான அரசியல் கருவியாகும். இருந்தபோதிலும், பிற்காலத்தில் உருவான சாதி அடிப்படையிலான இயக்கங்களுக்கும், சமூக நீதிக்கான கோரிக்கைகளுக்கும் அதுவே அடிப்படையாக அமைந்தது. அதே நேரத்தில், அதுவரை நெகிழ்வாக இருந்த சமூகப் பிரிவுகளையும் அடையாளங்களையும் இக்கணக்கெடுப்பு முறை நிலைக்கச் செய்தது. இவ்வாறாக, சாதிவாரிக் கணக்கெடுப்புத் திட்டம் என்பது ஒரு காலனித்துவ ஆயுதமாகவே செயல்பட்டது. அது சாதியை ஒரு வாழ்வியல் முறை அல்லது இயங்குநிலை அடையாளத்திலிருந்து, ஒரு நிலையான ‘நிர்வாகப் பிரிவாக’ (Administrative Category) மாற்றியது. இதன் விளைவாக, ஒருகாலத்தில் மக்கள் சகஜமாகப் புழங்க வழிவகுத்த சமூகக் கட்டமைப்பு, இன்று அரசியல் மற்றும் சமூகப் பிரிவினைக்கான கருவியாக மாற்றப்பட்டுவிட்டது என்கிறார் ஆனந்த்.

மேலும், பாபாசாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு லட்சியத்தைச் சிதைக்கும் வேலைதான் இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பு என அவர் எச்சரிக்கிறார். ஏனெனில், இக்கணக்கெடுப்பின் மூலம் சாதியானது சமூகத்தின் மாற்ற முடியாத அங்கமாக நிலைநிறுத்தப்படும். இதனால் சாதி சார்ந்த அடையாளங்கள் மற்றும் சலுகைகள் குறித்த விவாதங்களே மேலோங்குமே தவிர, சாதியை ஒழிப்பதற்கான முயற்சியில் எவருக்கும் ஆர்வம் இல்லாத நிலை ஏற்படும். காலப்போக்கில், இந்த நிலையான கட்டமைப்பிற்குள் யாரெல்லாம் புதிதாகத் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள் அல்லது யார் அணி மாறுகிறார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே சமூகம் இயங்கும்; எந்நாளும் இதிலிருந்து வெளியேற முடியாத ஒரு சுழற்சிக்குள் நாம் சிக்கிக்கொள்வோம் என்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் மிகமுக்கியமான புள்ளிவிவரங்களையும் தரவுகளையும் ஒன்றிய பாஜக அரசு இதுவரை எவ்வாறெல்லாம் பிழையாகவும், உண்மைக்குப் புறம்பாகவும் வெளியிட்டுள்ளது என்பதை ஆனந்த் டெல்டும்டே விரிவாக விளக்குகிறார். அதே தன்மையில்தான் இவர்களின் சாதிவாரிக் கணக்கெடுப்பும் அமையும் என்பதால், அதனை எவ்விதத்திலும் நம்ப இயலாது எனவும் வாதிடுகிறார்.

இன்று எல்லாச் சாதிகளிலும் பரவியுள்ள விளிம்புநிலை மக்களின் உண்மையான முன்னேற்றத்திற்குத் தேவையான தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார உத்தரவாதங்களை எந்த ஓர் அரசியல் கட்சியும் நேர்மையுடன் கோருவதில்லை. மாறாக, சமூகநீதி என்னும் உன்னதமான கோட்பாட்டைப் வெறும் எண்களாகச் சுருக்கி, சாதிவாரிக் கணக்கை ஒரு ‘ஆடுபுலி ஆட்டம்’ போன்ற அரசியல் விளையாட்டாக மாற்றியுள்ளனர் என அவர் குற்றம் சாட்டுகிறார்.

இவ்வாறாக, பல்வேறு சமூக ஆய்வுகள் மற்றும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து சாதிவாரிக் கணக்கெடுப்புத் திட்டத்தின் மீது மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் டெல்டும்டே, இதற்கான ஆக்கப்பூர்வமான மாற்று வழிகளையும் முன்மொழிகிறார்.

நம் நாட்டின் சாதியச் சமூகத்தை மாற்ற வேண்டுமென்றால், இங்கு வேரூன்றியுள்ள பொதுவான சமூகக் கட்டமைப்பை உடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இதற்காக மூன்று முக்கிய அம்சங்களை அவர் முன்வைக்கிறார்: முதலாவதாக, அனைத்துக் குழந்தைகளுக்கும் எவ்விதப் பாகுபாடுமின்றிச் சமமான கல்வி வழங்கும் கட்டணமில்லா உயர்தரப் பொதுப் பள்ளிகள்; இரண்டாவதாக, அனைவரையும் கண்ணியமாக நடத்தும், எளிதில் அணுகக்கூடிய பொதுச் சுகாதார அமைப்பு; இறுதியாக, வெறும் தற்காலிக நலத்திட்ட உதவிகளாக இல்லாமல், நிலம் மற்றும் வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் மூலமான நிரந்தர வாழ்வாதாரப் பாதுகாப்பு.

இத்தகைய அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல், வெறும் எண்களின் தொகுப்பாக மட்டுமே சாதிவாரிக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தினால், அது ஒரு கொள்கை ரீதியான தீர்வாக அமையாமல் வெறும் தேர்தல் அரசியல் கருவியாகவே எஞ்சும். “விரைவில் நாம் சமூக-பொருளாதார ஜனநாயகத்தை அடையாவிட்டால், அரசமைப்புச் சட்டத்தால் கிடைத்த அரசியல் ஜனநாயகத்தை நீடிக்கச் செய்ய இயலாது” என்ற அம்பேத்கரின் எச்சரிக்கையை இங்கு நாம் நினைவு கூர வேண்டும். இன்றைய அடையாள அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டதாகக் கூறும் டெல்டும்டே, எத்தகைய கணக்கெடுப்புகள் நடந்தாலும் நமது இறுதி நோக்கம் ‘சாதி ஒழிப்பை’ நிகழ்த்துவதிலேயே உறுதியாக இருக்க வேண்டும் என்கிறார்.

] krithikasrinivasann@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger