அணைத்துத் தழுவிக் கெஞ்சிய படி
மிக இறுக்கமாய்ச் சூழ்ந்திருக்கும்
அத்தனை திணிப்புகளையும் பொறுத்திருந்தோம்
ஆழ்ந்த உறக்கம் அலைக்கழிக்கப்பட்ட நான்காம்சாம வேளையிலும்
வலிக்க வலிக்கக் கூறுபோட்டுக் காயங்களுக்கு மருந்திட்டோம்
பால்நிலை வன்முறை
பலவந்தமாய் அரங்கேறிய அத்தனை மேடைகளிலும்
மௌனத்தை மட்டுமே பரிசளித்தோம்
எங்கள் வெளி என்பது
உங்கள் இருப்பின் வசதிக்கேற்பவே…
நீங்கள் வாழ்வளித்ததாய்ச் சொல்லப்படும் அத்தனையிலும்
ஒற்றை யோனி என்பதே என் குறியீடானால்
நம்ப வைக்கப்பட்ட அத்தனையிலும்
பற்றி எரியட்டும்
உங்கள் பரிசுத்தங்கள்..!